வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (18/04/2018)

கடைசி தொடர்பு:11:30 (18/04/2018)

தேர்த்திருவிழா வெள்ளோட்டத்தில் பறிபோன உயிர்! அச்சத்தில் கிராம மக்கள்

புதிய தேர் வெள்ளோட்டத்தின்போது, தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலியானார். இரண்டு முறையும் தேர்த்திருவிழா பாதியிலேயே நின்றதால் தெய்வக் குற்றம் ஏற்பட்டுவிட்டதோ என்று அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள் கிராம மக்கள்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள ஈச்சங்காடு கிராமத்தில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற தேரோட்டத்தின்போது, தேரின் அச்சு முறிந்தது. இதனால் தேர்த்திருவிழா பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தேரை சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறை மூலம் ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதி மூலம் தேர் புதுப்பிக்கும் பணி தொடங்கியது. இந்த நிலையில், பணிகள் முடிந்த நிலையில் தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடந்தது.

வெள்ளோட்ட நிகழ்ச்சியில் செங்கமேடு, சிலுப்பனூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனர். தேர் கோயிலில் இருந்து புறப்பட்டு தேரோடும் வீதிகளில் வலம் வந்தது. தேரை கிராம மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேர் வெள்ளோட்டத்தின் போது, தேர் சீராக செல்வதற்காக சன்னகட்டை போடுவார்கள். இந்தப் பணியில் சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நடேசன் என்பவர் ஈடுபட்டிருந்தார்.

தேர் திருவிழா

இதற்கிடையில் வடக்கு வீதியில் தேர் சென்று கொண்டிருந்தபோது, நடேசன் தேர் சக்கரத்தில் சன்னகட்டை வைத்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் தேர் சக்கரத்துக்குள் விழுந்தார். இதில் தேர் சக்கரம் அவர் மீது ஏறியது. சக்கரத்தின் அடியில் சிக்கி படுகாயம் அடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு பெண்ணாடம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். புதிய தேர் வெள்ளோட்டத்தின்போது, தொழிலாளி ஒருவர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்றும், எங்களது குலவழக்கப்படி இறந்தவரின் உடலை உட்கார வைத்துதான் புதைப்போம். ஆதலால் பிரேதப் பரிசோதனை செய்யவேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்று அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் வழக்கு பதிவு செய்யாமலும், பிரேத பரிசோதனை செய்யாமலும் உடலை ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, நடேசனின் உடல் உறவினர்களிடம் பிரேதப் பரிசோதனை செய்யாமல் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு முறையும் கோயில் தேரோட்டம் பாதியிலேயே நின்றுவிட்டதால் தெய்வக் குற்றம் ஏற்பட்டுவிட்டதோ என்று அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள். அதற்குப் பரிகாரம் செய்யவும் தயாராகி வருகின்றனர்