வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (17/04/2018)

கடைசி தொடர்பு:21:00 (17/04/2018)

`ஸ்டெர்லைட் நிர்வாகம் டீல் பேசியதா?’ பொன்னாரை சாடும் தினகரன்

"மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, தற்காலிக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்தான் இந்த ஆலைக்கான விரிவாக்கத்துக்கு அனுமதி அளித்ததாகச் சொல்கிறார்கள்" என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து தினகரன் பேட்டி

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தூத்துக்குடியில் நடைபெற உள்ள கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த டி.டி வி.தினகரன் செய்தியாளர்களிடம், "ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் இருவேறு கருத்து இருக்க வாய்ப்பில்லை. இருவருக்கும் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள். இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, தற்காலிக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்தான் இந்த ஆலைக்கான விரிவாக்கத்துக்கு அனுமதி அளித்ததாகச் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி மக்கள் விரோத, துரோக ஆட்சியாகவும், மத்திய அரசின் எடுபிடி அரசாகவும்தான் உள்ளது.  நிலம், நீர், காற்று எனப் பஞ்ச பூதங்களுக்கும் கேடு விளைவித்து வருகிறது இந்த ஸ்டெர்லைட் ஆலை. இதன் விரிவாக்கத்தை எதிர்த்தும், தற்போது செயல்பட்டு வரும் முதல் யூனிட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த அரசு அனுமதி அளிக்கவில்லை. நாங்கள், இந்த ஆலைக்கு எதிராகப் பொதுக்கூட்டம் நடத்தகூட காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மூலம் அனுமதி பெற்றுதான் பொதுக்கூட்டம் நடத்துகிறோம். தற்போதைய சூழலில், "என்னிடம் ஸ்டெர்லைட் நிர்வாகம் டீல் பேசியது" என  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது தேவையில்லாதது. மத்திய அமைச்சரவையில் இருக்கும் அவர்தான், மக்களின் போராட்டத்தை அரசுக்கு எடுத்துச் சொல்லி ஆலையை மூட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இந்த ஆலை நிரந்தரமாக மூடப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்" என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க