வெளியிடப்பட்ட நேரம்: 15:41 (17/04/2018)

கடைசி தொடர்பு:15:56 (17/04/2018)

நிர்மலா தேவியிடம் ஆலோசனை கேட்டதா போலீஸ்?

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி நேற்று கைது செய்யப்பட்டு தற்போது விசாரிக்கப்பட்டு வரும் பரபரப்பான சூழ்நிலையில்,

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஒரு பதவியை அடைவதற்காக மாணவிகளைப் பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கும் ஆடியோ ஒன்று வெளியானது. அவரின் மீது புகார் எழுந்ததையடுத்து நேற்று (16- ம் தேதி) கைதுசெய்யப்பட்ட நிர்மலா தேவியிடம், போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், நிர்மலா தேவியின் கைதுக்குப் பின் ஆளுநர் அலுவலகம், உயர்கல்வித் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகத்திலுள்ள முக்கியமான புள்ளிகள் உள்ளிட்டோர் ஆடிப்போயுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதில், பலரும் நிர்மலா தேவியின் போன் கான்டாக்ட் லிஸ்ட்டில் இருக்கிறார்களாம். 

பேராசிரியர் நிர்மலா தேவி பேசிய ஆடியோ விவகாரம், இந்த அளவுக்குப் பெரிதாகக் கிளம்பும் என்று கல்லூரி நிர்வாகம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதனால்தான், அவர் இப்படிப் பேசியது பற்றி நான்கு மாணவிகளும் புகார் தெரிவித்தவுடன், வேறு வழியில்லாமல், ``ஒரு ஃபார்மாலிடிக்காகத்தான் சஸ்பெண்ட் செய்கிறோம்; அதற்குப்பின் வழக்கம்போல் கல்லூரிக்கு வரலாம்'' என்று அவரை தாஜா செய்து, விடுப்புகொடுத்து அனுப்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

நிர்மலா தேவி விசாரணை

தமிழகத்தில் ஜீவாதார பிரச்னைகள் எவ்வளவோ நடந்தபோது வாய் திறக்காத ஆளுநர், இந்த விவகாரம் கிளம்பியவுடன் உடனே விசாரணைக் கமிட்டி ஒன்றை நியமித்து உத்தரவிடுகிறார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரை டெல்லியில் இருந்துகொண்டே விசாரணைக் கமிட்டியை நியமிக்கிறார். உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர், இந்தப் பிரச்னை பற்றி விசாரணை நடத்தப்படும் என்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது என்கிறார்கள் கல்வியாளர்கள்.

இந்த வழக்கு விசாரணை நியாயமாக நடத்தப்பட்டால், பிரபலமான பலர் அம்பலப்பட்டுப் போவார்கள் என்று சொல்லப்பட்டாலும், விசாரணை நியாயமாக நடைபெறுமா என்பது சந்தேகமாக இருக்கிறது எனக் கல்லூரி மாணவர்கள் கூறுகிறார்கள். அதற்குக் காரணமாக நேற்று அருப்புக்கோட்டையில் நிர்மலா தேவியை மீடியாக்களுக்குத் தெரியாமல் கைதுசெய்ய காவல் துறை நடத்திய நாடகமே பல சந்தேகங்களை எழுப்புவதாகக் கூறுகிறார்கள். 

நேற்று மதியம் வரையிலும் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் வாங்குவதாக அங்கேயே நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்த காவல் துறை அதிகாரிகள், ஊடகங்களையும் அங்கேயே வைத்திருந்தனர். நிர்மலா தேவி விருதுநகர் எஸ்பி ஆபீஸில் புகார் கொடுக்கச் சென்றுள்ளதாக ஒரு தகவலை பரப்பி டைவர்ட் பண்ணவும் செய்தனர்.

அதேநேரம் அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியில் இருக்கும் நிர்மலா தேவியின் வீட்டுக்குச் சென்று யாருக்கும் தெரியாமல் அவரைக் கைது செய்யும்வேளையில் காவல் துறை இறங்கிய நிலையில், இது தெரிந்து ஊடகத்தினர் அங்குபோய்க் குவிந்தனர். நிர்மலா தேவி, `ஊடகத்தின் முன் கைதாக மாட்டேன்' என்று அருப்புக்கோட்டை இன்ஸ்பெக்டர் பாலமுருகனிடம் கூறியுள்ளார். இந்த நிலையில், காவல் துறையால் ஊடகத்தினரை அங்கிருந்து விரட்ட முடியவில்லை. நேரம் போய்க்கொண்டிருந்தது. வீட்டை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு இருந்த நிர்மலா தேவியிடம் காவல் துறை அதிகாரிகள் பேசிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், நிர்மலா தேவி அவமானம் தாங்காமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுவிட்டாரோ என்ற சந்தேகமும் எழுந்தது.  

நிர்மலா

இப்படியே நேரம் கடந்துகொண்டிருந்த நிலையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஊடகத்தினரை அழைத்து, ``நாங்கள் பூட்டை உடைத்து திறக்கப் போகிறோம்; அதை நீங்கள் பதிவு செய்யக் கூடாது. அதனால், கொஞ்ச தூரம் தள்ளி நின்றுகொள்ளுங்கள்; நாங்கள் கதவை உடைத்ததும், உங்களை அழைத்து நிர்மலா தேவியைக் காட்டுகிறோம்; படம் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால், இன்றைக்குக் கைது செய்ய முடியாத நிலை ஏற்படும்'' என்று சாமர்த்தியமாகப் பேசி, ஊடகத்தினத்தைத் தூரத்தில் நிற்கவைத்தனர். 

அவர்கள் அங்கு சென்றபிறகு, நிர்மலா தேவியின் வீட்டின் முன்பு போலீஸ் வாகனத்தைக் கொண்டுபோய் நிறுத்தினர். அத்துடன் வாகனத்தின் இரண்டு பக்கமும் போலீஸைச் சுற்றி நிறுத்தினர். இதனால், ஊடகத்தினருக்கு அங்கு நடப்பது எதுவும் தெரியவில்லை. அடுத்த சில நிமிடங்களில், நிர்மலா தேவியே  கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தார். வீட்டைப் பூட்டிவிட்டு வாகனத்தில் ஏறினார். அவர் முகம், எந்த கேமராவிலும் சிக்கிவிடாத வகையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நிர்மலா தேவியை ஒரு வி.ஐ.பி.போல் பாதுகாப்பாகக் காரில் ஏற்றியதுடன், போலீஸாரும் வாகனத்தை உடனே வேகமாகக் கிளப்பினர். இதன்மூலம் போலீஸாரும் நிர்மலா தேவிக்கு உடந்தையாகச் செயல்பட்டதை ஊடகத்தினர் நேரில் அறிந்துகொண்டனர். அதை ஃபாலோ அப் செய்ய ஊடகத்தினர் வந்துவிடக் கூடாது என்பதற்காக, நேராகப் போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்லாமல் நகருக்குள் பல முறை சுற்றி, பிறகுதான் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுவந்தார்கள். 

மோசமான செயலில் ஈடுபட்ட ஒரு நபரைக் கைதுசெய்வதற்கு, காவல் துறையினர் அந்த நபரிடமே ஆலோசனை கேட்டு செயல்பட்ட விதம், இந்த வழக்கு விசாரணை எப்படிச் செல்லும் என்பதை யூகிக்க வைத்துவிட்டது. இந்த விஷயத்தில் அவசரஅவசரமாக ஆளுநர் அமைத்த விசாரணைக் கமிட்டிக்கு, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் கண்டனக் குரல்களைப் பதிவுசெய்து வருகிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்