நிர்மலா தேவி வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்! டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவு

மாணவிகளைத் தவறாக வழிநடத்தியதாகப் பேராசிரியை நிர்மலா தேவி மீது தொடரப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். 

நிர்மலா தேவி

அருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றும் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்குத் திருப்ப முயன்றது தொடர்பான ஆடியோ வெளியாகி, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, நிர்மலா தேவி மீது கல்லூரி நிர்வாகம் சார்பில் காவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவர்மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரைக் கைது செய்த அருப்புக்கோட்டை போலீஸார், அவரிடம் நேற்று இரவு முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயர் கல்வித்துறையில் இதுபோன்ற விவகாரங்கள் நடைபெறுவதைக் கண்டித்துள்ள எதிர்க்கட்சிகள், உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தின. மேலும், இந்தப் புகார் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானத்தை உயர் மட்ட விசாரணை நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். இந்தநிலையில், பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதில், வழக்கின் முக்கியத்துவம் கருதி அருப்புக்கோட்டை நகரக் காவல்நிலையத்திலிருந்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு வழக்கு மாற்றப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!