`ஆளுநர் மேற்கொண்டது ஆய்வுதான்; சுற்றுப்பயணம் அல்ல'! - ரவுண்ட் கட்டும் ராஜ்பவன் சுற்றறிக்கை | Governor did inspection only, says tour officials

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (18/04/2018)

கடைசி தொடர்பு:14:52 (18/04/2018)

`ஆளுநர் மேற்கொண்டது ஆய்வுதான்; சுற்றுப்பயணம் அல்ல'! - ரவுண்ட் கட்டும் ராஜ்பவன் சுற்றறிக்கை

`மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவில்லை என ஆளுநர் சொல்கிறார். ராஜ்பவனிலிருந்து வந்த சுற்றரிக்கையைப் பார்த்தால் ஆளுநர் சொல்வது பொய் எனத் தெரியும்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

`ஆளுநர் மேற்கொண்டது ஆய்வுதான்; சுற்றுப்பயணம் அல்ல'! - ரவுண்ட் கட்டும் ராஜ்பவன் சுற்றறிக்கை

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

நிர்மலாதேவி விவகாரத்தில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் கொடுத்திருக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். `மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவில்லை என ஆளுநர் சொல்கிறார். ராஜ்பவனிலிருந்து வந்த சுற்றரிக்கையைப் பார்த்தால் ஆளுநர் சொல்வது பொய் எனத் தெரியும்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து நேற்று பேட்டியளித்தார் பன்வாரிலால் புரோஹித். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அரசு அலுவலகங்களை ஆய்வு செய்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது,  `மாவட்டங்களில் நான் செய்வது ஆய்வு அல்ல. மாவட்டங்களில் உள்ள நிலைமை குறித்து அறிந்துகொள்ளவே அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வருகிறேன்’ என்றார். அவரது இந்தப் பதில் அரசு அதிகாரிகள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. `ஆளுநரின் ஆய்வு மாநில சுயாட்சிக்கு எதிரானது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு ஆட்சியில் இருக்கும்போது, ஆளுநரின் ஆய்வை ஏற்றுக்கொள்ள முடியாது' என அரசியல் கட்சிகள் கொந்தளித்தன. இதையெல்லாம் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வை மேற்கொண்டார் பன்வாரிலால் புரோஹித். 

ஆளுநரின் பேட்டி குறித்து நம்மிடம் பேசிய தலைமைச் செயலக அதிகாரி ஒருவர், ``கிண்டி ராஜ்பவனிலிருந்து கடந்த 2017 நவம்பர் மாதம் 9-ம் தேதி அன்று, கோவை மாவட்ட ஆட்சியர் உள்பட அனைத்து முக்கிய அதிகாரிகளுக்கும் ஓர் உத்தரவு சென்று சேர்ந்தது. அதில், `14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஆளுநர் கோவை வருகிறார். அந்தநேரத்தில் துறைவாரியாக அதிகாரிகளைச் சந்திக்கிறார். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பவர்பாயின்ட் பிரசன்டேஷனைக் காட்ட வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதே உத்தரவில், யார் யாருக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல்துறை ஆணையாளர், சுகாதாரத்துறை இணை இயக்குநர், வேளாண் இணை இயக்குநர், மாவட்ட வருவாய் அலுவலர், அரசியல் பிரமுகர்கள் என அனைவருக்கும் நேரம் வாரியாக விவரங்களைத் தெரிவித்திருந்தனர். இதன்பிறகு 2 நாள் ஆய்வுக்கு வந்த ஆளுநர், அரசின் திட்டங்கள் எப்படிச் செயல்படுகிறது என்பதையும் கேட்டறிந்தார். சர்க்யூட் ஹவுசில் மூன்று மணி நேரம் ஆய்வு நடந்தது. 

ராஜ்பவன் சுற்றறிக்கை

மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்விதம், தமிழக அரசின் திட்டங்கள் ஆகியவை குறித்து விரிவாகக் கேட்டறிந்தார் ஆளுநர். இதன்பிறகு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். ஆய்வு முடிந்த பிறகு பேசிய ஆளுநர், `அடுத்த வருடமும் நான் கண்டிப்பாக வருவேன். 32 மாவட்டங்களுக்கும் செல்ல இருக்கிறேன். உங்கள் பணிகளை ஒழுங்காகச் செய்யுங்கள். நேரத்துக்கு அலுவலகம் வர வேண்டும். நேர்மையாகப் பணிகளைச் செய்ய வேண்டும்' என்றெல்லாம் அறிவுறுத்தியவர், ஒவ்வொரு முறை பேசும்போதும், `பிரதமர் ரொம்ப நல்லவர்' என்பதைக் குறிப்பிட்டார். அடுத்து வந்த நாள்களில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை எனப் பல மாவட்டங்களில் ஆய்வை மேற்கொண்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தெருவைக் கூட்டுவதை வழக்கமாக வைத்துக் கொண்டார். மாவட்டங்களையும் கிராமங்களையும் அறிந்துகொள்வதற்காக வருபவர், ஏன் மூன்று மணிநேரம் அதிகாரிகளை வறுத்தெடுக்க வேண்டும். இதைப் பற்றியெல்லாம் ஆட்சியில் உள்ளவர்கள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை" என்றார் ஆதங்கத்துடன். 
 


டிரெண்டிங் @ விகடன்