``ஷூட்டிங் மற்றும் பட ரிலீஸ் குறித்து நாளை அறிவிக்கப்படும்" - விஷால்

தயாரிப்பாளர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுடன் தமிழக அரசு உடன்பாடு தெரிவித்துள்ளதற்கு விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுடன் தமிழக அரசு உடன்பாடு தெரிவித்துள்ளதற்கு விஷால் நன்றி தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் பிரச்னை, க்யூப், யூ.எஃப்.ஓ கட்டணம் உயர்வு, திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை, பெஃப்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், புதுத் திரைப்படங்கள் வெளியீடு ரத்து எனப் பல பிரச்னைகளின் காரணத்தால் தமிழ் சினிமாத்துறையே ஸ்தம்பித்து நிற்கிறது. தமிழக அரசு தலையிட்டு திரைத்துறையில் உள்ள பிரச்னைகளை எல்லாம் தீர்த்து சினிமாத்துறையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று ஊழியர்கள் கூறினர். மக்களிடம் டிக்கெட் கட்டணத்துக்கு மேல் அதிகமாக வாங்கும் ஆன்லைன் கட்டணத்தை குறைக்க வேண்டும். டிக்கெட் கட்டணத்தை படத்துக்குத் தகுந்தாற்போல் விதிக்கப்பட வேண்டும், அனைத்துத் தியேட்டர்களிலும் கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டு படத்தின் உண்மையான வசூலை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்திருந்தனர். 

விஷால்

இந்நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இன்று சம்பந்தப்பட்ட அமைச்சர்களைச் சந்தித்து பேசுவதாகவும் அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தனர். இன்று காலையில் இருந்து நடந்துவந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷால், ``காலையில் இருந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. படத்தின் வசூலில் வெளிப்படத்தன்மை இருக்கத் தியேட்டர்களில் கம்ப்யூட்டர் பொருத்தப்படும், படங்களுக்குத் தகுந்தாற்போல் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்படும், ரிலீஸ் தேதியில் ஒழுங்குமுறைப்படுத்தப்படும். ஆன்லைன் புக்கிங்கை தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமே பண்ண முடிவெடுக்கப்பட்டிருக்கிறது, மாஸ்டரிங்கும் தயாரிப்பாளர் கவுன்சிலிலேயே வைக்கப்பட இருக்கிறது, ஒரு வாரத்துக்கு 9,500 ரூபாயாக இருந்த வி.பி.எஃப் கட்டணம் 5,000 ரூபாயாகவும், வாழ்நாள் வி.பி.எஃப் கட்டணம் 22,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. நாளை எங்கள் உறுப்பினர்களுடன் கலந்து பேசி படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பிக்கப்படும், எந்தத் தேதியிலிருந்து படங்கள் வெளியாகும் என்று முடிவெடுக்க உள்ளோம். படத்தின் ரிலீஸ் முறையை ஒழுங்குபடுத்த ஒரு கமிட்டியை உருவாக்கி இருக்கிறோம். இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து இன்னொரு பேச்சுவார்த்தை நடத்தப்படும். எங்கள் கோரிக்கைகளுக்கு உடன்பட்டதற்குத் தமிழக அரசுக்கு நன்றி" என்று கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!