`அவர்கள் கெட்டுவிடக் கூடாது' - ஆச்சர்யப்படுத்தும் பெட்டிக்கடை அம்சவள்ளி

பள்ளிக்கூடம் பக்கத்தில் இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி பான்பராக், புகையிலை, சிகெரெட் போன்ற பொருள்களை விற்பனை செய்யாமல் ஆச்சர்யமூட்டும் அம்சவள்ளி

புகையிலை, பான்பராக், ஹான்ஸ் போன்ற பல போதைப் பொருள்கள் கடைகளில் விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதை மறைத்து வைத்து விற்பனை செய்வார்கள் பல கடைக்காரர்கள். ஆனால், அம்சவள்ளி என்பவர் பள்ளிக்கூடம் பக்கத்தில் இருக்கும் மாணவர்கள் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களின் நலன் கருதி சிகரெட், பான்பராக், ஹான்ஸ் போன்ற பொருள்களை விற்பனை செய்யாமல் ஆச்சர்ய மூட்டுகிறார்.

அம்சவள்ளி

தஞ்சாவூர் அருகே உள்ளது அன்னப்பன்பேட்டை இந்த ஊரைச் சேர்ந்த அம்சவள்ளி அங்குள்ள அரசுப் பள்ளி அருகே பெட்டிக்கடை வைத்திருக்கிறார். 1-ம் வகுப்பு முதல் 10- வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவியர் படித்து வருகிறார்கள். மாணவர்கள் தங்களுக்குத் தேவையான ஸ்நாக்ஸ், படிப்புக்குத் தேவையான பொருள்கள் என அனைத்தையும் பள்ளிக்கு அருகில் இருக்கும் அம்சவள்ளியின் பெட்டிக்கடையில்தான்  வாங்குவார்கள். பெட்டிக்கடையை நடத்தி வரும் அம்சவள்ளி மாணவர்கள் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், அவர்களின் நலன் கருதியும் பான்பராக், சிகரெட், ஹான்ஸ் போன்ற போதை வஸ்த்துகள் எதையும் விற்பனை செய்வதில்லை. யாரேனும் கேட்டாலும் சிகரெட் பிடிச்சி ஏன் உடம்பை கெடுத்துக்கீறீங்க என அன்பாக அட்வைஸ் செய்கிறார்.

அம்சவள்ளியிடம் பேசினோம். ``இன்றைக்கு மாணவர்கள் வளரும் ஆரம்ப பருவத்தில் அடித்தளம் நன்றாக இருக்க வேண்டும். பிஞ்சு மனதில் எந்தக் கெட்ட விதையும் விழுந்துவிட்டால் அது பெரிய மரமாகி அந்தப் பழக்கம் அவர்களை தொற்றிக்கொள்ளும். நான், என் கடையில் சிகரெட், பான்பராக், புகையிலை போன்ற பொருள்கள் விற்றால் கடைக்கு வரும் பெரியவர்கள் அதை வாங்கி இங்கேயே நின்று பயன்படுத்துவார்கள்.

அம்சவள்ளி கடையில்

அந்தச் சமயத்தில் கடைக்கு வரும் மாணவர்களுக்கு இதையெல்லாம் செஞ்சா தப்பு கிடையாது என்ற எண்ணம் அவர்கள் மனதில் உருவாகிவிடும். வளர வளர அதை அவர்களும் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் நான், இதுபோன்ற பொருள்களை விற்பது இல்லை. எல்லோரும் சொன்னாங்க புகையிலை, பான்பராக், ஹான்ஸ் போன்ற பொருள்கள்தான் விற்பனை செய்யக் கூடாது என தடையிருக்கிறது. சிகரெட் விற்கலாம்  எனச் சொன்னார்கள். அதுவும் புகையிலையில் தானே செய்யப்படுகிறது. அது உடம்புக்குக் கேடு தானே. அதை மட்டும் ஏன் விற்க வேண்டும். எனக்கு லாபம் கிடைப்பதற்காக நான் இதையெல்லாம் விற்க மாட்டேன் எனச் சொல்லி விட்டேன். அதை கடைப்பிடித்தும் வருகிறேன்'' என கிராமத்துக்கே உரிய வெள்ளந்தியுடன் பேசுகிறார்.

யார் எப்படி போனால் என்ன நமக்கு; லாபம் கிடைத்தால் சரி என இருக்கிற இந்த காலத்தில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்துகிறார் அம்சவள்ளி.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!