வெளியிடப்பட்ட நேரம்: 16:54 (18/04/2018)

கடைசி தொடர்பு:16:54 (18/04/2018)

அட்சய திருதியைக்குத் தங்கம் வாங்குவது லாபமா... அதிர்ஷ்டமா?

அட்சய திருதியை நாளில் சிறப்பு விற்பனை எனத் தொடங்கி, அந்த நாளை, தங்க நகை வாங்குவதற்கான நாளாக மக்கள் மனதில் முதலில் பதிய வைத்தார்கள். ஒரு சிறிய அளவாவது தங்கம் வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் தங்கம் குவியும் என்ற சிந்தனையைப் பதிய வைத்ததால், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க கூட்டம் அலைமோதத் தொடங்கியது.

அட்சய திருதியைக்குத் தங்கம் வாங்குவது லாபமா... அதிர்ஷ்டமா?

தமிழ் வருடப்பிறப்பு மாதமான சித்திரையில், அமாவாசைக்கு அடுத்து வரும் மூன்றாம் பிறை நாளில் கொண்டாடப்படுவதே அட்சய திருதியை. இந்த நாளில் எது வாங்கினாலும் அந்த ஆண்டு முழுவதும் அது பெருகும் என்று ஒரு நம்பிக்கை. கடந்த பத்து ஆண்டுகளுக்குமேலாக, இந்த நாளை தங்கம் வாங்கும் நாளாக பாவிக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த மாற்றத்தில், நகைக்கடைக்காரர்களுக்கு முக்கியப் பங்குண்டு.

அட்சய திருதியை நாளில் சிறப்பு விற்பனை எனத் தொடங்கி, அந்த நாளை, தங்க நகை வாங்குவதற்கான நாளாக மக்கள் மனதில் முதலில் பதியவைத்தார்கள். ஒரு சிறிய அளவாவது தங்கம் வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் தங்கம் குவியும் என்ற சிந்தனையைப் பதியவைத்ததால், அந்த நாளில் தங்கம் வாங்க கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த வரிசையில் வர வழிவகை செய்தனர். அடுத்ததாக, கூட்டத்தைத் தவிர்க்க, தங்கம் வாங்குவதற்கு முன்பதிவு செய்யும் முறையைக் கொண்டுவந்தார்கள். அட்சய திருதியை அன்று வாங்குவது என்று ஐதீகத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டது. விற்பனை அதிகரிக்க அதிகரிக்க, அட்சய திருதியைக்கு முன்பாக தங்கத்தின் விலை ஏறத் தொடங்கியது.

அட்சய திருதியை

கடந்த ஏப்ரல் 6-ம் தேதி, 29,180 ரூபாய் என்றிருந்த 10 கிராம் தங்கத்தின் விலை, அட்சய திருதியைக்கு முதல் நாளில் 29,800 ரூபாய் என்றானது. ஆக, இந்த நம்பிக்கையை வைத்து ஒரு பக்கம் தங்கம் வாங்கும் ஆர்வம் அதிகரிப்பதோடு, இன்னொரு பக்கம் தங்கத்தின் விலையும் அதிகரிக்கிறது. இப்படியெல்லாம் தங்கம் வாங்குவதால் உண்மையில் மக்களுக்கு லாபமா என்று, ஜெம் & ஜூவல்லரி டெக்னாலஜி ட்ரெயினிங் சென்டர் இயக்குநர் கே.சுவாமிநாதனிடம் விசாரித்தபோது...

``இந்த அட்சய திருதியையால் பொதுமக்களுக்கு லாபமிருக்கிறதோ இல்லையோ, நகைக்கடைக்காரர்களுக்கு லாபம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகத்தான் அட்சய திருதியை அன்று நகை விற்பனை பெரிய அளவில் நடக்கிறது. குறிப்பிட்ட அந்த நாளில் வாங்கும் பொருள் அந்த ஆண்டு முழுவதும் பெருகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், நமக்கு காஸ்ட்லியான பொருளான தங்கத்தை வாங்கினால், அந்த ஆண்டு முழுவதும் செல்வம் கொழிக்கும் என்ற எண்ணத்தால் அனைவரின் கவனமும் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. 

தங்கம்

தங்கம் விலை அதிகமான நாளில் வாங்குவது லாபம் இல்லையென்றாலும், அடித்தட்டு, நடுத்தரவர்க்கத்து மக்களைப் பொறுத்தவரையில் அட்சய திருதியை என்ற பெயரிலாவது சிறிதளவு தங்கம் வாங்குவதை சேமிப்பாகப் பார்க்க முடிகிறது. இதுவும் இல்லையென்றால், தங்கத்தில் முதலீடு செய்ய மிகவும் தயங்குவார்கள். எனவே, அட்சய திருதியை நம்பிக்கையுள்ளவர்கள், குறைந்தபட்சமாக 1 கிராம், 500 மில்லி கிராம் என்று வாங்கினால் அதில் பெரிய இழப்பு வராது. 

சில நகைக்கடைகளில் `அட்சய திருதியையொட்டி விலை குறைவு' என்று பெரிய அளவில் விளம்பரங்கள் செய்கிறார்கள். தங்கத்தின் விலை லண்டனில்தான் தீர்மானிக்கப்படுகிறது. அந்த விலையைவிட குறைவாகத் தருகிறார்கள் என்றால், வேறுவிதத்தில் விலையை அட்ஜஸ்ட் செய்கிறார்கள் என அர்த்தம். பெரும்பாலும் செய்கூலி, சேதாரத்தில் ஒரு சதவிகிதம் அதிகம் வைத்து விற்றாலும், அதில் கிடைக்கும் கூடுதல் தொகையால் அவர்கள் அறிவித்த விலைக்குறைப்பை ஈடுசெய்துவிடலாம். பொதுமக்களும் பவுனுக்கு எவ்வளவு குறைவாகத் தருகிறார்கள் என்பதை மட்டும் கவனத்தில் வைத்துக்கொண்டு செய்கூலி குறித்து கவனிக்க மறந்துவிடுவார்கள். 

அட்சய திருதியைக்குத் தங்கம்தான் வாங்க வேண்டும் என்றில்லை. வாட்ஸ் அப் ஃபார்வேர்டில் வருவதுபோல தண்ணீர் கஷ்டமுள்ள இன்றைய சூழலில், ஒரு குடம் தண்ணீரைப் பிடித்து வைத்து சாமி கும்பிடலாம் அல்லது சமையல் உப்பை ஒரு தட்டில் வைத்து சாமி கும்பிடலாம். சமையல் உப்பு லட்சுமிகரமான பொருள் என்பதால், இந்த வழிபாட்டுமுறை நல்ல பலன் கொடுக்கும். அதேபோல தயிர்சாதம் செய்து சிலருக்கு அன்னதானம் செய்யலாம். தானத்தில் சிறந்தது அன்னதானமல்லவா?" என்றார்.

இவரது கருத்துப்படி, அதிர்ஷ்டத்துக்காக மிகச்சிறிய அளவில் தங்கம் வாங்கிக்கொண்டால் லாபமில்லாவிட்டாலும் பெரிய நஷ்டமில்லாமல் தப்பலாம்.


டிரெண்டிங் @ விகடன்