வெளியிடப்பட்ட நேரம்: 10:03 (17/04/2018)

கடைசி தொடர்பு:10:27 (17/04/2018)

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவது ஏன்? ஓர் அலசல்! #GovtSchool

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவது ஏன்? ஓர் அலசல்! #GovtSchool

அரசுப் பள்ளி

மாணவர்களுக்குச் சத்துணவு, சீருடை, காலணி, மிதிவண்டி... உள்ளிட்ட பல விலையில்லாப் பொருள்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினியும் வழங்கப்படுகிறது. கல்விக் கட்டணமும் கிடையாது. இத்தனை சலுகைகள் இருந்தும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. சமீபத்தில், கல்வித் துறை தெரிவித்திருக்கும் ஓர் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த இரண்டு வருடத்தில், அரசுப் பள்ளிகளிலிருந்து 1 லட்சத்து 40,000 மாணவர்கள் வெளியேறியுள்ளனர். ஏன் இந்த நிலை? அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவதற்கான காரணங்கள் என்ன? இதுகுறித்து ஆசிரியர்களிடம் பேசினோம். 

க.சரவணன், (தலைமை ஆசிரியர், டாக்டர் திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை): 

''அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு மூன்று காரணங்களை முதன்மையாகச் சொல்லலாம். தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளின் கட்டடம், மைதானம், கழிவறை, ஆய்வுக்கூடம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் சிறப்பாகவே இருந்தாலும், அவற்றை சுகாதாரமாகப் பராமரிப்பதில் தொடர் கண்காணிப்பு இல்லை. ஆள்களை நியமிப்பதிலும் முழுமையை இல்லை. இது, முதல் காரணம். இதனால், அவற்றின் முழு பயன் மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. இரண்டாவது காரணம், கலை சார்ந்து கற்பிக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறை. நகரின் மையத்தில் ஓர் அரசுப் பள்ளி இருக்கும். மிகப்பெரிய விளையாட்டு மைதானமும் இருக்கும். ஆனால், உடற்கல்வி ஆசிரியர் பணி நிரப்பப்படாமல் இருக்கும். இதனைச் சரிசெய்வது மிகவும் முக்கியமானது. மூன்றாவது காரணம், பெற்றோர், ஆசிரியர், மாணவர் மூவருக்குமான உறவுச் சங்கிலி இல்லை. தனியார் பள்ளிகளில் அடிக்கடி பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புகள் நடத்தப்பட்டு, மாணவர் குறித்த செய்திகளை அவ்வப்போது பகிர்ந்துகொள்கின்றனர். அதுபோன்ற சந்திப்புகள், அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் நடப்பதில்லை. (விதிவிலக்காக சில பள்ளிகளில் நடத்தப்படலாம்) பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு என்பது, மாணவரின் கல்வி பற்றிய தகவல் பரிமாற்றமாக மட்டுமின்றி, அந்தப் பள்ளியைக் குறித்த உரையாடலாகவும் மாறும். அப்படி மாறும்பட்சத்தில், வளர்ச்சி சார்ந்த செயல்பாட்டை நோக்கி பள்ளியும் நகரும். இவை முறையாக நடைபெறும்பட்சத்தில், பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் எண்ணம் பெற்றோருக்கு உண்டாகும். எனவே, இவற்றைச் சரிசெய்ய வேண்டும்.''

அரசுப் பள்ளி

நா.கிருஷ்ணவேணி, (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நல்லம்பாக்கம்): 

ஒரு பள்ளியில் மாணவரைச் சேர்க்கும் முடிவை, அந்த மாணவரின் பெற்றோர் எடுத்தாலும், சமூகச் சூழலும் அந்த முடிவை எடுக்கவைக்கிறது. மிக எளியப் பொருளாதார குடும்பத்தில் வசிப்போரும், தம் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்கவே நினைக்கின்றனர். தனியார் பள்ளியில் தன் பிள்ளை படிப்பது சமூக அந்தஸ்து என்பது அவர்களின் எண்ணமாக இருக்கிறது. எங்கள் பகுதியில் பார்த்தவரை, ஆங்கிலம் படிப்பதற்கு என்று மட்டுமின்றி, கெளரவத்துக்காகத் தனியார் பள்ளியை நோக்கிச் செல்லும் பெற்றோர் எண்ணிக்கையே அதிகம். அது சரியானது இல்லை என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்து, தற்போதைய குடும்பங்கள் இரண்டு குழந்தைகள் போதும் என்கிற திட்டமிடலுக்கு வந்துவிட்டனர். எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் குடும்பங்களில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்தாம் இருக்கின்றன. (சில குடும்பங்கள் விதிவிலக்கு) இதனாலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையலாம் என்று நினைக்கிறேன்.''

ஆசிரியர்கள் சொல்லும் காரணங்களைக் கடந்தும், சில இருக்கின்றன எனக் கல்வி செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர். அரசுப் பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவர்களில் சிலருக்கு தேர்வு நடத்தி, அந்தப் பகுதியின் தனியார் பள்ளியில், அரசு தனது செலவில் படிக்கவைக்கிறது. அப்படி ஒரு மாணவரை அரசு படிக்கவைக்குபோது, அவனின் தங்கையை, அந்தத் தனியார் பள்ளியிலேயே சேர்த்துவிட்டனர் பெற்றோர். 'அண்ணனை மட்டும் நன்கு படிக்கவைத்துவிட்டோம் என்கிற எண்ணம் தங்கைக்கு வந்துவிடக் கூடாதே' என்று கூறுகின்றனராம். இதனால், அரசுப் பள்ளிக்கு வரவேண்டிய ஒரு மாணவர் குறைந்துவிட்டார். மேலும், அரசுப் பள்ளியில் படிப்பது பெருமை எனும் மனநிலையைப் பெற்றோரிடம் தோற்றுவிக்கும் முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்