அடுத்த பிளானுக்காகக் காத்திருந்த நிர்மலா தேவி- சிக்கவைத்த சீக்ரெட் ரிப்போர்ட் 

நிர்மலாதேவி

அடுத்த பிளானுக்காகக் காத்திருந்த சமயத்தில்தான், நிர்மலா தேவி போலீஸிடம் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரை சிக்க வைத்த பின்னணியில் ரகசிய ரிப்போர்ட் இருப்பதாக, உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியின் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் பீதியில் இருக்கின்றனர். இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட நிர்மலா தேவியின் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரிக்கத் தயாராகி, அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துவருகின்றனர். இதற்கிடையில், அவரது செல்போன்களில் உள்ள தடயங்கள், இந்த வழக்கில் முக்கிய ஆவணமாக மாறியிருக்கிறது.  நிர்மலா தேவியுடன் நட்பில் இருந்தவர்களிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளனர். இதற்கெனத் தனி டீம் அமைக்கப்பட உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்த நிலையில், நிர்மலா தேவியின் வாக்குமூலம், விசாரணை அறிக்கை, கல்லூரி நிர்வாகத்தின் புகார், மாணவிகளின் வாக்குமூலம், நிர்மலாதேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கடிதம் என வழக்குத் தொடர்புடைய ஆவணங்களைப் பெற சி.பி.சி.ஐ.டி போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.  இந்த ஆவணங்கள், இன்னும் சில தினங்களுக்குள் தங்கள் கைக்கு வந்துவிடும் என்று சி.பி.சி.ஐ.டி போலீஸார் எதிர்பார்க்கின்றனர். அதன்பிறகே, அதிரடி விசாரணையைத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நிர்மலா தேவியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் திட்டமும் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரிடம் உள்ளது. 

  நிர்மலாதேவி மீது போடப்பட்ட எப்.ஐ.ஆர்

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், " நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்துவதற்கு முன்பு, அவர் தொடர்புடைய ஆவணங்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளோம். எங்கள் டீமில் உள்ள அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்துவார்கள். தொடர்ந்து, கல்லூரி நிர்வாகத்திடமும் விசாரிப்பார்கள். இந்த வழக்கில், நிர்மலா தேவியைத் தவிர இன்னும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அவர்கள் யார் என்று விசாரணையையும் நடத்த உள்ளோம்.  இதற்கிடையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிர்மலா தேவிக்கு பக்கபலமாக இருந்தவர்கள்குறித்த விவரங்கள்  சேகரிக்கப்பட்டுவருகிறது. அவர்களிடமும் விசாரணை நடத்த உள்ளோம். நிர்மலாதேவி, அதே கல்லூரியில் படித்து, அங்கேயே வேலையும் பார்த்துள்ளார். இதனால், அவருக்கு கல்லூரியில் நட்பு வட்டாரம் அதிகம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் அவருடன் நெருங்கிய நட்பில் இருந்தவர்கள்மீதும் மட்டுமே எங்களது சந்தேகப் பார்வை இருக்கிறது. இந்த வழக்கில், நிர்மலா தேவியின் ஆடியோ எங்களுக்கு முக்கிய ஆதாரம். அந்த ஆடியோவை சைபர் கிரைம் போலீஸார் ஆராய்ந்துவருகின்றனர். அவர்கள் கொடுக்கும் ரிப்போர்ட்டின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். 

நிர்மலாதேவிகுறித்து அருப்புக்கோட்டை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானது. அதாவது, எல்லோரிடமும் சகஜமாகப் பழகிய நிர்மலா தேவியின் தனிப்பட்ட வாழ்க்கை சோகமயமானது. அவர், கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்கிறார். பல்கலைக்கழகத்திலும் அவரைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவுக்கு, அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருந்துள்ளது.

நிர்மலா தேவி, மாணவிகளுடன் செல்போனில் பேசும் ஆடியோவில், அவர் கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இதனால், இதற்கு முன்பு மாணவிகள் சர்ச்சையில் நிர்மலா தேவி சிக்கியுள்ளாரா என்ற கேள்வி போலீஸாருக்கு எழுந்துள்ளது. அந்தக் கோணத்திலும் விசாரணை நடத்த உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அருப்புக்கோட்டை போலீஸார், சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தியபோது, துணைவேந்தராவதே தன்னுடைய இலக்கு என்று நிர்மலாதேவி தெரிவித்த தகவல் வெளியாகியுள்ளது.  அதற்காகத்தான் இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட்டாரா என்ற சந்தேகமும் போலீஸாருக்கு எழுந்துள்ளது.

நிர்மலா தேவி

அருப்புக்கோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த கல்லூரியின் செயலாளர் ராமசாமி கொடுத்த தகவல்கள் அனைத்தும் நிர்மலா தேவிக்கு எதிராகவே உள்ளன. குறிப்பாக, அவரது பணி, செயல்பாடுகள், மாணவிகளிடம் பழகும் விதம் எனப் பல தகவல்களை போலீஸாரிடம் ரகசியத் தகவலாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, நிர்மலா தேவி மீது நிர்வாகத்தின் தரப்பில் எடுக்கப்பட்ட கடிதங்களும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் பெரிதானதும், கல்லூரி இணை இயக்குநர் விசாரணை நடத்திய அறிக்கையும், நிர்மலா தேவிக்கு எதிராகவே இருந்துவருகிறது. ஆனால், அவரைத் தவிர மற்றவர்கள் யார் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை. இதனால்தான் நிர்மலா தேவி மீது மட்டும் மூன்று பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

லோக்கல் போலீஸார் விசாரித்தால் உண்மைகள் மறைக்கப்படும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். அதன்பிறகு, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அதோடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார். ஆளுநரின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளன. இந்தச் சூழ்நிலையில்தான், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மணி, பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அதில், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 நிர்மலா தேவியைச் சுற்றி வட்டமடிக்கும் சர்ச்சை, சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் விசாரணைக்குப் பிறகு, தமிழகத்தையே கலங்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!