வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (17/04/2018)

கடைசி தொடர்பு:16:54 (17/04/2018)

காவிரியையே திணறடித்த நொய்யல் ஆற்றைக் காப்பாற்ற களமிறங்கிய இளைஞர் குழு!

ஒரு காலத்தில் காவிரி ஆற்றையே திணறடித்ததாக நொய்யல் நதி குறித்து வரலாறு பக்கங்களில் எழுதப்பட்டிருக்கிறது. இதன் வேகத்தால், காவிரியின் போக்கே மாறியதாக எல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால், அப்படிப்பட்ட  நொய்யல் நதியே இல்லாமல் போகின்ற ஒரு சூழல்நிலையை நாம் வேகமாக உருவாக்கி வருகிறோம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு பேரூர், இருகூர், சூலூர், சோமனுார், மங்கலம், திருப்பூர் மாநகர், முதலிபாளையம் வழியாக ஒரத்துப்பாளையம் அணையை சென்றடைகிறது. 

காவிரியையே திணறடித்த நொய்யல் ஆற்றைக் காப்பாற்ற களமிறங்கிய இளைஞர் குழு!

ரு காலத்தில் காவிரி ஆற்றையே திணறடித்ததாக நொய்யல் நதி குறித்து வரலாறு பக்கங்களில் எழுதப்பட்டிருக்கிறது. இதன் வேகத்தால், காவிரியின் போக்கே மாறியதாக எல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால், அப்படிப்பட்ட நொய்யல் நதியே இல்லாமல் போகின்ற ஒரு சூழ்நிலையை நாம் வேகமாக உருவாக்கி வருகிறோம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு பேரூர், இருகூர், சூலூர், சோமனுார், மங்கலம், திருப்பூர் மாநகர், முதலிபாளையம் வழியாக ஒரத்துப்பாளையம் அணையைச் சென்றடைகிறது. 

நொய்யல் ஆறு

காவிரியைத் திணறிடித்த நொய்யலை, பெரு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு திணறடித்து வருகின்றனர். சாய நீரைக் கலந்தனர், பிளாஸ்டிக் கழிவுகளைக் கலந்தனர். நொய்யலில் கண்மூடித்தனமாக ஆக்கிரமிப்பு செய்தனர். நொய்யல் நதியை, குப்பைகளால் மூடியதில் பொது மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இவ்வளவு பிரச்னைகளில் சிக்கியுள்ள நொய்யல் நதியை மீட்க, சில தன்னார்வலர்கள் களப்பணி செய்கின்றனர். ஆனால், அவர்களைவிட, இரவு பகல் பாராமல் களப்பணி செய்து களவாடுவது மணல் கொள்ளையர்கள்தான்.

ஆலாந்துறை, மத்வராயபுரம் பகுதிகளில் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதில் அனைத்து அரசுத்துறைகளுக்கும் பங்கிருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, அண்மையில் வெளியான ஒரு வீடியோவில், "போலீஸ்காரங்க முதல் ரெவின்யூ அதிகாரிகள் வரை அனைவருக்கும் காசு கொடுத்துட்டுத்தான் மணல் எடுக்கிறோம்" என மணல் கொள்ளையர்கள் தெரிவித்திருந்தனர். இதனிடையே, நொய்யல் ஆற்று மணலைக் கடத்திய வாகனத்தை பா.ம.க இளைஞரணியினர் கையும் களவுமாகப் பிடித்தனர். ஆனால், கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, அதை விட்டுவிட்டு பா.ம.க-வினர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

Noyyal Meet

இந்நிலையில், நொய்யலை பாதுகாக்கும் முயற்சியாக "நொய்யலைக் காப்போம்" என்று சந்திப்பு நடத்தப்பட்டது. இதில், நொய்யல் பாதுகாப்பு குழு, சிறுவானி விழுதுகள், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய இளைஞர்கள், "நொய்யல் நதி, தனது பயணத்தை ஆரம்பிக்கும் இடத்திலேயே காயப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சிலர்தான் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். நாம், இப்போது ஆரம்பித்தால்தான், இதை மீட்டு, அடுத்த தலைமுறையினருக்கு கொடுக்க முடியும். இப்படியே விட்டால், இனி நொய்யலை எப்போதும் மீட்க முடியாது. எனவே, நாம் அனைவரும் இணைந்து நொய்யலை மீட்க வேண்டும்" என்றனர்.

Sand Theft

சந்திப்பில் பேசிய போலீஸார், "மணல் கொள்ளை சம்பந்தமாகப் பலரை கைது செய்துள்ளோம். வாகனத்தில் வந்தால், கொள்ளையடிப்பது எளிதில் தெரிந்துவிடும். ஆனால், தற்போது கழுதைகள் மூலமாகவும், சைக்கிள் மூலமாகவும் கொள்ளையடிக்கின்றனர். இவர்களைப் பிடிக்க வேண்டுமென்றால் பொது மக்களின் ஒத்துழைப்பும் தேவை. அவர்கள் அனைத்துக்கும் தயாராக இருக்கின்றனர். இனி, மணலைக் கொள்ளையடிக்க, லாரியோ, கழுதைகளோ வந்தால். அவற்றைத் திருப்பி கொடுக்க மாட்டோம். மாறாக, அவற்றை விற்று, அந்தப் பணத்தை நொய்யலை மீட்பதற்குக் கொடுப்போம். மணல் கொள்ளையைத் தடுக்க, காவல்துறையும், வருவாய்துறையும் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட உள்ளோம்" என்றனர்.

இந்நிலையில், நொய்யலில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது, குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், மணல் கொள்ளையில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், நடவடிக்கை எடுக்கத் தவறும் போலீஸார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, இதுபோன்ற சட்ட விரோத செயல்கள் குறித்து 94458-46282 என்ற எண்ணுக்கு அழைத்து, பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...

1. மணல் கொள்ளையர்கள் மீது கண்டிப்பாக குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தவேண்டும்.

2. பொதுமக்களும் தங்கள் தேவைக்காகவும், பொது தேவைக்காகவும் நொய்யலில் இருந்து மணலை எடுக்கக் கூடாது.

3. மணல் கொள்ளைக்கு பயன்படுத்தும் கழுதைகளையும் மற்றும் அனைத்து வகையான வாகனங்களையும் பறிமுதல் செய்யவேண்டும்.

4. பொதுமக்கள், காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் இணைந்து ஒரு கண்காணிப்பு குழு அமைத்து கொள்ளையர்களை பிடிக்க வேண்டும்.

5 .மேலும் சமீபத்தில் மணல் திருட்டில் ஈடுபட்டு பீளமேடு காவல்நிலையத்தால் சிறைபிடிக்கப்பட்ட லாரி உரிமையாளர் மற்றும் அதனைச் சார்ந்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

நொய்யலை மீட்டெடுக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்