காயின் போட்டால் கார் வரும்... காபிக்கு மட்டுமல்ல, காருக்கும் வெண்டிங் மெஷின்! | No need to wait for test drive cars again says Ford

வெளியிடப்பட்ட நேரம்: 15:51 (18/04/2018)

கடைசி தொடர்பு:15:51 (18/04/2018)

காயின் போட்டால் கார் வரும்... காபிக்கு மட்டுமல்ல, காருக்கும் வெண்டிங் மெஷின்!

காயின் போட்டால் கார் வரும்... காபிக்கு மட்டுமல்ல, காருக்கும் வெண்டிங் மெஷின்!

கார் வாங்கப்போகிறீர்கள். குறிப்பிட்ட அந்த காரை டெஸ்ட் டிரைவ் பண்ணலாம் என்று ஐடியா. ஷோரூமுக்குப் போனால், ``டெமோ கார் இல்லை... நாளைக்கு வர்றீங்களா... எங்க ஆள் ஒருத்தர் உங்க கூடவே வருவார். லைசென்ஸ் இருக்கா?’’ என்று கேள்விகளாகப் போட்டு, டெஸ்ட் டிரைவ் பண்ணும் ஆசையையே மறக்கடித்துவிடுவார்கள் டீலர்கள். அப்படியே ரேஷன் கடையில் நிற்பதுபோல் வரிசையில் நின்று டெஸ்ட் டிரைவ் கிடைத்தாலும், ``3 கி.மீ-க்குதான் அனுமதி... கால்மணி நேரத்துல வந்துடுங்க... அடுத்த கஸ்டமர் வெயிட்டிங்’’ என்று சில கண்டிஷன்ஸும் போடுவார்கள். 

ford

இப்படிப்பட்ட டெஸ்ட் டிரைவ் தொல்லைகளையெல்லாம் கொடுத்து வாடிக்கையாளர்களைப் படுத்தாமல், ஃபோர்டு டீலர்ஷிப் செம ஐடியா ஒன்று செய்துள்ளது. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் `Tmall' அல்லது `Taobao' எனும் ஆப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதில் `Super Test Drive’ எனும் ஆப்ஷனை செலெக்ட் செய்து, வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைலில் நீங்கள் விரும்பும் ஃபோர்டு காரைத் தேர்ந்தெடுத்து ரிஜிஸ்டர் செய்துவிட வேண்டும். கன்ஃபர்மேஷனுக்காக ஒரு ஸ்மைலியுடன் உங்கள் செல்ஃபியும் சின்ன டெபாசிட் தொகையும் அவசியம். இதுதான் உங்களுக்கான பதிவு விண்ணப்பம். நீங்கள் குறிப்பிட்ட தேதியில் அந்த டீலர்ஷிப்புக்குச் செல்ல வேண்டும். விமானநிலையத்தில் இருப்பதுபோல் ஒரு ஆன்லைன் வெண்டிங் மெஷினில் உங்கள் ஸ்மைலி போட்டோவை எடுத்து கன்ஃபர்மேஷனை உறுதிசெய்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், உங்களுக்கான கார் வெண்டிங் மெஷினிலிருந்து காபி இறங்குவதுபோல் நீங்கள் இருக்கும் இடத்துக்கு வரும். 

இனி காரை எடுத்துக்கொண்டு கிளம்பவேண்டியதுதான். இதில் ஹைலைட் என்னவென்றால், மூன்று நாள்கள் கார் உங்கள் வசம்தான். நீங்கள் விரும்புகிற இடங்களில் காரை டெஸ்ட் டிரைவ் செய்துகொள்ளலாம். மளிகைக்கடைக்கு ஷாப்பிங் போகலாம். விரும்பினால் குடும்பத்துடன் ஒரு கோடைச் சுற்றுலா போகலாம். உங்களுக்கான ரோடு சைடு அசிஸ்டன்ஸைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நான்காவது நாள் காரை டீலர்ஷிப்பில் நிறுத்திவிட்டால், திரும்பவும் வெண்டிங் மெஷினுக்குள் பார்க்கிங் ஆகிக்கொள்ளும். 

திருப்தி இல்லையென்றால், அடுத்த காருக்கான டெஸ்ட் டிரைவும் உங்களுக்கு உண்டு. ஒரு ஆளுக்கு மாதத்துக்கு நான்கு கார்கள் மட்டும்தான் அனுமதி. கார் உங்களுக்குப் பிடித்திருந்தால், உடனே புக்கிங்தான். ``டெலிவரியிலும் நாங்கள் காலம் தாழ்த்துவதில்லை’’ என்கிறார் ஃபோர்டு டீலரின் தலைவர்.

Ford

நிற்க! இப்படி ஒரு டீலர்ஷிப் நிச்சயம் தமிழ்நாட்டுக்கு, ஏன் இந்தியாவுக்கே இன்னும் வரவில்லை. தெற்கு சீனாவில் உள்ள Guangzhou எனும் மாகாணத்தில் Baiyun எனும் மாவட்டத்தில்தான் இந்த டீலர்ஷிப் உள்ளது. அலிபாபா மோட்டார்ஸ் எனும் டீலர்ஷிப்தான் ஃபோர்டுடன் சென்ற ஆண்டு இறுதியில் இப்படி ஒரு பார்ட்னர்ஷிப் வைத்து அருமையான டெஸ்ட் டிரைவ் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. வெண்டிங் மெஷினில் ஸ்விட்ச்சைத் தட்டினால் காபியோ, கூல்டிரிங்க்ஸோ, உணவுப் பொருள்களோதான் கையில் வந்து சேரும். கார்களுக்கு வெண்டிங் மெஷின் இருப்பது நிச்சயம் புதுமையான விஷயம்தான். ஏற்கெனவே அமெரிக்காவில் ஹவுஸ்டன் மாகாணத்தில் `கார்வானா’ எனும் டீலர்ஷிப், ஸ்பெஷல் காயின்களைப் போட்டு காரை வரவழைக்கும் வெண்டிங் மெஷின் வைத்திருந்தாலும், அங்கே சில சலுகைகள் இந்த அளவுக்கு இல்லை. 

சீனாவில், நல்ல குடிமகன்களுக்கான `சோஷியல் ரேங்கிங் சிஸ்டம்' என்கிற ஒரு ஸ்கோர் கிரெடிட் சிஸ்டம் உள்ளது. இதில் 350-க்குமேல் ஸ்கோர் எடுத்தவர்களுக்கு மட்டும்தான் இந்த டெஸ்ட் டிரைவ். 700-க்கும்மேல் ஸ்கோர் கிரெடிட் செய்தவர்களுக்கு, இந்த வெண்டிங் மெஷின் டெஸ்ட் டிரைவ் முற்றிலும் இலவசம். ஸ்கோர் குறைவாக உள்ளவர்களுக்குத்தான் அந்த டெபாசிட் தொகை.

``கார் வெண்டிங் மெஷின் என்பது புதுமையான விஷயமல்ல. இந்த சிஸ்டத்தில் எக்கச்சக்கமான பிரச்னைகளைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. மெஷின் பராமரிப்பு, பல அடுக்குமாடிக் கட்டடங்களுக்கான சட்ட அனுமதி, பாதுகாப்பு... இப்படி பிரச்னைகள் அதிகம். ஆனாலும், வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிதான் எங்களுக்கு முக்கியம்!’’ என்கிறார் அலிபாபா மோட்டார்ஸின் தலைவர் டேனியல் ஜாங். 

டெஸ்ட் டிரைவ் மட்டுமல்ல, `அலிபாபா எக்கோ சிஸ்டம்’ எனும் அமைப்பில் உறுப்பினர் ஆகிவிட்டால், சில அசத்தல் தள்ளுபடிகளும் வழங்குகிறதாம் அலிபாபா நிறுவனம். 1,000 சதுரமீட்டர்கொண்ட இந்த வெண்டிங் பில்டிங்கில் மொத்தம் 42 கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டுள்ளன. இதில் ஃபோர்டின் எல்லா கார்களும் உண்டு. மாண்டியோ, எக்ஸ்ப்ளோரர் எஸ்யூவி, மஸ்டாங் போன்ற கார்களுக்குத்தான் இதுவரை அதிகமான டெஸ்ட் டிரைவ் புக்கிங் ஆகியிருக்கிறதாம்.

நம் ஊரில் இப்படி ஒரு டீலர்ஷிப் இருந்தால், வெறும் டெஸ்ட் டிரைவுக்கான புக்கிங் மட்டும்தான் நடக்குமோ!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்