`ஸ்டெர்லைட் பிரச்னையில் முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்’ - அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்

``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து, முதல்வர் பரிசீலித்து விரைவில் நல்ல முடிவு எடுப்பார்” என தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ

 “தனது வீரவாளை உருவி நான் உயிரோடு இருக்கும்வரை பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைத் தகர்க்கவோ, எதிரிகளை உள்ளே விடவோ ஒரு போதும் விடமாட்டேன்” என்று தனது வாளின்மீது சத்தியம்செய்து, வெள்ளையரை வீழ்த்த தற்கொலைப் படையாக மாறி, வெடி மருந்துக்கிடங்கைத் தகர்த்த வீரத் தியாகி, சுதந்திரப்போராட்ட வீரர், வீரன் சுந்தரலிங்கத்தின் 248-வது பிறந்தநாள் விழா, தூத்துக்குடி மாவட்டம் கவர்னகிரியில் அமைந்துள்ள வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் நடைபெற்றது.  

மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற  இவ்விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சுந்தரலிங்கனாரின் சிலைக்கு மாலை அணிவித்தார். விழாவில் வீரன் சுந்தரலிங்கத்தின் வாரிசுகளைக் கௌரவித்து, வருவாய்த்துறை, மகளிர் திட்டம், சமூக நலத்துறை ஆகிய துறைகளின் கீழ் 96 பேருக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், `காவிரிப் பிரச்னையில் அரசியலை நீக்கினாலே எல்லாம் சரியாகிவிடும். காவிரி நீரை வைத்து முன்பு விவசாயிகள் வாழ்ந்துவந்தார்கள். இப்போது, அரசியல்வாதிகள் அதில்தான் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள்' என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியிருப்பதுகுறித்து கேட்டதற்கு, `பிரகாஷ் ராஜ் கருத்து தவறானது, காவிரிப் பிரச்னை என்பது தமிழர்களின் உணர்வுபூர்வ பிரச்னை.  இப்பிரச்னைக்காகப் போராட்டம் நடத்தும் அனைத்து மக்களுக்கும் ஆதரவாக மாநில அரசு செயல்படுகிறது'என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ``ஸ்டெர்லைட் ஆலைகுறித்து தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அ.தி.மு.க அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  கூறியுள்ளார். ஆனால், அ.தி.மு.க அரசு கடந்த 2013-ல் ஆட்சியில் இருக்கும்போதுதான்  ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அதை, மேல்முறையீடுசெய்து பசுமைத் தீர்ப்பாயத்துக்கு உச்ச நீதிமன்றம்மூலம் உத்தரவைப் பெற்று அரசு விதித்த உத்தரவுக்குத் தடையைப் பெற்று ஆலை இயக்கப்பட்ட விவரமும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்குத் தெரியும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து, முதல்வர் பரிசீலித்து விரைவில் நல்ல முடிவு எடுப்பார்” என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!