`ஐ.பி.எல் போல தமிழ்ப் படங்கள் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுமா?’ கேள்வி எழுப்பும் உதயநிதி ஸ்டாலின்

'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழ்த் திரைப்படங்கள் வெளியீடு ஒத்திவைக்கப்படுமா?' என நடிகர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, உச்ச நீதிமன்றம் அளித்த கால அவகாசம் நிறைவடைந்தும் இன்னும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. முழு அடைப்புப் போராட்டம், ரயில் மறியல், உண்ணாவிரதம், கடையடைப்பு போன்ற போராட்டங்களும் நடைபெற்றன. காவிரி விவகாரம் தொடர்பாக சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் வந்த பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டப்பட்டது. இதன் மற்றொரு பகுதியாகக் ‘காவிரி மீட்புப் பயணம்’ என்ற பெயரில் திருச்சியிலிருந்து கடலூர் வரை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் நடைப்பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஐபில் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது போல, தமிழ்த் திரைப்படங்கள் வெளியீடுகளும் ஒத்திவைக்கப்படுமா? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இவரின் இந்தக் கருத்து, தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில மாதங்களாக உதயநிதி ஸ்டாலின், தி.மு.க-வின் பல பொதுக்கூட்டங்களிலும் போராட்டங்களிலும் கலந்துகொண்டுவருகிறார். காவிரிக்காக நடைபெற்ற போராட்டங்களிலும் ஸ்டாலின் மேற்கொண்ட நடைப்பயணத்திலும் உதயநிதி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!