மூன்று முகங்களைப் பெற்ற உலகின் முதல் நபர்! - அசரவைத்த முகமாற்று அறுவைசிகிச்சை

இரண்டுமுறை முகமாற்று அறுவைசிகிச்சை செய்த பிறகு, மூன்றாவதாகப் புதிய முகத்தைப் பெற்றியிருக்கிறார் பாரிஸ் நகரைச் சேர்ந்த ஜெரோம் ஹாமான். 'மூன்று முகங்களைப் பெற்ற உலகின் முதல் நபர்' என்ற பெருமையையும் அவர் தட்டிச் சென்றிருக்கிறார். 

முகமாற்று அறுவை சிகிச்சை

பாரிஸ் நகரைச் சேர்ந்த ஜெரோம் ஹாமான் (43), நியூரோஃ பிப்ரோடோசிஸ் - டைப் 1 என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக, அவரது உடல் நரம்புகளில் கட்டிகள் உருவாகின. அந்தக் கட்டிகளின் வளர்ச்சியால், ஜெரோம் முகம் முற்றிலும் சிதைந்து போனது. இதையடுத்து, பாரிஸ் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், 2016-ம் ஆண்டு முகமாற்று அறுவை சிகிச்சையை செய்து கொண்டார். இந்த சிகிச்சைக்குப் பிறகு அவரது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஏற்பட்டது. முகமாற்று அறுவைசிகிச்சை நடந்த இடத்தில் இருந்த திசுக்களில் சிதைவு ஏற்படத் தொடங்கியது.

இதனால், 2017-ம் ஆண்டு மீண்டும் அதே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாதங்கள் முகமே இல்லாமல் அவர் சிகிச்சை பெற்று வந்தார். வேறுவழியில்லாமல் முகத்தை முழுமையாக மாற்ற வேண்டிய கட்டாயமும் மருத்துவர்களுக்கு ஏற்பட்டது. இதற்காக, 22 வயது மதிக்கத்தக்க உயிரிழந்த இளைஞர் ஒருவரின் முகத்தை தானமாகப் பெற்றார் ஜெரோம். அதன்பின், வெற்றிகரமாக இரண்டாவது முகமாற்று அறுவை சிகிச்சையும் நடந்து முடிந்தது. ' மூன்று முகங்களைப் பெற்ற உலகின் முதல் நபர்' என்ற பெயரும் வந்து சேர்ந்தது.  

இதுகுறித்துப் பேசிய ஜெரோம், "முதன்முதலில் முகமாற்று அறுவை சிகிச்சை செய்தபோது, ' இதுதான் எனது புதிய முகம்' என நினைத்தேன். துரதிருஷ்டவசமாக மீண்டும் முகமாற்று அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது. இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 'இப்போது இதுதான் என்னுடைய புதிய முகம்' என நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்" எனப் பேசினார். ஜெரோமுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்துப் பேசிய மருத்துவர்கள், 'சிகிச்சையின்போது, எந்தவித சோர்வையும் காட்டாமல் மருத்துவர்களுக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்துவந்தார். இவரின் தன்னம்பிக்கை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டு" என நெகிழ்ந்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!