ஆளுநர் நடந்துகொண்ட விதம் குறித்து ஸ்டாலின், கனிமொழி கருத்து!

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது, காவிரி மேலாண்மை வாரியம், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டுவரும் நிலையில், சென்னை ராஜ்பவனில் நேற்று செய்தியாளர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பு நிறைவடையும் தருவாயில், பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தில் ஆளுநர் தட்டிக்கொடுத்தார். இது தொடர்பாக அந்தப் பெண் நிருபர், சமூக வலைதளத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். 

கனிமொழி, ஸ்டாலின்

இந்நிலையில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர், இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “துரதிருஷ்டவசமானது மட்டும் அல்ல. அரசியல் சட்ட பதவியில் இருப்பவரின் தகுதிக்குத் துளியும் ஏற்புடையது அல்ல!” என ட்வீட் செய்துள்ளார். 

கனிமொழி எம்.பி., தனது முகநூல் பதிவில், “நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரிகத்தையும் கடைப்பிடிப்பது அவசியம். பெண் பத்திரிகையாளரின் அனுமதி இல்லாமல் அவரைத் தொடுவது, கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை” எனத் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!