Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`நிர்மலா தேவியைப் பார்த்ததே இல்லை; காவிரிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்!’ - ஆளுநரின் முதல் செய்தியாளர் சந்திப்பு

மாணவிகளைத் தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால்

தவறான செயலுக்கு அழைக்கும் விதமாக மாணவிகளுடன் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் நிர்மலா தேவி மீதான குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக உயர்மட்ட விசாரணை குழுவை ஆளுநர் பன்வாரிலால் நியமித்துள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான அந்த விசாரணைக்குழு விரைவில் பேராசிரியையிடம் விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே, போலீஸ் விசாரணை நடத்திவரும் நிலையில் ஆளுநரின் விசாரணை எதற்காக என ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் சந்தேகம் எழுப்ப, அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ராஜ்பவன் தரப்பில் விளக்கம் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களைச் சந்தித்தார். நிர்மலா தேவி விவகாரம், காவிரி விவகாரம் என அடுத்தடுத்து தமிழகத்தில் பிரச்னைகள் சூடுபிடித்துள்ள நிலையில், செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லதுரையும் ஆளுநருடன் இருந்தார். 

அப்போது பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ``மாணவிகளைத் தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர். மாணவிகளிடம் பேராசிரியை அவ்வாறு பேசியது கண்டனத்துக்குரியது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற அடிப்படையில், அதன் சட்டவிதிகளின்படியே ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. மாநில அரசு, பல்கலைக்கழக விவகாரங்களில் தலையிட முடியாது. ஏப்ரல் 30-ம் தேதிக்கு முன்பாக அவர் அறிக்கை அளிப்பார். அறிக்கை அளித்த பின்னர், அதன்மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும். என்னைக் கேட்காமல் 5 பேர் குழுவை மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் நியமித்தது.

நிர்மலா தேவி என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது; அவர் முகத்தைக்கூட நான் பார்த்தது இல்லை. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு இப்போது எந்தத் தேவையும் இல்லை. நிர்மலா தேவி  மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். விசாரணைக் குழுவுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணைக்கு பெண் உறுப்பினர்கள் தேவையென்றால், விசாரணைக் குழு நியமித்துக் கொள்ளலாம். இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு மாத காலமாகியும் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தாது தாமதித்து குறித்தும் சந்தானம் குழு விசாரணை நடத்தும். சந்தானம் தலைமையிலான விசாரணை கமிஷனுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை. தேவைப்படும் யாரிடமும் அவர் உதவி கோரலாம். தேவைப்படும் இடங்களுக்கு அவர் பயணம் மேற்கொள்ளலாம். தமிழகத்தில் ஒருசில பல்கலைக்கழகங்களைத் தவிர மற்றவைகளின் செயல்பாடுகள் எனக்கு திருப்தி அளிக்கின்றன. நிர்மலா தேவி விவகாரம் குறித்து விளக்கம் கொடுப்பதற்காக நான் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. ஆளுநராகப் பதவியேற்று 6 மாத காலமானதால் நான் உங்களைச் சந்தித்தேன். அடுத்த 6 மாதங்களுக்குப் பின்னர், மீண்டும் நான் உங்களைச் சந்திப்பேன். ஆளுநர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எனக்கு 78 வயது பிறந்துவிட்டது. கொள்ளுப்பேரன் எடுத்துவிட்டேன். நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இணைத்துப் பேசுவது அடிப்படை ஆதாரமற்றது; அபத்தமானது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்து சிந்தித்து வருகிறேன். நான், மாவட்டங்களில் ஆய்வு செய்யவில்லை. சாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது அரசியலமைப்பு. அரசியலமைப்பின்படியே நான் செயல்படுகிறேன். என் வேலைக்கு நான் உண்மையாகவுள்ளேன். குற்றச்சாட்டு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து எனது பணியை மேற்கொள்வேன். என்னைப் பற்றி நீங்கள் விசாரிக்கலாம். என் வாழ்க்கை வெளிப்படையானதே’’ என்றார்.    

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் குறித்து பேசிய அவர், ``துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கத் தேவையில்லை. தகுதியின் அடிப்படையில், விதிகளைப் பின்பற்றியே அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டார். தேடுதல் குழு 3 பேரை பரிந்துரைத்தது. அவர்களிடம் நான் நேர்காணல் நடத்தினேன். அதில் பொறியியல் பின்னணி கொண்டவர் சூரப்பா மட்டுமே. அதனாலேயே அவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இதில், மாநில அடிப்படையில் பாகுபாடு காட்டப்படவில்லை. கல்வித்துறையில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. மேலும் பல்கலைக்கழகத்துறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருகிறேன்’ என்றார். 

காவிரி நீர் தமிழக விவசாயிகளுக்குத் தேவை என்பதை நான் அறிவேன் என்று குறிப்பிட்ட ஆளுநர், ``நான் பதவியேற்றவுடன் கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஆளுநர்கள் ஆலோசனைக் கூட்டத்திலேயே காவிரி விவகாரம் குறித்து வலியுறுத்தினேன். விவசாயிகள் பயன்பெற மேலாண்மை வாரியம் அமைப்பதே சரி என அக்கூட்டத்தில் பேசினேன். டெல்லி செல்லும்போதெல்லாம் காவிரி குறித்து பேசி வருகிறேன். மேலாண்மை வாரியம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் இன்று தொலைபேசியில் பேசினேன். மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான பணிகள் நடந்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் விரைவில் தமிழக விவசாயிகளுக்குச் சாதகமான முடிவு வரும். பிரதமரைச் சந்திக்கக் கோரிய தி.மு.க-வின் கடிதம் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement