வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (17/04/2018)

கடைசி தொடர்பு:13:13 (17/04/2018)

சென்னை உதவி கமிஷனர் கமில்பாஷாவைச் சிக்கவைத்த கறுப்பு டைரி - ரகசியத்தை வெளியிட்ட விஜிலென்ஸ்

 போலீஸ் உதவி கமிஷனர்

 சென்னை திருமங்கலத்தில், போலீஸ் உதவி கமிஷனராகப் பணியாற்றிவரும் கமில்பாஷா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பண விவகாரத்தில், கறுப்பு டைரிமூலம் முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்தனர். 

 சென்னை திருமங்கலம் காவல் சரகத்தில் உதவி கமிஷனராகப் பணியாற்றிவருபவர், கமில்பாஷா. இவரது அலுவலகத்தில், கடந்த 13-ம் தேதி இரவு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டி.எஸ்.பி. லவகுமார் தலைமையிலான போலீஸார் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, ஐந்து லட்சத்து எட்டாயிரத்து ஐந்நூறு ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைப்பற்றினர். இதுதொடர்பாக, உதவி கமிஷனர் கமில்பாஷா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், காவலர்கள் ஜெகன், சொக்கலிங்கம், தேவேந்திரன், ராஜேஷ்,  பில்டிங் கான்ட்ராக்டர் செல்வம் ஆகியோரிடம்  விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களிடம் பணம்குறித்த விளக்கமும் கேட்டு சம்மனும் கொடுக்கப்பட்டது. 

இந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் விளக்கமும் கொடுக்கப்பட்டது. அந்த விளக்கத்தையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், உதவி கமிஷனர் கமில்பாஷா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறுகையில், "உதவி கமிஷனர் கமில்பாஷா  உள்பட ஏழு பேரிடம் விசாரணை நடத்தினோம். முன்னதாக நடந்தசோதனையின்போது, எங்களுக்கு சில முக்கியத் தடயங்கள் சிக்கின. கமில்பாஷாவின் அறையிலிருந்து கறுப்பு நிற டைரி எங்களிடம் சிக்கியது. அதில் 25,000 ரூபாய் இருந்தது. மேலும், டேபிள் லாக்கரிலிருந்து 46,500 ரூபாயும், பச்சை நிற ஃபைலிலிருந்து 75 ஆயிரம் ரூபாயும் பறிமுதல்செய்தோம்,. உதவி கமிஷனர் அலுவலகத்திலிருந்த கொரட்டூரைச் சேர்ந்த செல்வத்திடமிருந்து மஞ்சள் நிற டைரி கிடைத்தது. அதில், பண விவகாரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. மேலும், அவரிடமிருந்து 2,51,000 ஆயிரத்தைப் பறிமுதல் செய்துள்ளோம். அதன்அடிப்படையில் விசாரணை நடத்தி, 102, 13(2) 13(1) என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். விசாரணை முடிவில்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.