Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"ஆதாரங்களை அழித்து வா..!" களமிறங்கிய மூன்று படை... நிர்மலா தேவி சர்ச்சையின் மொத்த பின்னணி!

நிர்மலா தேவி

``ஆதாரங்களை அழித்து வா..." என்கிற அசைன்மென்ட்டுடன் மூன்று படைகள் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளன. கவர்னர் பன்வாரிலால் புரோகித் மதுரையில் கலந்துகொண்ட விழாவில் தேவாங்கர் கல்லூரியின் கணிதத் துறையின் உதவி பேராசிரியை நிர்மலா தேவி சர்வசாதாரணமாக நடமாடியிருக்கிறார். கவர்னர் அருகில் போய் போட்டோ எடுப்பது, குரூப் போட்டோவில் போஸ் கொடுப்பது...என்று கவர்னருக்கு அறிமுகமானவர் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும் வகையில் நடந்திருக்கிறார். குறிப்பாக, அவரது ஆடியோ பேச்சில்,  "....கவர்னர், தாத்தா இல்லை..." என்கிற டயலாக் வருகிறது. இதன் உள் அர்த்தம் என்ன? என்பது பற்றி சர்ச்சை கிளம்பியுள்ளது. இதுபற்றி விரிவான பதில் அளிக்க கவர்னர் இன்று மீடியாக்களைச் சந்திக்கவிருக்கிறார்.  

அருப்புக்கோட்டை கல்லூரியின் கணிதத்துறை மாணவிகளை கேன்வாஸ் செய்யும் வகையில், பலமுறை முயன்றிருக்கிறார் நிர்மலா. இவரின் டார்ச்சர் தாங்கமுடியாமல், மாணவிகள் வேறு யாரிடமோ முறையிட...அப்படித்தான் ஆடியோ பதிவு திட்டம் அரங்கேறியிருக்கிறது. இது தெரியாமல், நிர்மலா உளறிக்கொட்ட...தற்போது கைதாகிவிட்டார். 

ஆதாரங்களை அழிக்க முதல் படை.?

முதல்வர் எடப்பாடியின் போலீஸ் துறை. அருப்புக்கோட்டை லோக்கல் போலீஸார் நிர்மலாவை ஏப்ரல் 16ம் தேதி மாலை முதல் 17ம் தேதி மாலை வரை துருவித் துருவி விசாரித்தனர். உதவி பேராசிரியர் உள்ளிட்ட சிலரை அடுத்தகட்ட விசாரணைக்காக அழைக்கத் தயாரானார்கள. அடுத்தகட்ட ஆதாரம் சேகரிப்பு நடவடிக்கையில் இறங்கப்போக...திடீரென வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸுக்கு மாற்றிவிட்டார் டி.ஜி.பியான ராஜேந்திரன். பொதுவாக ஒரு பிரச்னையை நீர்த்துப்போக வைக்க நினைத்தால், அதை சி.பி.சி.ஐ.டி. போலீஸிடம் ஒப்படைப்பார்கள். அதுதான் நிர்மலா விவகாரத்திலும் நடந்திருக்கிறது. உள்ளூர் போலீஸ் விசாரணைப் பற்றி கேட்டபோது, ``எந்த ஒரு தயக்கமும் இல்லாமல், நடந்ததைத் தெளிவாகப் பேசினார் நிர்மலா. `அந்த ஆடியோ வெளியானதன் பின்னணியில் உள்ளவர்களை விடமாட்டேன்' என்றார். பல்கலைக்கழகத்தில் செல்வாக்குள்ள சிலரைப்பற்றி சொல்லியிருக்கிறார். இவர் சொல்வதில் எது உண்மை? எது பொய்? என்று அறிய மேலும் சிலரை அழைத்து விசாரிக்கவேண்டியுள்ளது. அதற்காக உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டோம். அதற்குள் சி.பி.சி.ஐ.டி. போலீஸுக்கு விசாரணையை மாற்றிவிட்டார்கள்", என்றார்கள். 

இரண்டாவது படை?

காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர், ஐந்து பேர் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்திருக்கிறார். இவர்கள் அருப்புக்கோட்டையில் முகாமிட்டிருக்கிறார்கள். நிர்மலாவின் ஆடியோ பேச்சில், துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக முக்கிய பிரமுகர்களிடம் செல்வாக்கு உள்ளதாகக் கூறுகிறார். இப்படியிருக்கும்போது, குற்றத்தில் தொடர்பு இருக்கிறவர்கள் என்கிற சந்தேக பேனரில் வருகிற பல்கலைக்கழக பிரமுகர்கள் ஒருபுறமிருக்க...அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஐவரை விசாரணைக் குழுவாக அமைத்திருக்கிறார்கள். 

மூன்றாவது படை?  

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் கவர்னர் பன்வாரிலால் புரோகித். கிண்டி ராஜ்பவனில் பணிபுரியும் உயர் அதிகாரியின் சிபாரிசில்தான் சந்தானம் நியமிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லுகிறார்கள். கவர்னர் பெயர் இந்த விவகாரத்தில் அடிபடுவதால், நிர்மலா தேவி போலீஸிடம் என்ன பேசினார்? என்ன ஆதாரங்களை கொடுத்தார்? என்பதை அறிந்துகொள்வதில் பல்கலைக்கழக குழுவினரும், உயர்மட்ட விசாரணை அதிகாரி சந்தானமும் தீவிரம் காட்டப்போகிறார் பல்கலைக்கழக கீழ் மட்டத்தில் பணிபுரியும் யாரையோ பலிகொடுத்து மேல்மட்ட பிரமுகர்களைக் காப்பாற்றும் முயற்சி அரங்கேறி வருவதாகவே மதுரையிலுள்ள கல்லூரி ஆசிரியர்கள் மத்தியில் பேசப்படுகிறது. 

இதேநேரம், `சி.பி.ஐ. விசாரணை வேண்டும்' என்று எதிர்க்கட்சிகளும், `கவர்னரை மத்திய அரசு திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்' என்று இன்னொரு தரப்பினரும் குரல்கொடுத்து வருகிறார்கள். 

மதுரையில் உள்ள சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ``கவர்னர் செய்தது தவறு. போலீஸ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதை குழப்பிவிடும் நோக்கில் இவராக ஒரு அதிகாரியை நியமிப்பது நியாயமானதாகத் தெரியவில்லை. பல்கலைக்கழகம் தரப்பில் நியமிக்கப்பட்டிருப்பவர்கள், எப்படி உண்மையை வெளியிடுவார்கள்? எல்லாமே கண்துடைப்பு விஷயமாகத்தான் தெரிகிறது" என்கிறார். 

ஆடியோ எப்படி லீக் ஆனது? 

நிர்மலா தேவிபல்வேறு சேனல்களைச் சொல்கிறார்கள். ஆனால், விஷயம் அதுவாக வெளியாக...அதன்பிறகுதான், அது ஊதி பெரிசாக்கப்படுவதாக ராஜ்பவன் வட்டாரம் சொல்கிறது. குறிப்பாக, நிர்மலா தேவி, கவர்னரைப்பற்றி பேசியதுதான் பற்றி எரிகிறது. கடந்த சில மாதங்களாகவே, கிண்டியில் உள்ள ராஜ் பவனில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் வெளி ஆட்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்து வந்தது. ஃபர்னிச்சர் பொருள்கள் வாங்கப்பட்டதில் போலி ரசீதுகள் தயாரித்து முறைகேடு நடந்திருப்பதாக கிண்டி போலீஸில் புகார் பதிவானது. போலீஸார் விசாரித்து, அடையாரில் ஃபர்னிச்சர் கடை நடத்தி வரும் ஒரு பிரமுகரைப் பிடித்தனர். அவர் சொன்ன தகவல்களின் அடிப்படையில், சில நாள்களுக்கு முன்பு ராஜ்பவன் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த ஊழலில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவர்களில் சிலரை வேண்டுமென்றே விசாரணை வளையத்துக்குள் கொண்டுவராமல் பாலிடிக்ஸ் நடப்பதாக ஒரு கோஷ்டியினர் மத்தியில் புகைச்சல் இருந்துவந்ததாம். இந்தக் கோஷ்டி பூசலில் எதிரொலியாக, உதவி பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் முதலில் வெளியே லீக் ஆகியிருக்கலாம் என்றும் தலைமைச் செயலக அதிகாரிகள் மத்தியில் பேசப்படுகிறது. 

தமிழக அரசு - மத்திய அரசு இடையே அடிக்கடி நடந்து வரும் மிரட்டல் பாலிடிக்ஸ் காட்சிகளை ஆடியோவுக்கு முன்பு - ஆடியோவுக்குப் பின்பு.... என்று வரிசைப்படுத்தலாம். 

ஆடியோவுக்கு முன்பு...நடந்த காட்சிகள்..

`தமிழகத்தில் நடப்பது எடப்பாடி அரசு அல்ல! மோடியின் எடுபிடி அரசு' என்று டி.டி.வி. தினகரன் அடிக்கடி மேடையில் கமென்ட் அடித்து வருகிறார். தென் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்தபோது, மோடியின் அட்வைஸ் படி, தமிழக அரசு அந்தக் கூட்டத்துக்குப் போகாமல் புறக்கணித்தது. காவிரி பிரச்னையை கர்நாடகா தேர்தல் முடியும் வரை ஒரு லெவலுக்கு மேல் போகாமல் தமிழகத்தில் பார்த்துக்கொள்ளும்படி டெல்லி மேலிடத்திடமிருந்து வந்த சிக்னலை அடுத்து கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறது தமிழக அரசு. மத்திய அரசின் திட்டங்களான நியூட்டிரினோ, ஹைட்ரோ கார்பன், கெயில் திட்டம்.. போன்றவற்றை அசுர வேகத்தில் மத்திய அரசு நிறைவேற்ற மறைமுக ஆதரவை தமிழக அரசு வழங்கி வந்தது. இருந்தாலும், தமிழக அரசுக்குத் தரவேண்டிய மத்திய நிதியைச் சரிவர ஒதுக்கவில்லை என்பதில் ஆரம்பித்து பலவித கோபங்கள் இருந்தன. இந்த நேரத்தில் தமிழக அரசை அதிரவைக்கும் ஒரு தகவலை தமிழக உளவுத்துறை சொன்னது. எப்படியும் எடப்பாடி அரசைக் கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சியை அடுத்த சில மாதங்களில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆட்சியின் நாள்கள் எண்ணப்படுகின்றன என்பதுதான் அந்தத் தகவல். இதைக்கேட்ட எடப்பாடி கடுப்பானார். தலைக்கு மேல் வெள்ளம் போனபிறகு முழம்போனால் என்ன?.. முழுக்கப் போனால் என்ன? என்று கேட்டிருக்கிறார் சீனியர் அமைச்சர்களிடம்! 

தமிழக முதல்வராக ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழக அரசின் கைப்பிடிக்குள் இருந்தார். ஜெயலலிதா இறந்த பிறகு, கைப்பிடியை விட்டு விலகினார் கவர்னர். மத்திய அரசின் ரிமோட் கன்ட்ரோலாக வெளிப்படையாகச் செயல்பட ஆரம்பித்தார். தமிழக அரசுக்குப் பல விஷயங்களில் டார்ச்சர் கொடுத்தார். இடையில், வித்தியாசாகர் ராவ் திடீனெ மாற்றப்பட்டு புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித். இவர் மத்திய அரசின் டார்ச்சர் ஏஜென்ட்டாக சாட்டையைச் சுழற்றினார். தமிழகத்தின் ஊர் ஊராக விசிட் போய் மாவட்ட லெவலில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதை முதல்வர் எடப்பாடி விரும்பவில்லை என்றாலும், மத்திய அரசின் பிடியில் சிக்கியுள்ள எடப்பாடி.. ரெய்டு அஸ்திரங்களை நினைத்துப் பார்த்து மிரண்டு போய் `ஏன் கவர்னர் விசிட் போகலாமே?' என்றெல்லாம் சாக்குப் போக்கு சொல்லி சமாளித்தார். இடையில், தமிழகத்தின் முன்னணி மீடியா அதிபர்களை அழைத்து ராஜ்பவனில் டீ & பார்ட்டி கொடுத்தார் கவர்னர். அப்போது அவர் பேசிய பேச்சிலிருந்து எடப்பாடி ஒன்றைப் புரிந்துகொண்டார். விரைவில் கவர்னர் ஆட்சி வரப்போகிறது. அதற்கான லாபியைச் செய்து வருகிறார் என்பதுதான் அது! இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல, தமிழகத்தில் புதியதாக தொழில் தொடங்க வருகிறவர்களிடம் எடப்பாடியும் அவரது சக அமைச்சர்களும் கமிஷன் கேட்டு அலைய விடுவதாகப் புகார் வந்ததை மனதில் வைத்துக்கொண்டிருந்த கவர்னர், தொழில் அதிபர் கூட்டம் ஒன்றில் பேசும்போது, `ஏதாவது சங்கடம் என்றால், இனி தொழிலதிபர்கள் என்னை நாடலாம். நான் உங்களுக்கு உதவுகிறேன்' என்கிற உத்தரவாதத்தைப் பகிரங்கமாக அறிவித்தார். இது எடப்பாடியை தூக்கிவாரிப்போட்டது. இப்படி நாளுக்கு நாள் `ஷாக்'குகளை கவர்னர் கொடுத்துவந்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான், டெல்லி மீடியாக்களில் தென் மாநில கவர்னர் ஒருவர் பாலியல் புகாரில் சிக்கியுள்ளதாகவும், இதுபற்றி மத்திய உள்துறை விசாரிப்பதாகவும் செய்தி வெளியானது. இவரா..அவரா? என்கிற விவாதங்கள் நடந்தன. திடீரென அந்தப் பேச்சு அமுங்கிப்போனது. இடையில் என்ன நடந்தது என்பது சஸ்பென்ஸாக இருந்தது. இந்த நிலையில்தான், அருப்புக்கோட்டை உதவி பேராசிரியர் நிர்மலாவின் ஆடியோ பேச்சு வெளியாகியுள்ளது.

பன்வாரிலால் புரோகித்

ஆடியோவுக்குப் பின்பு...நடக்கும் காட்சிகள்...

`இங்கே, அடிச்சா..அங்கே, வலிக்கும்' என்கிற பாணியில் இரண்டு முக்கிய முடிவுகளை எடப்பாடி கையில் எடுத்தார் என்கிறார்கள் அ.தி.மு.க முக்கியத் தலைவர்கள். ஒன்று, இப்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. ஆட்சியைக் கலைத்தால்... ``காவிரிப் பிரச்னையில் குரல்கொடுத்ததால், கலைத்தனர்" என்கிற அவச்சொல்லுக்கு மோடி அரசு ஆளாகட்டும். இரண்டு... பாலியல் புகாரில் கவர்னர் சிக்கியுள்ளார். இந்த விஷயம் பெரிதாகும். கிண்டி ராஜ்பவனில் முடங்கிக்கிடக்க வேண்டும். இதை எதிர்பார்த்து, கவர்னரை மிரட்டும் விதமாக, சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியை நிர்மலா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு தரப்பில் தெரிவித்துள்ளது. விசாரணையையும் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது. 

காவிரிப் பிரச்னையில் கிராம லெவலில் விவசாய சங்கத்தினர், லெட்டர்பேடு கட்சிகள், அரசியல் கட்சிகள்... போர்வையில் வெளி இயக்கங்களில் பயிற்சி பெற்ற சிலர்  ஊடுருவியுள்ளனர். இவர்கள் போராட்டங்கள் எனும் தீயில் மேலும் எண்ணெய்யை ஊற்றி எரிய விடுவார்கள். அவர்களின் பெயர் லிஸ்ட் உள்ளது. `முன்னெச்சரிக்கையாக கைது செய்யுங்கள்' என்று மத்திய அரசு தரப்பில் கடுமையான பிரஷர் தரப்பட்டது. ஆனால், எடப்பாடி அரசு, `அதெல்லாம் வதந்தி' என்று சொல்லி புறந்தள்ளியது. எடப்பாடி அரசின் `புரட்சித் தலைவி அம்மா' என்கிற அதிகாரபூர்வ நாளேட்டில் மத்திய அரசைக் கடுமையாக தாக்கி `சித்ரகுப்தன்' கவிதை எழுதினார். இதை பார்த்து ஓ.கே. செய்தவர் எடப்பாடி என்கிறார்கள் ஆளுங்கட்சி பிரமுகர்கள். தமிழகத்தில் காலியாக இருந்த சில பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை கவர்னர் நியமித்தார். குறிப்பாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சூரப்பாவை கவர்னர் நியமித்தபோது, தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டித்தார். `காவிரி பிரச்னை பற்றி எரியும் போது இந்த நியமனம் தொடர்பாக எங்களுடன் கவர்னர் பேசவில்லை. அவராகத்தான் நியமித்தார்' என்று குட்டை போட்டு உடைத்தார். இதே கோணத்தில் இன்னொரு அமைச்சர் பாண்டியராஜனும் பேசினார். அதேபோல், இதுவரை மத்திய அரசுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், துணிச்சலாக எதிர்த்து பேசினார்..." `ஸ்கீம்' என்கிற வார்த்தைக்கு அர்த்தம் மத்திய அரசுக்குத் தெரியவில்லை என்றால், போய் டிக்ஸனரியைப் பார்க்க வேண்டியதுதானே?" என்றார்.   

இப்படியாக...தமிழக அரசியல் டாப் கியரில் போய்க்கொண்டிருக்கிறது. மோடி என்ன செய்வார்? எடப்பாடி அடுத்து என்ன செய்வார்? என்பதுதான் அடுத்தகட்ட கேள்வி?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement