ஆளுநர் பன்வாரிலாலுக்கு எதிராகக் களத்தில் இறங்கியது தி.மு.க

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தி.மு.க தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றனர். 

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றதைத் தொடர்ந்து, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியாக ஆய்வு மேற்கொண்டார். அவரது ஆய்வு, மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. மேலும், அவர் ஆய்வுக்குச் செல்லும் இடங்களிலெல்லாம் தி.மு.க-வினர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். மேலும், பல்கலைக்கழகத் துணைவேந்தராக வெளிமாநிலத்தவர்களை நியமித்ததிலும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த நிலையில், துணைவேந்தர்கள் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிர்மலா தேவி விவகாரத்தில், மாநில அரசின் அதிகாரத்தை மீறி, ஆளுநர் தன்னிச்சையாக விசாரணைக் குழுவை அமைத்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்தும், ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தியும், சென்னை சைதாப்பேட்டையிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி தி.மு.க தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, கைதுசெய்தனர்.

அப்போது பேசிய தி.மு.க எம். எல்.ஏ., மா.சுப்ரமணியன், ''நிர்மலா தேவி விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கியிருக்கும் ஆளுநரே விசாரணை ஆணையத்தை அமைக்கலாமா? சி.பி.ஐ விசாரணை தேவையில்லை என்று ஆளுநரே சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுகிறார். ஆளுநரின் நியமனத்தைத் திரும்பப் பெற வேண்டும்'' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!