வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (17/04/2018)

கடைசி தொடர்பு:07:07 (17/04/2018)

பேராசிரியர் விவகாரத்தில் ஆளுநரை திரும்பப் பெற சி.பி.எம் வலியுறுத்தல்!

பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில் உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் விசாரணை வேண்டும், தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டுமென்று சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  வலியுறுத்தியுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்

 

அவர் விடுத்துள்ள அறிக்கையில், ``அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி மாணவிகளுடன் பேசிய ஒலிக் கோப்பு கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆளுநரை அருகிலிருந்து வீடியோ எடுத்தது, துணை வேந்தர் நியமனங்கள் பற்றிய பேச்சு, மாணவியர் மறுத்தும், நிதானமாக யோசித்துச் சொல்லுங்கள் என்கிற வற்புறுத்தல், வங்கிக் கணக்கில்  பணம்  என்கிற ஆசைவார்த்தை, இதுபோன்ற பாலியல் நடவடிக்கைகளுக்குக் கல்லூரி மாணவியரிடம் வலைவிரிக்கும் வேலையை நிர்மலாதேவி போல பலரும் செய்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இது பெரும் கிரிமினல் வலைப்பின்னலாகத் தெரிகிறது. இதில் நிர்மலாதேவி கருவியாக செயல்பட்டிருக்கிறார். இதன் பின்னணியில் அரசியல், அதிகார செல்வாக்கு உள்ளவர்கள் இருக்கலாம். தமிழக ஆளுநர் தனது நியமனங்களில் நெறிமுறைகளை மீறிச் செயல்பட்டதையும் சமீபத்தில் பார்க்க முடிந்தது. தமிழக அரசு உடனடியாக நிர்மலாதேவி மீது வழக்கு பதிவு செய்து, விசாரிக்க வேண்டும். ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்ட நியமனங்கள், இதற்குப்பின் உள்ள சமூக விரோதக் கும்பல், இந்த முறைகேடுகளில் உயர்கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளின் தொடர்புகள் அனைத்தும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும்.

கல்வி நிலையங்களில் நடைபெறும் இத்தகைய கொடுமைகள் குறித்து  சென்னை உயர் நீதிமன்றம், தன் வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில்  விசாரணை நடைபெற வேண்டும்.

இத்தகைய விசாரணை முறையாக நடைபெற,  சந்தேகத்துக்கு ஆளாகியுள்ள தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவரால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களையும்,  உயர்கல்வித்துறை, பல்கலைக்கழக உயர் அதிகாரிகளையும் விசாரணை முடியும்வரை பணியிலிருந்து விலக்கிவைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க