கம்ப்யூட்டர், ஃபேன், கடிகாரம்... 2 லட்சம் பொருள்களுடன் அரசுப் பள்ளிக்கு வந்த சீர்வரிசை!

அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை வலியுருத்தியும், பொது மக்களுக்கு அரசு பள்ளிகள் மீது நல்ல எண்ணங்களை ஏற்படுத்தவும், சிதம்பரம் அருகே அரசு பள்ளியில் கல்வி சீர் ஊர் கூடி திரு விழா நடந்தது.

சிதம்பரம் அருகே உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வலியுறுத்தியும் பொது மக்களுக்கு அரசுப் பள்ளிமீது நல்ல எண்ணங்களை ஏற்படுத்தவும், தன்னார்வ அமைப்புகள் பள்ளிக்கு வழங்கிய பொருள்களைக் கிராம மக்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துவரும் ஊர் கூடி கல்விச் சீர் திருவிழா என்ற வித்தியாசமான விழா நடந்தது.

அசத்திய கிராமத்து பெண்கள்

தமிழகத்தில் மக்களின் ஆங்கிலக் கல்வி மோகத்தால் அரசுப் பள்ளிகளில் நாளுக்கு நாள் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல பள்ளிகள் மூடு விழா காணும்நிலை உள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க வலியுருத்தி மாணவர் சேர்க்கை விழிப்பு உணர்வுப் பேரணி, ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று மாணவர்கள் சேர்க்கையில் ஈடுபடுவது எனப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நந்திமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இயற்கை பேரிடர்கள் வரும் போதெல்லாம் பாதிக்கப்படும் இந்தக் கிராமம். ஏழை, எளிய விவசாயிகள் அதிகம் வசிக்கும் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய கிராமம். 

இந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியராகப் பணிபுரியும் சத்தியசீலன் என்ற பட்டதாரி ஆசிரியர் பள்ளியை மேம்படுத்தவும் மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை ஆர்வமாக எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தியும் பொது மக்களுக்கு அரசுப் பள்ளிகள்மீது நல்ல எண்ணங்களை ஏற்படுத்தவும் பள்ளிக்கு தன்னார்வ அமைப்புகள் வழங்கிய கம்ப்யூட்டர், ஃபேன், கடிகாரம் தேசிய தலைவர்களின் படம் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பொருள்களைப் பெண்கள், கிராம பொதுமக்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாகக் கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாக எடுத்து வந்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தினார்கள். பின்னர், பள்ளியில் நடந்த விழாவில் காட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ முருகுமாறன், சிதம்பரம் எம்.எல்.ஏ பாண்டியன், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், கிராம முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள பள்ளியில் நடந்த இந்த ஊர் கூடி கல்விச் சீர் திருவிழா அந்தக் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!