வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (17/04/2018)

கடைசி தொடர்பு:13:35 (17/04/2018)

எரியும் பிணங்களுக்கு நடுவே படுத்துப் போராட்டம் நடத்திய விவசாயிகள்!

விவசாயிகள்
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சுடுகாட்டில் எரியும் பிணங்களுக்கு நடுவே பிணம்போல் படுத்துக்கொண்டு அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் தொடர்கின்றன. கடந்த சிலவாரங்களுக்கு முன்பு, விவசாய சங்கங்கள் இதே கோரிக்கையை முன்னிறுத்தி, திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டன. அடுத்து திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆற்று மணலில், உடலைப் புதைத்துக்கொண்டு, தலையில் மண்டை ஓடு, எலும்புக் கூடுகளை மாலையாகப் போட்டுத் தங்களை சடலம்போல் சித்திரித்து மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டு, போராட்டம் நடத்தினர்.
 
இப்படி போராட்டங்கள் தொடர்ந்துவரும் நிலையில், திருச்சியில் உள்ள மிகப்பெரிய சுடுகாடான திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை அடுத்த காவிரிக் கரையில் உள்ள ஓயாமாரி மயானத்தில் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று திரண்ட விவசாயிகள், எழும்புக் கூடுகள், மண்டை ஓடுகளை அணிந்தவாரு, எரியும் பிணங்களுக்கு நடுவே பிணம்போல் படுத்துக்கொண்டு மத்திய- மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 
 
தொடர்ந்து பேசிய அய்யாக்கண்ணு, ``இந்திய ஜனநாயக நாட்டில், அரசியலமைப்புச் சட்டத்தையும் உச்ச நீதிமன்ற உத்தரவையும் மத்திய அரசு மதிக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றம் 6 வார கால அவகாசம் கொடுத்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஏமாற்றுகிறது. தமிழகத்தைப் பாலைவனமாக்கிவிட்டு, இங்கு பெட்ரோல், ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல், மரபணு மாற்றப்பட்ட விதைகளை பரவலாக்கி மண்ணை மலடாக்க தொடர்ச்சியாக முயல்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் விவசாயிகள் பிணமாகிப் போவார்கள், அதற்காக தமிழகம் முழுவதும் போராடுகிறார்கள். ஆனால், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால்தான் காவிரியில் பிணங்களாக சித்திரித்துப் போராடுகிறோம்” என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க