வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (18/04/2018)

கடைசி தொடர்பு:08:00 (18/04/2018)

வீணாகும் காவிரித் தண்ணீர்! - அலட்சியம் காட்டும் அலுவலர்கள்!

கடந்த ஒருவார காலத்துக்கும் மேலாக,  குடிநீர்க் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலையில் வழிந்தோடும் தண்ணீரைப் பார்த்து கண்ணீர் விடாத குறையாக மக்கள் புலம்புகின்றனர்.


காவிரி கூட்டு குடிநீர் திட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை அடுத்துள்ளது, இலுப்பூர். இங்குள்ள  பேரூராட்சிமூலம் பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்மூலம் குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது  இதற்காக, இலுப்பூர் பகுதி முழுவதும் குழாய்கள் பதிக்கப்பட்டு, தண்ணீர் செல்கிறது.  இலுப்பூர் முதல் அன்னவாசல் வரை உள்ள குடிநீர்க் குழாய்களில்  அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகும் அவலம் தொடர் கிறது. இப்போதே புதுக்கோட்டை மாவட்டத்தில் பல பகுதிகளிலும் குடிநீர்ப் பஞ்சம் ஆரம்பித்துவிட்டது. அந்தந்தப் பகுதி மக்கள் குடங்களுடனும் குழந்தைகளுடனும்  குடிநீர் கேட்டு திடீர் சாலை மறியலில் இறங்கிவிடுகிறார்கள். இந்த நிலையில், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் இலுப்பூரில், குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் வீணாவதை மக்கள் வேதனையோடு பார்த்து பெருமூச்சு விடுகிறார்கள்.

தற்போது, புதுக்கோட்டை - விராலிமலை சாலையில் இலுப்பூர் பெரியகடைவீதியில்,  ஒரு குறுகிய சாலையின் ஓரத்தில் உள்ள குடிநீர்க் குழாயில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு  உடைப்பு ஏற்பட்டது. இதனால் மக்களுக்குச் சென்று சேரவேண்டிய குடிதண்ணீர் வீணாகி வருகிறது. வாகனங்களில் வருபவர்களை எச்சரிக்கை செய்யும் விதமாக, குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தின் அருகில் கற்களை உள்ளூர் மக்கள் அடுக்கி வைத்திருக்கிறார்கள். எப்போதும் பரபரப்பாக இருக்கும் அந்தச் சாலையில், இதனால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

"ஒரு வாரமாவே இப்படித்தாங்க கிடக்குது. காவிரி  தண்ணீருக்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராடிக்கிட்டிருக்கும்போது, கூட்டுக்குடிநீர் திட்டம்மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் வரும் தண்ணீர் இப்படி வீணாகிவருகிறது. இதுபற்றி நகராட்சி நிர்வாகத்துக்கு தகவலும் கொடுத்தாச்சு. ஆனா,  குடிநீர்க் குழாய் உடைப்பைச்  சரி செய்வதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை நகராட்சி அலுவலர்கள்  எடுக்கவில்லை. குடிநீரின் முக்கியத்துவம் கருதியும் சாலை சேதமடைந்து வருவதைத் தவிர்க்கவும் போக்குவரத்து பாதிக்கப்படுவதைத் தடுக்கவும், சம்பந்தப்பட்ட குடிநீர் அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து உடைப்பைச் சரிசெய்ய வேண்டும்"  என்று இலுப்பூர் பகுதி பொதுமக்கள்  வலியுறுத்துகின்றனர்.