வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (18/04/2018)

கடைசி தொடர்பு:13:54 (18/04/2018)

பேத்தி என்று நினைத்து கன்னத்தைத் தட்டினேன்..! மன்னிப்பு கோரிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டியதற்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருத்தம் தெரிவித்துள்ளார். 

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக, நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். அந்த சந்திப்பின்போது, கேள்வி எழுப்பிய த வீக் பத்திரிகையின் பெண் செய்தியாளர் லக்ஷ்மி சுப்ரமணியத்தின் கன்னத்தில் பன்வாரிலால் புரோஹித் தட்டினார்.

ஆளுநரின் அந்தச் செயலுக்கு, ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்தார் லக்‌ஷ்மி. மேலும், செய்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் ஆளுநர் மன்னிப்பு கோரினார். இதுதொடர்பாக செய்தியாளருக்கு ஆளுநர் அனுப்பியுள்ள விளக்கக் கடிதத்தில், 'செய்திளார்கள் சந்திப்பின்போது, நீங்கள் எழுப்பிய கேள்வி சிறப்பாக இருந்தது. அதைப் பாராட்டும் விதமாக உங்களை என்னுடைய பேத்திபோல கருதியே கன்னத்தில் தட்டினேன்.

ஒரு செய்தியாளராக உங்களுடைய செயல்பாட்டைப் பாராட்டும் விதமாகவே நான் அவ்வாறு செய்தேன். உங்களுடைய ஈ-மெயில் கடிதத்தின்மூலம், என்னுடைய செயல்பாட்டினால் நீங்கள் அடைந்த கஷ்டத்தைப் புரிந்துகொண்டேன். உங்களுடைய உணர்வுகள் கஷ்டப்பட்டதைக் குறைக்கும் விதமாக, என்னுடைய மன்னிப்பை வெளிப்படுத்த விரும்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.