வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (17/04/2018)

கடைசி தொடர்பு:18:40 (17/04/2018)

ஆளுநரின் பொறுப்புகள் ஸ்டாலினுக்குத் தெரியுமா? - கேள்விகேட்கும் பொன். ராதாகிருஷ்ணன்

பேராசிரியர் நிர்மலா விவகாரத்தில் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் பொய்யான விஷயங்களைப் பரப்புவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

நிர்மலா தேவி விவகாரத்தில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்யான விஷயங்களைப் பரப்புவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

பொன் ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை மலைப்பகுதியான உரப்பாறை பகுதி காணி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே கவர்னர் நடவடிக்கை எடுத்தது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் அவரைப் பாதுகாக்கும் விதமாக ஆளுநர் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே? எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``ஆளுநருக்கு என்னென்ன பொறுப்புகள் இருக்கிறது என ஸ்டாலினுக்குத் தெரியுமா? அவரது பொறுப்பின் அடிப்படையில் அவர் செயல்பட வேண்டிய தேவை இருந்ததால் செயல்பட்டிருக்க முடியும்.

தி.மு.க. தமிழகத்தில் இன்றைக்கு எந்த விசயத்தையும் பேசுவதற்கு அருகதையற்றுபோய் நின்றுகொண்டிருக்கிறது. தயவுசெய்து தமிழ்நாட்டு மக்களை கொச்சைப்படுத்தாதீர்கள். மாநிலத்தில் ஒரு அரசாங்கம் இருக்கிறது, அவர்கள் அதை பார்த்துக்கொள்வார்கள். எதுவந்தாலும் முதலமைச்சரிடமும், ஆளுநரிடமும் போய் சொல்லுங்கள். உங்களுக்கு அதற்கான முழு அதிகாரம் இருக்கிறது. நேற்று முன்தினம் ஆளுநரைப் போய் பார்த்திருக்கிறார்கள். இப்போதும்போய் சொல்லுங்கள். பொய்யான விஷயங்களை எதற்காகப் பரப்பிக்கொண்டிருக்கிறீர்கள்'' என்றார்.