வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (17/04/2018)

கடைசி தொடர்பு:11:28 (17/04/2018)

சுற்றுலா சென்ற சென்னை தொழிலதிபருக்கு அதிர்ச்சிகொடுத்த கொள்ளையர்கள்!

கொள்ளை

 சென்னை அண்ணாநகரில் உள்ள தொழிலதிபரின் வீட்டில் கதவுகள் உடைக்கப்பட்டு,  வைரம், தங்கம், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. 

சென்னை அண்ணாநகர், டி.பிளாக் 9-வது தெருவில் உள்ள பங்களா வீட்டில் குடியிருந்துவருபவர் சுதர்சனராவ். இவர், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இரும்புத் தொழிற்சாலை நடத்திவருகிறார். கோடைச் சுற்றுலாவுக்காகக் கடந்த 13-ம் தேதி குடும்பத்தினருடன் ஊட்டிக்குச் சென்றுவிட்டார். வீட்டில் யாரும் இல்லாததால், கொள்ளை கும்பல் உள்ளே புகுந்துள்ளது. வீட்டின் மாடிப் பகுதியின் கதவை உடைத்த கொள்ளையர்கள், அதன்வழியாக வீட்டக்குள் நுழைந்து, பீரோ மற்றும் லாக்கரில் இருந்த ரைவம், தங்கம், ரொக்கம் ஆகியவற்றை அள்ளிக்கொண்டு கொள்ளைக் கும்பல் தப்பியுள்ளது.

இதுகுறித்து சுதர்சனராவ்-விற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டுக்கு வந்த அவர் அதிர்ச்சியடைந்தார். பிறகு, அண்ணா நகர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். கைரேகைகள் பதிவுசெய்யப்பட்டன
மோப்ப நாய் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகள்மூலம் கொள்ளையர்களைப் போலீஸார் தேடிவருகின்னர். 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "சுதர்சனராவ் வீட்டில் இல்லாத சமயத்தில் கொள்ளை நடந்துள்ளது. 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகளும் இரண்டரை கிலோ எடையுள்ள தங்க நகைகளும், இரண்டரை லட்சம் ரூபாய் பணமும்  கொள்ளை போயுள்ளது. வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டுக் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்"  என்றனர்.