ஆளுநர் மாளிகை அருகே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவதாகக் கூறி, அதற்குக் கண்டனம் தெரிவித்து, ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.  

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்

சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பாகத் திரண்டிருந்த புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர், அங்கிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாகச் சென்று, முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். பனகல் மாளிகை முன்பாகத் திரண்ட அவர்களை, போலீஸார் தடுத்து நிறுத்தினர். 

வட மாநிலங்களில் பட்டியலின - பழங்குடியின மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை செய்த போலீஸ் மற்றும் சங்பரிவாரங்களுக்குக் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சாதிய வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புக் காவல் நிலையம், சிறப்பு நீதிமன்றங்களை உடனே அமைக்க வேண்டும் என்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் பதியப்படும் வழக்குகளை 120 நாள்களுக்குள் விசாரித்து முடிக்க ஆணையிட -  வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் அதிகாரிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கவும் வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.  

முழக்கமிட்டபடியே ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நகல் தாளைக் கிழிக்க முற்பட்டனர். அதைத் தடுத்து நிறுத்தியபோது போலீஸாருக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

ஆளுநர் மாளிகை முற்றுகை

பின்னர், கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்கள் அனைவரும் சைதை ராஜ் திரையரங்கம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் பிடித்து வைக்கப்பட்டனர், 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!