புதிய பாட புத்தகங்களின் விலை அதிகரிப்பு உண்மைதான்! அமைச்சர் செங்கோட்டையன்

செங்கோட்டையன்

புதிய பாடத்திட்டத்தால் புத்தகங்கள் அச்சிடும் செலவு அதிகரித்துள்ளதால், பாட புத்தகங்களின் விலை சற்று அதிகரித்துள்ளது உண்மை தான்” எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 

ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஓடாநிலை பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை மணிமண்டபம் உள்ளது. அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஈரோடு மாவட்டத்திலுள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அதிகாரிகள் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  

செங்கோட்டையன்

இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர், பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையனிடம், பாடப் புத்தகங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற பேச்சுகள் வருகிறதே எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த செங்கோட்டையன், “புதிய பாடத்திட்டம் கொண்டுவருவதால் புத்தகத்தின் விலை அதிகமாக இருக்கிறது. எனவே, அந்தத் தொகை மாணவர்களிடம் வசூல் செய்யப்படும் என்கின்ற தவறான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அது முற்றிலும் தவறு. 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு சி.பி.எஸ்.சி தரத்தில் பாடத்திட்டத்தை விரிவாக்கம் செய்திருக்கிறோம். புத்தகங்களை அச்சிடும் செலவு அதிகரித்துள்ளதால், பாடப்புத்தகங்களின் விலை சற்று அதிகரித்துள்ளது உண்மைதான். ஆனால், அந்தப் புத்தகத்துக்காக அரசுப் பள்ளி மாணவர்களிடமோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடமோ பணம் வசூல் செய்யப்பட மாட்டாது. இது எப்போதும்போல மாணவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும்” எனக் கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!