பாதி கட்டணம் மட்டுமே வசூலிக்க சுங்கச்சாவடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!

toll gate

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், விருதுநகரைச் சேர்ந்த மணிமாறன் மனு ஒன்றை தாக்கல்செய்திருந்தார்.
அந்த மனுவில், 'மதுரையிலிருந்து விருதுநகர் செல்லும் சாலையில், கப்பலூர் சுங்கக்கட்டண மையம் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 7-ஐ பயன்படுத்தும் வாகனங்களில் இந்த மையம் கட்டணம் வசூலிக்கிறது. சமயநல்லூர் முதல் விருதுநகர் வரையுள்ள சாலைகள், இந்த டோல் மையத்தின் பராமரிப்பிலேயே உள்ளன. இந்தச் சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படாமல், குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. இதனால், அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. சாலை சீரமைக்க டெண்டர் விட்டிருப்பதாகவும், டெண்டர் இறுதி செய்யப்பட்டதும் சீரமைப்புப் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. சாலை சரியாக இல்லாவிட்டால், சட்டப்படி குறைவாகவே டோல் கட்டணம் வசூலிக்க வேண்டும். கப்பலூர் சுங்கச்சாவடி மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படாத நிலையில், முழுக் கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால், கப்பலூர் சுங்கச்
சாவடியின் கீழ் வரும் சாலைகளை முறையாக சீரமைக்க உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறியிருந்தார். 

இந்த வழக்கு, நேற்று நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,  நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட   வழக்கறிஞர் ஆணையர் அறிக்கை தாக்கல்செய்தார். அதில், நீதிமன்ற உத்தரவுப்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் பாதி கட்டணம்தான் வசூல் செய்யப்படுகிறது. புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் முழுமையாக புதிய சாலை அமைக்காமல், ஆங்காங்கே பராமரிப்புப் பணிகள் மட்டும் மேற்கொள்கின்றனர் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நீதிபதிகள், பழுதடைந்த 18 கி.மீ சாலையின் தற்போதைய நிலைகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்யவும், அதுவரை கப்பலூர் டோல்கேட்டில் 50 சதவிகித கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!