வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (18/04/2018)

கடைசி தொடர்பு:08:20 (18/04/2018)

"ஆளுநர் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்"- கொதிக்கும் வேல்முருகன்

ஆளுநர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
 
வேல்முருகன்
 
திருச்சியில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,"மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்குப் பதிலாக, ஆய்வு என்ற பெயரில் தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்துவருகிறார் ஆளுநர். சட்டப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், இசைப் பல்கலைக்கழகங்களுக்கு தமிழரல்லாத வேற்று மாநிலத்தவரை துணைவேந்தராக ஆளுநர் நியமித்திருப்பது, தமிழகத்திற்கு இழைத்துள்ள மிகப்பெரிய அநீதி. இந்த மூன்று நியமனம் மற்றும் ஆளுநர் பன்வாரிலால் நியமிக்கப்பட்டுள்ள  நியமனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதுகுறித்து சிபிஐ விசாரணை வேண்டும்.
 
பாலியல் குற்றச்சாட்டில் பேராசிரியை கைதுசெய்யப்பட்டுள்ள விவகாரத்தில், ஆளுநர் அவசர அவசரமாக விசாரணைக் குழு அமைத்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் ஆளுநர் மாளிகை தொலைபேசி உரையாடல்களை ஆய்வுசெய்ய உடனடியாக சிபிஐ விசாரணை தேவை. தமிழக அரசு அமைத்துள்ள சிபிசிஐடி விசாரணைமீது நம்பிக்கையில்லை.ஆளுநர் மாளிகை வளாகம் இந்திய ஜனநாயகத்திற்கு உட்பட்டு நடக்கிறதா என்பதை இந்தியப் புலனாய்வு அமைப்பு தெளிவுபடுத்த வேண்டும்.பேராசிரியை விவகார விசாரணையை நேர்மையாக நடத்த, பிரதமர் மோடி உடனடியாக தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலுக்கு மதிப்பளித்து, ஆளுநர் பன்வாரிலாலை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
 
ஆளுநரை உடனடியாகப் பணியிலிருந்து திரும்பப் பெற வலியுறுத்தி, எங்கள் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை நடத்தப்படும்.
காவிரி விவகாரம் தொடர்பாக, தி.மு.க உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பிரதமரை சந்திப்பதில் எந்தப் பலனும் இருக்காது. 70 ஆண்டுகளாக இருந்த தமிழகத்தின் சுயமரியாதையை இந்த அரசு மோடியிடம் அடகு வைத்துவிட்டது. தமிழகத்தில் இன்னும் கால் நூற்றாண்டு காலத்திற்கு பா.ஜ.க எதிர்க் கட்சியாகக்கூட வராது. ரஜினிகாந்த் குறித்து பாரதிராஜா கூறிய கருத்து, தமிழக மக்களின் கருத்து. அவரின் கருத்தை வரவேற்கிறேன். இது, தமிழக மக்களின் உள்ளங்களில் உள்ள கருத்து. பல்வேறு போராட்டங்களை நாங்கள் முன்னெடுப்பதால் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. இதுகுறித்து புகாரும் அளித்துள்ளோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க