வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (17/04/2018)

கடைசி தொடர்பு:07:57 (18/04/2018)

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வாகன பிரசாரத்தில் வைகோ மீது பாட்டில்கள் வீச்சு! #BanSterlite

"ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்கவில்லை எனக் கூறுவது ஏமாற்று வேலை.
இப்போதைய ஆட்சியாளர்களை ஒரு நிமிடத்தில் வளைத்துப் போடும் திறமை வேதாந்தா குழுமத்தின் இயக்குநர் அனில் அகர்வாலிடம்
உள்ளது" என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார். 

வைகோ

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, வாகனப் பிரசாரத்தைத் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தொடங்கினார். அப்போது பேசிய அவர், "ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்து கொண்டுவந்தது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசுதான். தற்போது இந்த ஆலைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்கவில்லை எனக் கூறுவது ஏமாற்று வேலை. ஒரு மாதத்துக்கு மக்களைச் சமாளிக்கதான் இந்த அறிவிப்பு. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் கோரிக்கை. இப்போதைய ஆட்சியாளர்களை ஒரு நிமிடத்தில் வளைத்துப் போடும் திறமை அனில் அகர்வாலிடம் உள்ளது. 

தமிழகத்தில் நியூட்ரினோ, நீட், காவிரி பிரச்னை, ஹைட்ரோ கார்பன், மீனவர் பிரச்னை என அனைத்திலும் பிரமதர் மோடி துரோகம் செய்துள்ளார். தமிழகத்துக்கு வந்தபோது, கறுப்பு கொடியைப் பார்க்க கூடாது என வானத்திலேயே பறந்தார். தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் மோடியின் செயலுக்கு மாநில அரசும் துணைபோகிறது. 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது பிரதான கோரிக்கை.ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரசாரப் பயணத்துக்குப் பெரிய அளவில் விளம்பரம் செய்ய எங்களிடம் வசதியில்லை. ஆனால், பா.ஜ.க-வினர் எனக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி எனது இந்த வாகனப் பிரசார பயணத்தை விளம்பரப்படுத்தி விட்டனர்.

ஜனநாயக முறைப்படி அவர்கள் கறுப்பு கொடி காட்டட்டும். காவிக் கொடி ஏந்திய கைகள் கட்சி மாறி கறுப்பு கொடியை தூக்குகிற அளவுக்கு வந்துவிட்டார்களே. அவர்களும்  ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் என்பதை நிரூபித்துவிட்டனர். வரும் 28-ம் தேதி பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி எந்த அடக்குமுறை வந்தாலும் உடைத்து எறிந்துவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை அகற்றாமல் வைகோ விடமாட்டான்" என்றார் ஆவேசத்துடன்.

பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக வைகோவுக்குக் கறுப்புக் கொடி காட்ட பா.ஜ.க-வினர் முயன்றனர்.  இதனால்,  ம.தி.மு.க.வினருக்கும்  பா.ஜ.க.,வினருக்கும்  வாக்குவாதம் ஏற்பட்டது. பின், ம.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.க-வைச் சேர்ந்த 54 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து குளத்தூர் பகுதிக்குச் சென்ற வைகோ, அங்கு கூடியிருந்த மக்கள் முன்பாகப் பேசத் தொடங்கினார். அப்போது, அருகிலிருந்த கட்டடம் ஒன்றின் மாடியிலிருந்து வைகோவை நோக்கி பாட்டில்கள் வீசப்பட்டன. அந்தப் பாட்டில்கள் வைகோவின் மீது படாமல், அருகில் இருந்த தொண்டர் ஒருவர் மீது பட்டது. பா.ஜ.க-வினர்தான் பாட்டில்கள் வீசியதாக ம.தி.மு.கவினர் புகார் கூறினர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க