வெளியிடப்பட்ட நேரம்: 11:57 (17/04/2018)

கடைசி தொடர்பு:12:11 (17/04/2018)

வரலாற்று இடங்களுக்கே சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்!

வரலாற்று இடங்களுக்கே சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்!

பேச்சு, கட்டுரை, கதை, கவிதை, கல்வி ஆகியவற்றில் தேர்ந்தவர்களாக தங்களது மாணவர்களைப் பயிற்றுவிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பற்றி நாம் நிறைய அறிந்திருப்போம். ஆனால், தொல்லியல், பண்பாடு, தொன்மம் எனத் தமது மாணவர்களுக்குக் கற்றுத் தந்து, களப் பயிற்சிக்கும் அழைத்துச் செல்கிறார்  ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர்.


ஆசிரியர்

இந்திய அளவில் அதிக தொல்லியல் சின்னங்களையும் கல்வெட்டுகளையும் கொண்ட மாவட்டம், புதுக்கோட்டை. தொண்டைமான் ஆட்சிக் காலத்திலிருந்து பண்பாட்டு அடையாளங்களைப் பதிவுசெய்வதில், புதுக்கோட்டைக்குத் தனி இடம் உண்டு இதற்குச் சாட்சியாகத் தமிழக அளவில் இரண்டாவது பெரிய அருங்காட்சியகம், இந்த மாவட்டத்தில்தான் இயங்குகிறது. புதுக்கோட்டை சமஸ்தானம், கல்வெட்டுகளைப் படியெடுத்து அவற்றில் உள்ள வரலாற்றுச் செய்திகள் தொகுக்கப்பட்டு, புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இதைத் தொடர்ந்து, மாவட்டக் கல்வெட்டுகளில் பதிவுசெய்யப்படாத கல்வெட்டுகளையும், கோயில்கள், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் கண்டறிந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த  ராஜா முகமது மற்றும் கரு.ராஜேந்திரன்.

govt school

இவர்களால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்லியல் முக்கித்துவம் வாய்ந்த இடங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த வரலாற்று ஆய்வாளர்களின் தொடர்ச்சியில், புதுக்கோட்டை மாவட்டத்தின் அடையாளப்படுத்தப்படாத இடங்களை ஆ,மணிகண்டன் என்ற அரசுப் பள்ளி ஆசிரியர் தமது நண்பர்களுடன் இணைந்து செய்துவருகிறார். இன்றைக்குத் தமிழ்நாட்டின் முக்கிய வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காக மீட்பு நடைப்பயணம் செய்வதுபோல, இவர் பண்பாட்டு மீட்பு மரபு நடைப்பயணங்களை ஒருங்கிணைத்துச் செல்கிறார். அந்தப் பயணம்,  மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே தொல்லியல் வரலாற்று ஆர்வத்தைத் தூண்டியுள்ளன. அவற்றைப் பாதுகாப்பதற்கான தனிமனித கடமைகளையும் உணர்த்திவருகிறார் மணிகண்டன்.

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவரும் இவர், மங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். தனது பள்ளி மாணவர்கள் மற்றும் தொல்லியல் தேடலில் ஆர்வமுடைய நண்பர்களுடனும் இணைந்து கண்டுபிடித்திருக்கும் அபூர்வ விஷயங்கள் வியக்கவைக்கின்றன.


ஆசிரியர்

2011-ம் வருடம், இவரது வகுப்பு மாணவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட தொல் வாழிடம் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கட்டுரையாக  சமர்ப்பிக்கப்பட்டு பெரும் பாராட்டைப் பெற்றது. 2012 முதல் 2017 வரை, 5 தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகவும் அபூர்வமான  மைல்கற்களைப் புதுக்கோட்டை மாவட்டத்தின் கூழையான் விடுதி ஆதனக்கோட்டை, அன்னவாசல், தஞ்சாவூர் மாவட்டம் மாப்பிள்ளை நாயக்கன்பட்டி , செங்கிப்பட்டி ஆகிய இடங்களில் அடையாளம் கண்டு காட்சிப்படுத்தியுள்ளனர்.


ஆசிரியர்

கல்வெட்டுகள் பொறிக்கப்படும் முன்பு, செங்கோட்டு வரைவு முறையில் சான்றுகள்  எழுதப்படும் முறை இருந்திருக்கிறது. அதை நொடியூர், திருவிடையாப்பட்டி, நார்த்தாமலை கடம்பர் கோவில் உள்ளிட்ட இடங்களில் அடையாளப்படுத்தியுள்ளனர், இது, கல்வெட்டு பொறிக்கப்படும் முறைக்கு முன்னோடி. கந்தர்வகோட்டை எட்டுக்கால் மண்டபத்தில், சமூக ஏற்றத்தாழ்வுகளையும், வாழ்வியல் முறைகளையும் வெளிப்படுத்தும் 18-ம் நூற்றாண்டின் தொடக்கக் கால ஓவியங்களைக்  கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளனர், புதுக்கோட்டை மாவட்டத்தில் பழங்கால உருக்கு உலைகள் இயங்கியதற்கான தடயங்களையும், உருக்குக் குழாய், உருக்கு உலை உள்ளிட்ட சான்றுகளையும் பொற்பனைக்கோட்டை முதல் திருவரங்குளம் வரை விரவியுள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.

govt school

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே வாழமங்கலத்தில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாடிக்காவல் கல்வெட்டையும், இரண்டாம் குலோத்துங்கன் காலத்துச் சூலக்கல்லையும் அடையாளப்படுத்தியுள்ளனர். குடுமியான்மலை அருகே விசலூரில் பொறியாளர் ரமேஷ் முத்தையனுடன் இணைந்து மேற்கொண்ட களப்பயணத்தில், சிதைந்த கற்றளியும் 13 கற்சிலைகள் கண்டறியப்பட்டன. அவை, புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

கீரமங்கலம் அருகே ராமசாமிபுரம் எனும் ஊரில், வில்லுனி ஆற்றங்கரையில் அவ்வூர் மக்களால் சேகரிப்பட்ட கறுப்பு சிவப்பு பானை ஓடுகளையும், அவற்றில் இருந்த குறியீடுகளையும் கண்டுபிடித்ததோடு, அதே இடத்தில் செயற்கையாகச் சுண்ணாம்புப் படுகையில் ஏற்படுத்தப்பட்ட  புதிர்நிலையையும் அடையாளப்படுத்தியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், நண்டம்பட்டியில் பராந்தகன் காலத்துக் கல்வெட்டும், நேர்த்தியான கலைப்பாணியிலான 18 கற்சிலைகளையும் கரு.ராசேந்திரன் அவர்களோடு இணைந்து அடையாளம் கண்டறிந்து, தொல்லியல் துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.

govt school

எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், கடந்த 800 ஆண்டுகள் பழைமைவாய்ந்த குளம் வெட்டியதை விளக்கும் கல்வெட்டும், அதே பள்ளி மாணவர்கள் அளித்த தகவலின்படி சிறுஞ்சுனையில் புரவரி ஆசிரியம் கல்வெட்டும், ஆசிரியர் கஸ்தூரி ரங்கன், கரு.ராசேந்திரன் குழுவினரோடு வெளிப்படுத்தியுள்ளார். ஆண்டுதோறும் தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் மூலமாக முதன்மைக் கல்வி அலுவலர்களின் வழிகாட்டுதலோடும், பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாப்பது, கல்வெட்டுகளை வாசிப்பது, படிப்பது உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கிவருகிறார். கடந்த ஆண்டு இந்தப் பயிற்சியை அருங்காட்சியக காப்பாட்சியரின் உதவியோடு மூத்த தொல்லியல் ஆய்வாளர்கள் ராஜா முகமது, கரு.ராசேந்திரன் ஆகியோர் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


govt school

கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூர் பெரிய குளத்தில் அடையாளங்காணப்பட்ட கல்வெட்டு மூலம் இந்தப் பகுதியை அழித்தவர் பற்றிய செய்தியை வெளிக்கொண்டு வந்தார். இது 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு. இந்தப் புதிய தொல்லியல் கண்டுபிடிப்புகள் கள மணிகண்டன்மேலாய்வு உள்ளிட்டவற்றைப் பள்ளி விடுமுறை நாள்களிலும், ஓய்வு நேரங்களிலும் மாணவர்களோடும் நண்பர்களோடும் இணைந்து மணிகண்டன் செய்துவருகிறார். இவரது குழுவில் மூத்த கல்வெட்டு ஆய்வாளர் கரு.ராசேந்திரனின் வழிகாட்டுதலோடு, ஆசிரியர்கள் மு.முத்துக்குமார், கஸ்தூரி ரெங்கன், மஸ்தான் பகுருதீன் சமூக ஆர்வலர்கள் புதுகை செல்வா ஆகியோரும் இயங்கி வருகின்றனர்.

‎இவ்வளவு சாதனைகளுக்குச் சொந்தக்காரரான ஆசிரியர் மணிகண்டன், "எனது கிராமத்தில் உள்ள பள்ளியில்தான் படித்தேன். அதன்பின், புதுக்கோட்டை மன்னர் கல்லூரியிலும், ஆசிரியர் பட்டத்தை ஒரத்தநாடு அரசுக் கல்வியியல் கல்லூரியிலும், முதுகலையை நாமக்கல் அரசுக் கல்லூரியிலும் முடித்தேன். முதுகலைக் கல்வியைத் தொடரும்போதே, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்ச்சி பெற்று, நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் அருகே நியூ ஹோப் அரசு நடுநிலைப் பள்ளியில் பணியேற்றினேன்.

அப்போது, அந்தப் பள்ளியில் பொதுமக்கள் பங்களிப்புடன் அறிவியல் ஆய்வகம் அமைத்தேன். பணி மாறுதலில் புதுக்கோட்டை மாவட்டம், வேம்பன் பட்டி நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும்போது, மாணவர்களைத் தேசிய அளவில் சாதனைகள் நிகழ்த்த வாய்ப்பு கிடைத்தது. தற்போது, பணியாற்றும் கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களைக்கொண்டு, பண்பாட்டு அடையாளங்களைக் கண்டறியவும், அவற்றைப் பற்றிய விழிப்பு உணர்வுகளை ஏற்படுத்தவும், தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் மூலமாகக் கண்காட்சிகள், விழிப்பு உணர்வுப் பயணங்கள் ஆகியவற்றைச் செய்துவருகிறேன்.

தொல்லியல் சார்ந்த பல்வேறு பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்குவதோடு, மாவட்ட அளவில் இயங்கிவரும் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களை ஒருங்கிணைத்து, வரலாற்று ஆர்வலர்கள், அருங்காட்சியக நிர்வாகம் ஆகியோரின் துணையோடு கல்வெட்டுப் பயிற்சிகளையும்  அளிக்கிறேன்" என்கிறார்.

நமது தொன்மையைத் தேடி அடையாளப்படுத்தும் ஆசிரியரின்  அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது!


டிரெண்டிங் @ விகடன்