வெளியிடப்பட்ட நேரம்: 12:49 (18/04/2018)

கடைசி தொடர்பு:13:03 (18/04/2018)

``கல்லூரிக்குள் அரசியல் பேசுபவர்களை அச்சுறுத்தவே என் மீதான நடவடிக்கை" - கோவை மாணவி பிரியா!

``கல்லூரிக்குள் அரசியல் பேசுபவர்களை அச்சுறுத்தவே என் மீதான நடவடிக்கை

பிரியா

ஜம்முவில் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட 8 வயது சிறுமிக்காக இந்தியாவே கண்ணீர் சிந்தியது. தங்கள் வீட்டுக் குழந்தையாகவே கருதி ஒவ்வொருவரும் தங்கள் கோபத்தைச் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால், அந்தக் கொடூரம் பற்றி வகுப்பறையில் பேசியதற்காக, கோவை சட்டக் கல்லூரியைச் சேர்ந்த பிரியா என்ற மாணவி, சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். பொறியியல் பட்டதாரியான பிரியா, தற்போது சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டும் படித்துவருகிறார். சமூகச் சீரழிவுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் ஆர்வம் காட்டுபவர். புரட்சிகர மாணவர் முன்னணியில் உறுப்பினர். கல்லூரியிலிருந்து சஸ்பென்ட் செய்யும் அளவுக்கு என்ன நடந்தது என அவரிடம் கேட்டோம்.

"பேராசிரியர் பியூலா மேடம், தனது வகுப்பின்போது மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்கவும் கூச்சத்தைத் தவிர்க்கவும் ஏதேனும் ஒரு தலைப்பில் பேசச் சொல்வார். சென்ற வாரம் வெள்ளிக்கிழமையும் அப்படித்தான் நடந்தது. பலரும் பேசுவதற்கு தயங்கிய ஜம்மு வன்புணர்வு கொடூரத்தைப் பற்றி நான் பேச ஆரம்பித்தேன். 'நாம் வாழும் இந்தச் சமூகத்தில் ஒரு சிறுமிக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமையைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?' எனக் கேட்டேன். சில மாணவர்கள், தங்களுக்குத் தெரியும் எனக் கையை உயர்த்தினார்கள். பிறகு என் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டேன். ஒரு சிலருக்கு அதில் உடன்பாடு இல்லை. ஆனால், பலரும் என் பேச்சின் நியாயத்தைப் புரிந்துகொண்டார்கள்.

பிரியா

அடுத்துப் பேசிய இன்னொரு மாணவர், காவிரி மேலாண்மை வாரியத்துக்காக நாம் போராட வேண்டியதில்லை' எனக் கூறி, என்னுடைய கருத்துகளை மறுத்தார். அதுகுறித்த உரையாடல் சென்றுகொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த இன்னொரு பேராசிரியர், 'இதெல்லாம் தேவையற்ற பேச்சு' என்று சொல்லிவிட்டுச் சென்றார். அன்று மதியம், ஒரு சில மாணவர்களின் புகாரின் அடிப்படையில் என்னை சஸ்பென்ட் செய்திருப்பதாகச் சொன்னார்கள். என் தரப்பில் விளக்கம் கேட்கப்படவே இல்லை. 13-ம் தேதி மதியம் முதல் சஸ்பென்ட் எனக் குறிப்பிட்டிருக்கும் அந்த ஆணையில், எந்த நாள் வரை எனக் குறிப்பிடவில்லை. அடுத்த நாள் நோட்டீஸ் போர்ட்டில் ஒட்டினார்கள். வகுப்பு நடைபெறுவதற்குத் தடையாக இருந்ததாக அதில் குறிப்பிட்டிருந்தனர். அன்று நடந்தது ஒரு சிறுமி மீது நிகழ்த்தப்பட்ட பெருங்குற்றத்தைப் பற்றிய உரையாடல் மட்டுமே. அடுத்த மாதம் 14-ம் தேதி தேர்வுகள் தொடங்கவிருக்கின்றன. அதற்கான ஹால் டிக்கெட் எப்போது கொடுப்பார்கள் எனத் தெரியவில்லை'' என்று பொருமலுடன் தொடர்ந்தார்.

''என்னை சஸ்பென்ட் செய்தது தொடர்பாக அமைக்கப்பட்டிக்கும் விசாரணைக் குழுவில் என் கருத்துகளைக் கேட்க, வியாழக்கிழமை வரச் சொல்லியிருக்கிறார்கள். அப்போது, அன்று நடந்ததைத் தெளிவாகச் சொல்வேன். என் மீது எந்தத் தவறும் இல்லை என்பதைப் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். ஏனெனில், 28 மாணவர்கள் எனக்கு ஆதரவாக நிற்பதாகக் கூறியுள்ளனர். என் வீட்டில், 'நீ தவறேதும் செய்யவில்லை. தைரியமாக இரு' என்றே அம்மா நம்பிக்கை கொடுத்திருக்கிறார். கல்லூரி நிர்வாகம் என் மீது எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை, கல்லூரிக்குள் அரசியல் பேசுபவர்களுக்கு ஓர் அச்சத்தை ஏற்படுத்துவதற்குத்தான் எனப் புரிந்துகொள்கிறேன். கல்லூரிக்குள் அரசியல் பேசுவதை நிர்வாகம் விரும்பவில்லை. ஒரு சட்டக் கல்லூரியில், அரசியல் விஷயங்களை விவாதிக்காமல் இருக்க முடியுமா? அரசியல் என்பதாகக்கூட இல்லை, நான் அன்றைக்குப் பேசியது ஒரு கொலையின் குற்றவியல் வழக்குக் குறித்தது என்றும் எடுத்துக்கொள்ளலாம் இல்லையா?" என்று கேள்வியுடன் முடிக்கிறார் பிரியா.

மாணவி பிரியா சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பதற்கு, தி.மு.கவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, 'காஷ்மீர் சிறுமிக்காகக் குரல் கொடுத்த கோவை சட்டக் கல்லூரி மாணவி பிரியாவின் இடைநீக்கம் முரண் நகை. மாணவர்கள் சமூக விஷயங்களுக்காகக் குரல் கொடுப்பதில் என்ன தவறு? அந்த மாணவியின் இடைநீக்கம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்' என்று தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். பல தரப்பிலிருந்து பிரியாவுக்கு ஆதரவுக் குரல்கள் எழுந்துள்ளன.


டிரெண்டிங் @ விகடன்