பரிதாப நிலையில் 15,169 பகுதிநேர ஆசிரியர்கள்?- கைகழுவுகிறதா தமிழக அரசு | Part-time teachers in pity because of TN government

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (17/04/2018)

கடைசி தொடர்பு:14:57 (09/07/2018)

பரிதாப நிலையில் 15,169 பகுதிநேர ஆசிரியர்கள்?- கைகழுவுகிறதா தமிழக அரசு

அரசுப் பள்ளிகளில் பகுதிநேரப் பணியாற்றும் ஆசிரியர்கள், தங்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற நீண்ட வருடக் கோரிக்கையை தமிழக அரசு கைகழுவுகிறதோ என்று அச்சப்பட்டுப் புலம்புகிறார்கள்.


பகுதிநேர ஆசிரியர்கள்

இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறும்போது, "கடந்த 2012-ம் ஆண்டில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவினால், ரூ.5,000 சம்பளத்தில் நாங்கள் பணியமர்த்தப்பட்டோம். அப்போது,16,549 பகுதிநேர ஆசிரியர்கள் இருந்தனர். 2014-ம் ஆண்டு, ரூ.2,000 சம்பளம் உயர்த்தி அரசு உத்தரவிட்டது. அப்போது அரசு வெளியிட்ட தகவலின்படி, 1,380 ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைந்து 15,169 என்று இருந்தோம். கடந்த ஆகஸ்டு 2017-ம் ஆண்டிலிருந்து இப்போதைய அரசு எங்களுக்கு ரூபாய் 700 உயர்த்தியது. தற்போது வரை நாங்கள் மாத தொகுப்பூதியமாக 7,700 ரூபாய் மட்டுமே பெற்று வருகிறோம். தற்போது, அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் மேலும்  அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. அந்த இடங்களில் எங்களைப் பணியமர்த்தி, நிரந்தரமாக்கக் கோரி பலமுறை அரசிடம் மனுக்கள் கொடுத்துவிட்டோம்.

 செந்தில்குமார்ஜெயலலிதாவினால் பணியமர்த்தப்பட்ட உடற்கல்வி, ஓவியம், கணினி, தோட்டக்கலை, இசை, தையல் உள்ளிட்ட பல்வேறு வகை பகுதிநேர ஆசிரியர்களை அரசின் திட்ட வேலையிலிருந்து தமிழக அரசுப்பணிக்கு மாற்றி, அனைத்து வேலைநாள்களிலும் முழுநேர வேலையுடன் சிறப்பாசிரியர்களாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும். பல்வேறு சந்தர்ப்பங்களில், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான ஜாக்டோ-ஜியோ தொடர் போராட்டங்களின்போதெல்லாம் தமிழக அரசின் உத்தரவுப்படி முழுநேரமும் ஊதியம் எதுவுமின்றி பள்ளிகளைத் தொய்வின்றி நாங்கள்தான் நடத்தினோம். இதனை அரசு கவனத்தில்கொள்ள வேண்டும். சமீபத்தில், பணிநிரந்தரம் கேட்டுப் போராடிய செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு, பணிமாறுதல், காலமுறை ஊதியம்குறித்து நீதிமன்றம் தானாக முன்வந்து தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு அரசு இன்னும் பாராமுகமாகவே இருக்கிறது. இந்த வேலைக்கு வந்தபிறகு, பல்வேறு சூழ்நிலைகளில் இறந்த பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு எவ்வித அரசு உதவித்தொகையும் கிடைக்காத சோகமும் இருக்கிறது. மேலும், இதுபோன்ற ஒப்பந்த வேலைகளில் தொகுப்பூதியத்தில் பணிசெய்பவர்களுக்கு, சட்டப்படி கிடைக்கவேண்டிய EPF, ESI, BONUS போன்ற அடிப்படை சலுகைகளைக்கூட அரசு இதுவரை எங்களுக்கு வழங்கவில்லை.

கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், தி.மு.க உறுப்பினர்களின் கேள்விகளுக்கு கல்வித்துறை அமைச்சர்  பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்துவருகிறது என்றும், பணிநிரந்தரம் செய்ய கமிட்டி அமைக்கப்படும் எனவும் பதிலளித்துள்ளதை விரைந்து செயல்படுத்த வேண்டும். அதுபோல, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 1,325 சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு 23.09.2017ல் தேர்வு நடைபெற்று, அதன் முடிவுகள் விரைவில் வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இதில் தேர்ச்சி பெறுகிறவர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்கப்படும். ஆனால், இதே கல்வித் தகுதியோடு அரசுப் பள்ளிகளில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் பணிபுரிந்துவரும் எங்களுக்கு முன்னுரிமைக் கொடுத்து, அரசு சிறப்பாசிரியராக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். கடந்த 2.11.2017 அன்று தமிழக முதல்வரை நாங்கள் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம். இன்று வரை எங்கள் நலன் சார்ந்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல், தமிழக அரசு மனிதநேயத்துடனும் கனிவுடனும் புதிய அரசாணை வெளியிட்டு, எங்களுக்கு காலமுறை ஊதியத்தில் நிரந்தர ஆசிரியர்களாகப் பணியமர்த்த உத்தரவிட வேண்டும்" என்றார்.