சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளியைப் பின் தொடர்ந்த போலீஸ்! 10 மணி நேரத்தில் முடிந்த ஆபரேஷன்

கொலை

சென்னையில் கணவன், மனைவியைக் கொலை செய்த தொழிலாளியை சிசிடிவி கேமரா மூலம் பின் தொடர்ந்து பிடித்துள்ளனர்.  

சென்னை கொட்டிவாக்கம், ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ராமலிங்கநகரைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவரின் மனைவி வள்ளிநாயகி. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவர்களுக்குச் சொந்தமாக மூன்று அடுக்குமாடி கொண்ட தனி வீடு உள்ளது. மூன்றாவது மாடியில் இவர்கள் குடியிருந்தனர். மற்ற வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்தநிலையில் நேற்று மாயாண்டி, வள்ளிநாயகி இருவரும் ரத்தவெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதாக துரைப்பாக்கம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

 கொலை

இரட்டை கொலை குறித்து போலீஸார் கூறுகையில், "மாயாண்டி, மர வியாபாரம் செய்துவந்தார். வசதியாக வாழ்ந்துவந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் கட்டுமானப் பணிகளைச் செய்துள்ளார். அப்போது, பீகாரைச் சேர்ந்தவர்கள் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வேலைக்கு வந்த ஆலம் என்பவர்தான், நேற்று மாலை மாயாண்டி வீட்டுக்கு வந்துள்ளார். அவர், வள்ளிநாயகியை முதலில் கட்டையால் அடித்துக் கொன்றுள்ளார். பிறகு, மாயாண்டியைக் கொலைசெய்துள்ளார். அதன்பிறகு, வீட்டிலிருந்த 13 சவரன் நகையைக் கொள்ளையடித்துவிட்டுச் சென்றுள்ளார். இந்தக் காட்சிகள் அனைத்தும் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும் ஆலம், பைக்கில்தான் அங்கு வந்துள்ளார். வீட்டின் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்குக்குச் சென்று பெட்ரோல் போட்டுள்ளார். அந்த வீடியோ பதிவும் எங்களுக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆலம், தங்கியிருந்த இடத்துக்கு அதிகாலை மூன்று மணிக்குச் சென்றோம். எங்களைப் பார்த்ததும் தப்பி ஓட முயன்ற அவரை மடக்கிப்பிடித்தோம். அவரிடம் விசாரித்தபோது, சம்பளப் பாக்கிக்காகக் கொலை செய்ததாக முதலில் தெரிவித்தார். இதுதொடர்பாக வீடு கட்டும் பணி செய்த ஒப்பந்தக்காரரிடம் விசாரித்தபோது சம்பளப் பாக்கி எதுவும் இல்லை என்று கூறினார். நகை, பணத்தைக் கொள்ளையடிக்கத்தான் ஆலம் அங்குச் சென்றுள்ளார். கொலை நடந்த 10 மணி நேரத்துக்குள் கொலையாளியைக் கைதுசெய்துவிட்டோம்" என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!