வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (17/04/2018)

கடைசி தொடர்பு:11:22 (17/04/2018)

மரபு நடைப்பயணம்... ஏழு இடங்களில் பீரங்கிகளைத் தாங்கி நின்ற கமுதிக் கோட்டை!

வெட்டி எடுக்கப்பட்ட பெரிய அளவிலான பாறைகள், தற்போதும் அந்தப் பகுதியில் கிடைக்கின்றன. பாறைகளை வெட்டியதால் ஏற்பட்ட பள்ளம் அகழிபோல் அமைந்துள்ளது. இதில் ஏழு கண்காணிப்புக் கோபுரங்கள் போன்ற அமைப்பு உள்ளன. இவை வீரர்கள் நின்று காவல்புரியவும், கண்காணிக்கவும், பீரங்கி இயக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மரபு நடைப்பயணம்... ஏழு இடங்களில் பீரங்கிகளைத் தாங்கி நின்ற கமுதிக் கோட்டை!

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை மாணவர்கள், பொதுமக்கள் நேரில் கண்டு அறிந்துகொள்வதற்கான மரபு நடை நிகழ்வை ஒவ்வொரு மாதமும் நடத்திவருகிறது. மூன்றாவது மரபு நடை நிகழ்வு, கமுதிக் கோட்டையில் நடந்தது. அங்கு அனைத்து திசைகளையும் கண்காணிக்க ஏழு பீரங்கிகள் அமைக்கப்பட்டிருந்தன.

மரபு நடை மேற்கொள்ளப்பட்ட கமுதி கோட்டை

இந்த நிகழ்வுக்குத் தலைமைவகித்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பேசியபோது, ``வணிகம், சமணம், கோட்டை, கழுமரங்கள், மலைக் கோயில்கள், பாரம்பர்யத் தாவரங்கள் எனப் பல்வேறு பழைமைவாய்ந்த தடயங்களைக்கொண்ட வரலாற்றுச் சுரங்கமாக கமுதி உள்ளது. பழங்காலம் முதல் கமுதி ஒரு வணிக மையமாக இருந்துள்ளது. வழிவிட்ட அய்யனார் கோயிலில் உள்ள பத்தாம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டில் `ஐந்நூற்றுவர்' எனும் வணிகக் குழுவின் மெய்க்கீர்த்தியுள்ளது. வழிவிட்ட அய்யனார் கோயில், பசும்பொன் ஆகிய இடங்களில் 9 - 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பங்கள் உள்ளன.

ராமநாதபுரத்திலிருந்து திருநெல்வேலி செல்லும் பாதையில் கமுதி உள்ளது. இந்த வழியில்தான் ஜாக்சன் துரையைச் சந்திக்க கட்டபொம்மன் வந்துள்ளார். குண்டுகுளம், ஆரைகுடி உள்ளிட்ட பல இடங்களில், உடன்கட்டை ஏறிய பெண்களுக்கு அமைக்கப்பட்ட மலைக்கோயில்கள் உள்ளன. நாயக்கர் காலத்தைச் சேர்ந்த இவை 300 முதல் 500 ஆண்டுகள் வரை பழைமையானவை. கி.பி 1713 முதல் கி.பி1725 வரை சேதுநாட்டை ஆண்ட முத்து விஜய ரகுநாதசேதுபதி என்கிற திருவுடையத்தேவர், பிரான்ஸ் நாட்டுப் பொறியியல் வல்லுநர்களின் உதவியுடன் புதிய வடிவத்தில் கமுதி, பாம்பன், செங்கமடை ஆகிய இடங்களில் மூன்று புதிய கோட்டைகளைக் கட்டினார். இதில் கமுதிக்கோட்டை, வட்டவடிவில் உள்ளது.

குண்டாற்றின் கரையில் பாறைகள் நிறைந்த மேடான அடர்ந்த காட்டுப் பகுதியில் இந்தக் கோட்டை கட்டப்பட்டுள்ளது. இதன் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள பாறைகள் உடைக்கப்பட்டு, கோட்டை கட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளன. வெட்டி எடுக்கப்பட்ட பெரிய அளவிலான பாறைகள், தற்போதும் அந்தப் பகுதியில் கிடைக்கின்றன. பாறைகளை வெட்டியதால் ஏற்பட்ட பள்ளம் அகழிபோல் அமைந்துள்ளது. இதில் ஏழு கண்காணிப்புக் கோபுரங்கள் போன்ற அமைப்பு உள்ளன. இவை வீரர்கள் நின்று காவல்புரியவும், கண்காணிக்கவும், பீரங்கி இயக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் மரபு நடை மேற்கொண்ட கமுதி கோட்டை.

இந்தக் கோட்டை செங்கற்களால் கட்டப்பட்டு, அதன் உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில் பலவிதமான பாறைக் கற்களைக்கொண்டு ஒட்டியுள்ளனர். இதனால் இந்தக் கோட்டை வெளியில் இருந்து பார்க்கும்போது கற்கோட்டை போன்ற அமைப்பில் காணப்படுகிறது. கோட்டையைக் கட்டுவதற்கான செங்கற்களை இங்கேயே தயாரித்துள்ளனர். சிறிய கோட்டையாக இருந்தாலும் இரண்டு அடுக்கு வரிசையில் பாதுகாப்பு இருந்துள்ளது.  இங்கு குழல் ஆதண்டை, நாட்டு வீழி ஆகிய அரியவகை மூலிகைத் தாவரங்கள் உள்ளன.

கி.பி 1877-ம் ஆண்டு குண்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக, இந்தக் கோட்டையின் பல பகுதிகள் சேதமடைந்தன. கற்கள் பெயர்ந்து வெறும் செங்கல் கோட்டையாக இப்போது காட்சியளிக்கிறது. ராமநாதபுரம் சேதுநாட்டை ஆங்கிலேயர் கைப்பற்றிய பிறகு, அனைத்துக் கோட்டைகளையும் இடித்தபோது இதையும் இடித்து சேதப்படுத்திவிட்டனர். இப்படி பல்வேறு தாக்கங்களை எதிர்கொண்டு, தொல்லியல் வரலாற்றை எடுத்துச்சொல்லும் விதத்தில் எஞ்சிய பகுதிகளே தற்போது  நாம் காணும் இந்தக் கோட்டை” என்றார்.


டிரெண்டிங் @ விகடன்