சினிமா ஸ்டிரைக் - முத்தரப்பு பேச்சுவார்த்தை வெற்றி அடையுமா?  #TamilCinemaStrike

தமிழ் சினிமா ஸ்டிரைக், தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெஃப்சி, திரையரங்க உரிமையாளர்கள் வைத்தக் கோரிக்கையின் பேரில் தமிழ அரசு தலையிட்டு திரையரங்கு உரிமையாளர் சங்கம், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் கியூப் நிறுவனத்தார் பங்குபெறும் முத்தரப்புப் பேச்சுவார்த்தை சற்றுமுன் தொடங்கி நடந்து வருகிறது. 

கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து தமிழ் சினிமா சுற்றலில் விட்டுவரும் கியூப், யூ.எஃப்.ஓ நிறுவனங்களின் கட்டணப் பிரச்னை நாளுக்கு நாள் வளர்ந்து மார்ச் 1 முதல் புதுப்படங்களை வெளியிடுவதற்குத் தடை, மார்ச் 16-லிருந்து படப்பிடிப்புகளுக்குத் தடை எனத் தயாரிப்பாளர்களின் நடவடிக்கைகளுக்கு ஃபெஃப்சி, நடிகர் சங்கம் என ஆதரவு வலுக்க, கடந்த ஒரு மாதமாகத் தமிழ் சினிமாவில் எந்தப் படப்பிடிப்பும் நடக்கவில்லை. 

சினிமா ஸ்டிரைக்

இதைத் தொடர்ந்து நடந்த பல பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் கியூப் நிறுவனம் எந்தவித உடன்பாட்டுக்கும் வரவில்லை. தியேட்டர் உரிமையாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் இதே பிரச்னை நீடித்தது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டால் மட்டுமே பிரச்னை தீரும் எனச் சம்பந்தப்பட்ட முத்தரப்பும் நம்பிக்கைக்கொண்டிருந்தது. இதன் அடிப்படையில் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெஃப்சி, திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வைத்தக் கோரிக்கையின் பேரில் தமிழக அரசு தலையிட்டு, திரையரங்கு உரிமையாளர் சங்கம், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் கியூப் நிறுவனத்தார் பங்குபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தையை அமைச்சர்கள் கடம்பூர் ராஜு,  கே.சி.வீரமணி முன்னிலையில் சற்றுமுன் தொடங்கி நடந்து வருகிறது. 

தயாரிப்பாளர் சங்கம்

இதில் கியூப், யூ.எ.ஃப்.ஓ நிறுவனங்களின் கட்டணம், திரைத்துறைக்கென தனி வாரியம் அமைப்பு, தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை கணினி மயமாக்கல், ஆன்லைன் டிக்கெட் புக்கிங் கட்டணக் குறைப்பு எனப் பல சிக்கலான விஷயங்களையும் விவாதிக்க உள்ளனர். 50 நாள் போராட்டம், 30 நாள்கள் வேலை நிறுத்தம், 300 கோடி வரை வர்த்தக இழப்பு என வந்தபோது குறைக்கப்படாத கியூப், யூ.எஃப்.ஓ நிறுவனங்களின் வி.பி.எஃப் கட்டணங்களைக் குறைப்பார்களா என்ற கேள்வியும். படங்கள் அதிக மதிப்பில் தயாரிப்பு, நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்துவரும் தயாரிப்பாளர்கள், தியேட்டர்காரர்களிடம் மட்டும் வெளிப்படைத்தன்மைக் கேட்பதா. கியூப் போன்ற முன்னணி தொழில்நுட்பம் பெற்றுவரும் நிலையில், திடீரென்று ஒரு புது நிறுவனத்துடன் எப்படி ஒப்பந்தம் செய்வது என்ற தியேட்டர்காரர்களின் கேள்விகளும் உள்ள நிலையில், இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ஷூட்டிங்குகள் நிறுத்தம் என்ற தயாரிப்பாளர்களின் முடிவு மட்டும் தளர்த்தப்படும்; தொடங்கப்படும் மற்றபடி எந்த ஒரு தீர்வும் எட்டப்படாது எனத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.         

Do you like the story?

Please Appreciate the Author by clapping!