`ஏழு கோடி தமிழ் மக்களின் குரல்' - ஜனாதிபதிக்குச் சென்ற 7,000 தபால்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க-வினர் ஜனாதிபதிக்குத் தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினார்கள்...

`காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தாங்கள் நீதியை நிலைநாட்டி நியாயம் வழங்குவீர்கள் என்பதே எங்கள் உறுதியான இறுதியான நம்பிக்கை’ எனக் கோரிக்கை விடுத்து எழுதப்பட்ட 7,000 தபால் அட்டையைத்  தி.மு.க-வினர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் உடனே அமைக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் பஸ், ரயில் மறியல், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுதல் எனப் பல கட்ட போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

'ஏழு கோடி தமிழ் மக்களின் குரல்'- ஜனாதிபதிக்கு சென்ற தபால்கள்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்காகக் காவிரி உரிமை மீட்பு நடைப்பயணத்தைத் திருச்சி முக்கொம்பில் தொடங்கி கடலூரில் முடித்தார். அப்போது, ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்'' என்றார்.

அதேபோல், தஞ்சாவூர் தி.மு.க-வினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தலைமை தபால் நிலையத்திலிருந்து குடியரசுத் தலைவருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினர். இதற்காகக் கூடிய தி.மு.க-வினர் மத்திய அரசுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர். உடனே மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் காவிரி உரிமை மீட்புப் பயணம் என அச்சிடப்பட்ட தபால் அட்டையில், மேதகு குடியரசுத் தலைவர் ராஷ்டிரபதி பவன், நியூ டெல்லி என்ற முகவரி எழுதப்பட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தொடர்ந்து நடத்தி வரும் மாபெரும் போராட்டங்களின் தன்மையைத் தாங்கள் நன்கு அறிவீர்கள்.

'ஏழு கோடி தமிழ் மக்களின் குரல்'- ஜனாதிபதிக்கு சென்ற தபால்கள்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து மத்திய அரசு உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமும் குடிநீர் ஆதாரமும் பாதுகாக்கப்பட, தமிழகத்தின் நதிநீர் உரிமை மீட்கப்பட, தாங்கள் இனியும் காலம் தாழ்த்தாமல், விரைந்து ஆவண செய்யுமாறு ஏழு கோடி தமிழ் மக்களின் இதயக் குரலாய் தங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். தாங்கள் நீதியை நிலைநாட்டி நியாம் வழங்குவீர்கள் என்பதே எங்கள் உறுதியான இறுதியான நம்பிக்கை என எழுதப்பட்டு கையொப்பம் போடப்பட்ட 7,000 தபால் அட்டையைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி போராட்டம் நடத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!