வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (18/04/2018)

கடைசி தொடர்பு:08:03 (18/04/2018)

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெறுகிறதோ? -ஸ்டாலின் சந்தேகம்!

பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப்  பேசினார். இந்நிலையில், ஆளுநர் துணைவேந்தர் அதிகாரத்துக்குள் தலையிடுவது தமிழகத்தில் குடியரசு ஆட்சி நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க ஸ்டாலின்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்லூரி மாணவிகளை மோசமான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற பேராசிரியர் நிர்மலாதேவியின் உரையாடல், பெற்றோர்கள் அனைவரையும் குலை நடுங்க வைத்திருக்கிறது. தமிழகத்தை உலுக்கிக்  கொண்டிருக்கும் இந்த விவகாரத்தில் முதல்வர் எப்போதும்போல் பதில் அளிக்காமல் இருக்க, மாநில ஆளுநர் துணை வேந்தரின் அதிகாரத்துக்குள் பிரவேசித்து விசாரணை அதிகாரியை நியமித்திருப்பது, தமிழ்நாட்டில் குடியரசு ஆட்சி நடைபெறுகிறதோ என்ற சந்தேகத்தை  எல்லோருடைய மனதிலும் ஏற்படுத்துகிறது.
 
ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ள மதுரை பல்கலைக்கழக  சட்ட விதி, துணை வேந்தரின் அதிகாரங்கள் தொடர்புடையது. அந்த அதிகாரத்தை ஆளுநர் எப்படி கையில் எடுத்துக்கொண்டு விசாரணை அதிகாரியை நியமிக்கலாம். யாரும் கேட்காமலே விளக்கம் அளிக்கப்  பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த முன்வந்த ஆளுநர், அவரே எப்படி அந்த உரையாடல் குறித்து விசாரிக்க அதிகாரியை நியமிக்க முடியும்? பல்கலைக்கழக  நிர்வாகங்களில் மாநில அரசு தலையிட முடியாது என ஆளுநர் அளித்த புதிய விளக்கம், மாநில அரசு இருப்பதாக அவர் உணரவில்லை அல்லது மாநில அரசை அங்கீகாரம் செய்யவில்லை என்பதைத் தெளிவாக காட்டுகிறது .
 
ஆளுநர் இந்தக் கருத்து தெரிவித்த பின்னரும் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் முதல்வர் இருப்பது தமிழகத்துக்கு பெருத்த அவமானம். ஆகவே, ஆளுநரின் இந்த அதிகார தலையீட்டையும், ஆக்கிரமிப்பையும் குறித்து உடனடியாக முதல்வர் பழனிசாமி, இந்திய குடியரசு தலைவருக்குப் புகார் அளிக்க வேண்டும் என்றும் ஆளுநர் மாளிகையின் போக்குக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.