`நீங்கள் என் கன்னத்தைத் தட்டியிருக்கக் கூடாது ஆளுநர் அவர்களே!’ - பெண் நிருபர் ஆதங்கம்

செய்தியாளர் சந்திப்பின்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடந்துகொண்ட விதம் குறித்து பெண் நிருபர், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது, காவிரி மேலாண்மை வாரியம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், சென்னை ராஜ்பவனில் செய்தியாளர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார். அப்போது பேசிய ஆளுநர், ``நிர்மலா தேவியின் முகத்தைக்கூட இதுவரைப் பார்த்தது இல்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் அபத்தமானவை’ என்று விளக்கமளித்தார். 

தமிழக ஆளுநராகக் கடந்த அக்டோபரில் பதவியேற்ற பன்வாரிலால் புரோஹித், முதன்முறையாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். நிர்மலா தேவி விவகாரம் குறித்து விளக்கமளிப்பதற்காகச் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்று கூறிய அவர், பதவியேற்று 6 மாதங்கள் நிறைவடைந்ததால் சந்தித்ததாகவும், அடுத்த 6 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இந்தச் சந்திப்பு நடைபெறும் என்றும் கூறினார். 

இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பு நிறைவடையும் தருவாயில் பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தில் ஆளுநர் தட்டிக் கொடுத்தார். இது குறித்து  ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள அந்தப் பெண் நிருபர், ``ஆளுநரின் செய்தியாளர் சந்திப்பு நிறைவடையும் நிலையில், நான் அவரிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன். அந்தக் கேள்விக்குப் பதிலாக, எனது அனுமதியின்றியே அவர் கன்னத்தில் தட்டினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பலமுறை எனது முகத்தைக் கழுவியும் அதிலிருந்து என்னால் வெளியில் வர முடியவில்லை. கோபமும் ஆதங்கமும் எனக்கு ஏற்பட்டது. ஆளுநர் அவர்களே... தாத்தா என்கிற முறையில் எனக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் முறையில் நீங்கள் இதைச் செய்திருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை நீங்கள் செய்தது தவறு!" என்று ட்விட்டரில் கோபமாக ஆதங்கப்பட்டிருந்தார் அவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!