வெளியிடப்பட்ட நேரம்: 10:32 (18/04/2018)

கடைசி தொடர்பு:10:39 (18/04/2018)

சம்பளம் இழுத்தடிப்பு... வடமாநில வாலிபரால் சென்னை தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்

சென்னை கொட்டிவாக்கம் பகுதியில், வீட்டில் தனியாக வசித்துவந்த வயதான தம்பதியை வெட்டிப் படுகொலை செய்த சம்பவத்தில், வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சென்னை கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள், மாயாண்டி-வள்ளிநாயகி தம்பதியினர். அவர்களது மகன்கள் வெளிநாட்டில் பணிபுரிந்துவருகின்றனர். அதனால், அவர்கள் இருவர் மட்டுமே வீட்டில் வசித்துவருகின்றனர். இந்த நிலையில், நேற்றிரவு அவர்களது வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் ஏதேச்சையாகச் சென்று பார்த்தபோது, இருவரும் வெட்டப்பட்டு கிடந்தனர்.

காவல்துறையினர் வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் சென்றதாகத் தெரிகிறது. வடமாநிலத்தைச் சேர்ந்த ஆலன் என்பவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின்போது, வயதான தம்பதியைக் கொலைசெய்ததாக, ஆலன் ஒப்புக்கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆலனின் வாக்குமூலம்குறித்து காவல்துறை தெரிவிக்கும்போது, 'மாயண்டி வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணியை ஆலன் மேற்கொண்டுள்ளார். அதற்கு, ஆலனுக்கு முனியாண்டி முன் பணம் வழங்கியுள்ளார். வேலை முடிந்ததும் மீதி பணம் தராமல் முனியாண்டி இழுத்தடித்துள்ளார். நேற்றிரவு, முனியாண்டி வீட்டுக்குச் சென்ற ஆலன், பணம் கேட்டுள்ளார். பணம் தராத ஆத்திரத்தில் மாயாண்டியையும் அவரது மனைவியையும் அடித்துக் கொலைசெய்துவிட்டு, வீட்டிலிருந்த 13 சவரன் நகைகளை எடுத்துச்சென்றதாக' காவல்துறையினர் தெரிவித்தனர்.