வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (18/04/2018)

கடைசி தொடர்பு:11:35 (18/04/2018)

சூடுபிடித்துள்ள கர்நாடகத் தேர்தல் களம்: மனுத்தாக்கல் தொடங்கியது!

அனுபமா ஷெனாய் - கர்நாடகத் தேர்தலில் போட்டி

ர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் 12-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு காங்கிரஸ், பி.ஜே.பி, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு சவால் விடும்வகையில் களமிறங்குகிறது முன்னாள் காவல்துறை அதிகாரி அனுபமா ஷெனாய் தலைமையிலான பாரதிய ஜனசக்தி காங்கிரஸ் கட்சி. தங்கள் கட்சி சார்பில் 30 வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கிறார் அனுபமா.

கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் தன் பணியில் குறுக்கீடு செய்வதாகக் கூறி, இரண்டாண்டுகளுக்கு முன் காவல்துறை பணியில் இருந்து விலகிய அனுபமா ஷெனாய், இம்மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

2010-ம் ஆண்டு பிரிவு காவல் பணி அதிகாரியான அனுபமா, கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் குட்லிகி துணை காவல் கண்காணிப்பாளராக இருந்தார். இவர் 2016-ம் ஆண்டு, தனது முகநூல் பதிவில் தன்னுடைய பணியில் அமைச்சர் குறுக்கீடு இருப்பதாகவும், இதனால் பணியிலிருந்து விலகுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். கர்நாடக தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த பரமேஸ்வர் நாயக்கிற்கு எதிராக அவர் தெரிவித்த குற்றச்சாட்டு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் அமைச்சரவை மாற்றத்தின்போது, பரமேஸ்வரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, முதல்வர் சித்தராமையா நடவடிக்கை எடுத்தார். காவல்துறை அதிகாரிக்கும், பரமேஸ்வருக்கும் இடையேயான மோதல் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை உருவாக்கியது. 

கர்நாடகத் தேர்தல்இந்த நிலையில், முன்னாள் காவல்துறை அதிகாரி அனுபமா, புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். 37 வயதான அனுபமா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நான் அரசியலில் இறங்கியுள்ளேன். மே 12-ம் தேதி நடைபெறவிருக்கும் கர்நாடக மாநிலத் தேர்தலில் போட்டியிடுகிறேன். சட்டமன்ற உறுப்பினராகி, அமைச்சர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்ட முடிவு செய்துள்ளேன். நிர்வாகத்தில் பங்கேற்காமல் தனக்கு நியாயம் கிடைக்காது என்பதால், தேர்தலில் போட்டியிடுகிறேன்" என்றார். 

பாரதிய ஜனசக்தி காங்கிரஸ் (பி.ஜே.சி) என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள அனுபமா, கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். அவரின் கட்சிக்கு வெண்டைக்காய் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தங்கள் கட்சி 30 இடங்களில் போட்டியிடும் என்றும், கர்நாடகத்தில் காங்கிரஸ், பி.ஜே.பி., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் சார்பில் இளைஞர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என்றும் அனுபமா குற்றம்சாட்டினார். தங்கள் கட்சி சார்பில் போட்டியிடுவோர் மீது குற்ற வழக்குகளோ, காவல்நிலையத்தில் புகார்களோ இருக்காது என்றார் அனுபமா.

அமித் ஷா அதிரடி!

இதனிடையே பி.ஜே.பி தலைவர் அமித் ஷா, கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரப் பணிகளை முழு அளவில் கவனிக்கத் தொடங்கியுள்ளார். கட்சித் தலைவர் என்பதை விடவும், அமித் ஷாவைப் பொறுத்தவரை, ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியைப் போன்றே செயல்படக்கூடியவர். 

அமித் ஷா'உள்ளுர் தலைவர்கள் தங்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, முழுவீச்சில் கட்சிப் பணியில் ஈடுபடத் தயங்கும்பட்சத்தில், தானே நேரடியாகக் களமிறங்குவேன்' என்று அமித் ஷா குறிப்பிடுவார். அதன்படியே கர்நாடகத் தேர்தல் களத்திலும் அவர் களமிறங்கியுள்ளார். கர்நாடகத் தேர்தலைப் பொறுத்தவரை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பி.ஜே.பி. மேலிடப் பொறுப்பாளர்களை அமித் ஷா நியமித்துள்ளார். அவர்கள் அனைவரும் அமித் ஷாவின் தளபதிகளாகச் செயல்பட்டு தேர்தல் பணியாற்றுவார்கள். 

காங்கிரஸ் கட்சியும் தன் பங்குக்கு தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது. கர்நாடக மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் நிலையில், வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. முக்கிய வேட்பாளர்கள் ஓரிரு நாளில் மனுத்தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்