வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (17/04/2018)

கடைசி தொடர்பு:13:24 (17/04/2018)

`நான் வாழ்வதற்கு அனுமதி கொடுங்கள்!' - உள்துறைச் செயலருக்கு ராபர்ட் பயஸ் கடிதம் 

புழல் சிறை

`என்னை வாழ அனுமதியுங்கள்' என்ற கோரிக்கையோடு மத்திய உள்துறைச் செயலருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்  ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ராபர்ட் பயஸ்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், கடந்த 27 ஆண்டுகளாக ஆயுள் தண்டனைக் கைதியாகச் சிறையில் இருக்கிறார் ராபர்ட் பயஸ். மத்திய உள்துறைச் செயலருக்கு ஆறு பக்கங்கள் அடங்கிய மனு ஒன்றைக் கடந்த 4.4.2018 அன்று புழல் சிறை அதிகாரிகளின் உதவியோடு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த மனுவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.

ராபர்ட் பயஸ்இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் சிவக்குமார், "உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் 5 விஷயங்களைக் குறிப்பிட்டிருக்கிறார் பயஸ். அதில், 2.3.2016 அன்று அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, ஏழுபேரையும் விடுதலை செய்வது குறித்து மத்திய அரசிடம் கருத்து கேட்டு எழுதிய கடிதம், 'இந்தக் கடிதத்தின்மீது மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் பதில் தர வேண்டும்' என 23.1.2018 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு, 'நாட்டில் எந்தவொரு ஆயுள் தண்டனை சிறைவாசியையும் தண்டனைக் கழிவுடன் 25 ஆண்டுகளுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது' எனத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் 26.9.2003 அன்று வழங்கிய வழிகாட்டுதல்,

எம்.கே.பாலகிருஷ்ணன் எதிர் மத்திய அரசு என்ற வழக்கில் மேற்சொன்ன தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டலை அப்படியே ஏற்று ஜூன் 2004-ம் ஆண்டு மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரம், ஒப்புதல் வாக்குமூலங்களை முதன்மை ஆதாரமாகக் கொண்டு தண்டனை அளித்தது தவறு என்றும் வழக்கின் புலனாய்வில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளை வெளிப்படுத்தியும் ஏழுபேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கக் கோரியும் சோனியா காந்திக்கு 12.12.2017 அன்று நீதியரசர் கே.டி.தாமஸ் எழுதிய கடிதம் ஆகியவற்றை இணைத்து அனுப்பியிருக்கிறார். 

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கின் 9 வது எதிரியான ராபர்ட் பயஸ், கடந்த 27 ஆண்டுகளாக ஜாமீன் மற்றும் பரோலில் ஒருநாள்கூட வெளியில் செல்லாதவர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு தலைமை வகித்த நீதியரசர் கே.டி.தாமஸ், சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், மீதமுள்ள இரண்டு நீதிபதிகளில் ஒருவரும் வழக்கின் தீர்ப்பை எழுதியவருமான நீதியரசர் D.P.வாத்வா, 'பயஸ் நிரபராதி' எனக் கூறி விடுதலை செய்துள்ளார் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். மனைவி மற்றும் குழந்தையோடு எஞ்சியுள்ள நாள்களைச் செலவிட வேண்டும் எனப் பயஸ் விரும்புகிறார். மத்திய உள்துறை அமைச்சகம், அவருடைய மனுவைப் பரிசீலிக்க வேண்டும் என்பதுதான் மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கை" என்றார்.