வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (17/04/2018)

கடைசி தொடர்பு:07:12 (18/04/2018)

30 ஆடுகளின் உயிரைப் பறித்த டிப்பர் லாரி... கோவை அருகே நடந்த சோகம்!

கோவையில், ஜல்லிக் கற்கள் ஏற்றி அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதி, 30-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

கோவையில், ஜல்லிக் கற்கள் ஏற்றி அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதி, 30-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

ஆடுகள்

கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் வசித்து வருபவர் ரங்கராஜ். இவர் கடந்த 30 ஆண்டுகளாக ஆடு மேய்ப்பதை பிரதான தொழிலாகச் செய்து வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல இன்றும் ஆனைகட்டி பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிக்கொண்டு வந்துள்ளார். இதனிடையே, சாலையில் அருகே மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளின் மீது, கோவையிலிருந்து ஆனைகட்டிக்கு ஜல்லிக்கல் ஏற்றிக்கொண்டு அத வேகமாக வந்த டிப்பர் லாரி மோதியதில், சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. மேலும், 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலத்த காயங்களுடன், உயிருக்குப் போராடி வருகின்றன.  

இதையடுத்து, ஆடுகளைப் பறிகொடுத்த விவசாயி ரங்கசாமி, டிப்பர் லாரி ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர், விபத்து ஏற்படுத்திய டிரைவரிடம் ஏதும் விசாரிக்காமல், ரங்கசாமியைத் தகாத வார்த்தை பேசியதுடன் அவரை தாக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, லாரி உரிமையாளர் மற்றும் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாள்களாகவே ஆனைகட்டியில், பொருள்கள் ஏற்றி வரக்கூடிய லாரிகள் அதிவேகமாக வருவதாகவும், இதனால் அதிக விபத்துகளை ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, இதுகுறித்து, துடியலூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக ஆனைகட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ``இதுல விஷயமே வேற. இந்தப் பகுதி முழுவதுமே மணல் கொள்ளை படுஜோரா நடந்துட்டு இருக்கு. இதுக்கு அதிகாரிங்களும் துணை. இதனால, எப்பவுமே, தாறுமாறா ஓட்டி விபத்து நடத்தற கொடுமை தொடர்ந்துட்டு இருக்கு. கொள்ளையர்களும் கொடுக்க வேண்டியதெல்லாம், சரியா கொடுக்கறதால, அவங்கள போலீஸ்காரங்க ஒண்ணும் செய்யாம விட்டறாங்க" என்றனர்.