வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (17/04/2018)

கடைசி தொடர்பு:11:14 (17/04/2018)

மேகமலைக்கு டூர் போறீங்களா... இதெல்லாம் கொஞ்சம் கவனிச்சுக்கங்க!

மேகமலைக்கு டூர் போறீங்களா...  இதெல்லாம் கொஞ்சம் கவனிச்சுக்கங்க!

சம்மர் ஆரம்பிக்கும் முன்னரே ’டூர்’ பிளான்கள் பெரும்பாலான வீடுகளில் தயாராகியிருக்கும். ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, தேக்கடி என இந்த சம்மருக்கான திட்டத்தில் மேகமலையும் இடம்பெற்றிருக்கலாம். ஆனால், குடும்பத்தோடு சென்று இயற்கையை ரசிக்கும் இடங்களின் பட்டியலில் இருந்து மேகமலை சற்று விலகிச்சென்றுகொண்டிருக்கிறது. ஆம், வாங்க ஒவ்வொரு காரணங்களாகப் பார்க்கலாம்…

மேகமலை

காவு வாங்கும் சாலை.!

மேகமலை என்றதும் முதலில் மோசமான அந்த சாலை தான் நினைவுக்கு வரும். சுமார் 32 கிலோமீட்டர் மலையில் செல்லும் சாலையானது குழிகளும், கற்களுமாக இருக்கும். இதனாலேயே பெரும்பாலும் சுற்றுலாப்பயணிகள் மேகமலைக்கு வருவதில்லை. இதைக் கருத்தில் கொண்டு சாலைப்பணிகளை மேற்கொண்டது மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும். ஒரு வருடத்துக்கு மேலாக, நான்கு ஒப்பந்ததார்கள் மூலம் நடைபெற்ற சாலைப்பணிகளால் பல இடங்களில் பாறைகளும் மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால், கடந்த மழைகாலத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்தச் சூழலில், சாலைப்பணி மேலும் தாமதமானது. இன்றுவரை மேகமலையில் சிறியதும் பெரியதுமாக நிலச்சரிவுகள் ஏற்படுவதும். அதைச் சரி செய்வதுமாகவே இருக்கிறார்கள் நெடுஞ்சாலைத்துறையினர்.

இது ஒருபுறம் என்றால், தொடர் விபத்துகள் மேகமலைச் சாலையின் வாடிக்கையாக மாறிவருகிறது. இரண்டு நாள்களுக்கு முன்னர், விருதுநகரில் இருந்து குடும்பங்களோடு வந்திருந்த வேன், சாலையில் கவிழ்ந்தது. 16 பெண்கள், 6 குழந்தைகள் உட்பட 26 பேர் பயணம் செய்த அந்த வேன் கவிழ்ந்ததில் 8 பேர் படுகாயமடைந்தனர். மேலும், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், ஆபத்தான வளைவில் சென்ற போது, தனியார் பேருந்தில் நேருக்கு நேர் மோதினர். இதில் ஒருவர் நிகழ்விடத்திலேயே பலியானார். மற்றொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். இந்த இரு விபத்துகளுக்கும் காரணம் ஆமை வேகத்தில் நடக்கும் சாலைப்பணிகள். ஆபத்தான வளைவுகள் பற்றிய எந்த முன்னறிவிப்புப் பலகையும், எவ்வளவு வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும் என்ற விழிப்பு உணர்வு போர்டுகளும் சாலையோரம் இல்லை. மேலும், சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள பாறைகளும் வாகன ஓட்டிகளை அடிக்கடி விபத்தில் சிக்க வைக்கிறது. சிறிது தவறினாலும் பல நூறு அடி பள்ளத்தில் வாகனங்கள் கவிழும் அபாயமும் உள்ளது.

மேகமலை

குடிகாரர்களின் இருப்பிடமான மேகமலை :

ஐந்து அணைகள், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை தோட்டங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் மேகமலையில் கறுப்புப் புள்ளியாக டாஸ்மாக் ஒன்று முளைத்துள்ளது. பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியாகவும், புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட இருக்கும் ஒரு வனப்பகுதியில் புதிதாக திறக்கப்பட்டிருக்கிறது டாஸ்மாக். 'மது குடித்துவிட்டு, தேயிலைத் தோட்டங்களுக்குள் சென்று சத்தம் எழுப்புவது. உள்ளூர்வாசிகளிடம் காரணமே இல்லாமல் சண்டை போடுவது என 'குடி'மகன்கள் செய்யும் பிரச்னைகள் ஏராளம்', என மேகமலை வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இரண்டு நாள்களுக்கு முன்னர் உசிலம்பட்டி வட்டாரத்தில் இருந்து வந்திருந்த இளைஞர்கள், குடி போதையில் ரகளையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் 19 பேரை அதிரடியாகக் கைது செய்தது வனத்துறை. அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது 8 பேர் மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை எச்சரித்த வனத்துறை எட்டு பேருக்கும் தலா 7,500 ரூபாய் அபராதம் வித்தது. பாதுகாக்கப்பட்ட காட்டில் அத்துமீறி நுழைந்த பிரிவில் அவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேகமலைக்குள் நுழையும் போதே இனி மதுபாட்டில்கள் இருக்கிறதா என்று சோதனை நடத்துவோம் என்ற வனத்துறை, மேகமலை குடியிருப்பில் இருக்கும் டாஸ்மாக் கடையை என்ன செய்ய இருக்கிறது என்றுதான் தெரியவில்லை.

மேகமலை

இரண்டாயிரம் கட்டணத்துக்கு தொற்றுநோய் இலவசம் :

``பகலில்கூட ரம்மியமான சீதோஷன நிலையைக் கொடுக்கும் மேகமலையில் தங்குவதற்கான வசதிகள் மிகவும் குறைவு. அங்கு கட்டப்பட்டுள்ள பேரூராட்சி தங்கும் விடுதியும் முறையான பராமரிப்பு இல்லாமல், அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. ஒரு நாளுக்கு ஆளைப் பார்த்து ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை வசூல் வேட்டை நடைபெறும். கழிப்பறைக்குச் சென்றால் தொற்றுநோய் இலவசம். மேகமலைக்கு வந்து தங்க இடம் இல்லாமல், குளிருக்குப் பயந்து மோசமான அறையில் தங்கி, இன்னல்களுக்கு ஆளானவர்கள் அதிகம். இதைப் பயன்படுத்தி, தனியார் எஸ்டேட்களில் உள்ள அனுமதி பெறாத தங்கும் விடுதிகள் ஒரு நாளுக்கு பல ஆயிரங்கள் வசூல் செய்கிறார்கள். இந்த தனியார் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.!’’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

பாதுகாப்பற்ற சாலையும், குடிகாரர்களின் தொல்லையும், தங்கும் வசதியின்மையும் மேகமலையை சூழ்ந்துகொண்டுள்ளது. சம்மர் ஜாலி டூர் லிஸ்டில் மேகமலையைச் சேர்த்திருப்பவர்கள் முறையாக திட்டமிட வேண்டியது அவசியம். மேலும், மேகமலையில் நிலவும் இத்தகையை சூழலில் அரசு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 


டிரெண்டிங் @ விகடன்