`ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை ஓயமாட்டோம்’ - கண்டன பொதுக் கூட்டத்தில் தினகரன் பேச்சு

``தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை எங்களின் போராட்டம் தொடரும்'' என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.


ஸ்டெர்லைட் ஆலை எதிரான போராட்டத்தில் தினகரன்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இன்று இரவு நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய டி.டி.வி., தினகரன் , ``மக்கள் மீது, எந்தவித அக்கறையும் இல்லாமல் மோடியுடன் கூட்டு சேர்ந்து, எடப்பாடியும், பன்னீரும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகிறார்கள்.  மோடியோ, தமிழகம் இந்திய வரைபடத்தில்தான்  இருக்கிறது என்கிற நினைவு இல்லாமல், சென்னைக்கு வந்து செல்கிறார். மத்திய அரசு கார்ப்பரேட்டுகளின் அரசாகி, நாசக்கார திட்டங்களை தமிழகத்தில் திணிக்கிறது. அதில் ஒன்றாக, இங்கு இயங்கி வரும்  ஸ்டெர்லைட் ஆலையை,  அரசு மூட வேண்டும். இல்லை என்றால் ஆலையை முற்றுகையிட்டு, அதை மூடும்  வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

பன்னாட்டு நிறுவனங்களால் தமிழகம், சோமாலியாக மாறிவிடும் அவல நிலை உள்ளது. அதை நாம் அனுமதிக்க கூடாது. மக்களுக்கு அச்சம் கொடுக்கிற எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படக் கூடாது. அப்படி நிறைவேற்றினாலும், அந்தப் பகுதியில் வாழும் மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும்.  இந்தக் கண்டன பொதுக்கூட்டம், அரசியல் ஆதாயம் இல்லாமல் மக்களின் பாதுகாப்புக்காக நடத்தப்படுகிறது.

ஸ்டெர்லைட் ஆலை எதிரான போராட்டத்தில் தினகரன்

தமிழகத்தில் தற்போதைய ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு அ.தி.மு.க-வில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் எங்கள் பக்கம் வந்து விடுவார்கள். யார் நல்ல ஆட்சி கொடுப்பார்கள் என்று மக்களுக்குத் தெரியும். இப்போதே சில எம்.பி-க்களும் எம்.எல்.ஏ-க்களும் என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ‛அண்ணே சீக்கிரம் வந்துர்றோம்’ என நேரில் பார்க்கும்போதும் சொல்கிறார்கள். எடப்பாடியின் கூடாரம் காலியாகும் நாள் விரைவில் வரும்.  

இரட்டை இலை கிடைத்த மமதையில், இனி  வெற்றி பெற்றுவிடலாம்  என நினைத்து, ஆர்.கே. நகர் தேர்தலை அறிவித்தார்கள். ஆனால், மக்கள் எங்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்தனர். அங்கு வெற்றி பெற்றதுபோல, எங்கள் மீது போடப்பட்டுள்ள மானநஷ்ட வழக்கிலும் நீதிமன்றத்தில் வெற்றி பெறுவோம். ஸ்டெர்லைட் ஆலையையும், கூடங்குளமும் தென்தமிழகத்தில் இருக்கும் இரண்டு வெடிகுண்டிகள். இவை இரண்டும் மூடப்படவில்லை என்றால் இங்கு மட்டுமல்ல தமிழகத்துக்கே ஆபத்துதான்’’ என்றார். 

தூத்துக்குடியில் பொதுக்கூட்டத்தை முடித்த தினகரன், காவிரி பிரச்னைக்காக தீக்குளித்து உயிரிழந்த வைகோவின் மைத்துனர் மகன் சரவண சுரேஷின் சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள பெருமாள் பட்டிக்குச் சென்று சரவணசுரேஷின் தந்தை மற்றும் உறவினா்களிடம் துக்கம் விசாாித்து ஆறுதல் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!