வெளியிடப்பட்ட நேரம்: 17:57 (18/04/2018)

கடைசி தொடர்பு:12:28 (07/05/2018)

ரூபி, மரகதம் பதித்த நகை வாங்கும் முன் இதையெல்லாம் கவனியுங்கள்! #AkshayaTritiya

நீங்கள் வாங்கும் கல் நகை ,ஆபரணம் மற்றும் கல்லுக்கும் சேர்த்தே விலை நிர்ணயம் செய்யப்படும்.கற்களுக்கு தர நிர்ணயம் இல்லாததால் மோசடிகள் அதிகரித்துவிட்டன.

ரூபி, மரகதம் பதித்த நகை வாங்கும் முன் இதையெல்லாம் கவனியுங்கள்! #AkshayaTritiya

திருமணங்கள், உறவினர் வீட்டு விஷேசம் போன்ற இன்ன பிற விழாக்களின்போது நகை அணிதல் என்பது தொன்றுதொட்டு தொடரும் பாரம்பர்ய வழக்கமாகிவிட்டது. அதுவும் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என்று விஷேசங்களுக்கு ஏற்ப ஆபரணங்கள் பல ரகங்களில் அணிவகுக்க ஆரம்பித்துவிட்டது.

ஆசைக்காக நகை வாங்குதல் என்பதைவிட, பின்னாளில் உதவும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் தங்கத்தில் முதலீடு செய்யும் மிடில் கிளாஸ் மக்கள் மிக அதிகம். அப்படி வாங்கப்படும் நகைகளில் நாம் எப்படிப்பட்டவற்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் தண்டபாணி.

 '' பெரும்பாலான குடும்பங்களில் பெண் குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும்போதே அவர்களுக்கான நகைகளை மாதம்/வருடம் ஒன்று என்கிற கணக்கில் வாங்கிச் சேமிப்பவர்கள் இருக்கிறார்கள். அப்படி தொலைநோக்கு பார்வையுடன் முன்னெச்சரிக்கையாக நீங்கள் வாங்கும் நகைகள் உங்கள் மகள் உரிய வயதுக்கு வரும்போது அவுட் ஆஃப் பேஷன் ஆகியிருக்கும். அதே போல், நகை வாங்கும்போது செய்கூலி, சேதாரம் என்று எக்கச்சக்க தொகையுடன் கொடுத்து வாங்கப்படும் நகைகள் விற்கப்படுபோது, அதையெல்லாம் கழித்துவிட்டே கணக்கெடுப்பார்கள். நீங்கள் வாங்கியதைவிட மிகக் குறைவான விலைக்கே அவை எடுத்துக்கொள்ளப்படும் என்பதுதான் மார்கெட் நிதர்சனம்.

எனவே தொலைநோக்கு பார்வையுடன் நகை சேமிப்பதை விடுத்து, தங்கக் காசுகள், கட்டிகளாக வாங்கி வையுங்கள். அதே போல, ஆடம்பரத்துக்காகவோ ஆசைக்காகவோ கல் ஆபரணங்கள் வாங்கி வைத்துக்கொள்ளலாம். ஆனால், பிற்காலத்தில் அதன் மூலம் வருமானத்தை எதிர்பார்ப்பது சிறந்த யுக்தி அல்ல.ஏன் என்பதை தெரிந்து கொள்ள முதலில் என்ன மாதிரியான கல் நகைகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

 வைரம்  ( Diamond)

வைடூரியம் ( Cat's eye)

முத்து ( Pearl)

மாணிக்கம் ( Ruby)

மரகதம் ( Emerald)

பவளம் ( Coral)

புட்பராகம் ( Topaz)

கோமேதகம்( Garnet)

நீலம் ( Sapphire)

இதில் வைரம் மட்டும் பெண்களால் விரும்பி வாங்கப்படுகிறது. மற்ற கல் நகை வாங்கும் பெரும்பாலானோர் ஜோதிடக்காரர்கள் சொல்வதைக்கேட்டுத் தான் கல் நகை வாங்க வருகிறார்களே தவிர விரும்பி யாரும் வாங்க வருவதில்லை.

கல் நகை வியாபாரம் :

கல் நகை வியாபாரத்தைப் பொறுத்த வரை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 

லோக்கல் பட்டறைகளில் செய்யப்படுகிற கெட்டிக் கல் வளையல், கெட்டிக்கல் நெக்லஸ் போன்றவை.

அடுத்தது ஃபேஷனுக்காக அங்கங்கே பேஷன் கற்கள் வைத்துச் செய்யப்படுகிற லைட் வெயிட் ஆபரணங்கள்.

மூன்றாவது நெல்லூர், வாணியம்பாடி, ஆம்பூர், திருச்சி மாதிரியான இடங்களில் உற்பத்தியாகிற நகைகள் 

இதில் நீங்கள் எந்த வகை வாங்கினாலும் நஷ்டம் ஏற்படத்தான் செய்யும்.லோக்கல் பட்டறைகளில் செய்யப்படும் நகைகளில் எடையை அதிகரித்துக்காட்ட சில சமயங்களில் அதில் அரக்கு வைக்கிறார்கள். பேஷன் கல் ஆபரணங்களை பொறுத்தவரை லைட் வெயிட்டாக இருந்தாலும் அதன் வகைக்கு ஏற்ப அதற்கும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். நெல்லூர், வாணியம்பாடி போன்ற இடங்களில் இருந்து வாங்கி விற்கப்படும் கல் நகைகளில், கல்லின் எடையே 40 சதவீதம் இருக்கும். இதனால் உங்களின் ஆபரணத்தை விடக் கல்லுக்கு அதிக செலவு செய்ய வேண்டியதிருக்கும்.

நீங்கள் வாங்கும் கல் ஆபரணங்களில்,ஆபரணம் மற்றும் கல்லுக்கும் சேர்த்தே விலை நிர்ணயம் செய்யப்படும். ஆபரணங்கள் வாங்கிய மறுநாளோ அல்லது ஆறுமாதமோ பல வருடம் கழித்தோ அந்த நகைகளை விற்க நினைத்தால், கற்களின் எடை கழிக்கப்பட்டு, ஆபரணத்தின்  எடையே எடுத்துக்கொள்ளப்படும். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு மாணிக்க மோதிரம் வாங்குகிறீர்கள் எனில், மாணிக்கக் கல்லின் மதிப்பு  ரூபாய் 6000 இல் இருந்து பொருளின் தரத்துக்கேற்ப விலை மாறுபடும். அதே மோதிரத்தையோ அல்லது நகையையோ திரும்ப கொடுக்கும்போது 10 ரூபாய்க்குக்கூட அந்த மாணிக்கக் கல்லை வாங்கமாட்டார்கள். மேலும் அந்த மாணிக்க கல்லை வாங்கும் போது அதன் எடைக்கும் விலை கொடுத்திருப்பீர்கள். கூட்டி கழித்துப் பார்த்தால் கல் நகை வாங்கி விற்க நினைத்தால் நஷ்டம் உங்களுக்கே என்பது புரியும். மேலும், தங்க ஆபரணங்களுக்கு அதன் தரத்துக்கேற்ப முத்திரைகள் வந்துவிட்டன. அந்த முத்திரையுடன் கூடிய நகைகளை எந்தக் கடையில் கொடுத்தாலும் அன்றைய விலைக்கு எடுத்துக்கொள்வார்கள். ஆனால் கற்களுக்கு தர நிர்ணயம் இல்லாததால் மோசடிகள் அதிகரித்துவிட்டன.

 சில கடைகளில் பவளக்கல் இலவசம், முத்து இலவசம், வாங்கும் தங்கத்திற்கு மட்டும் விலை கொடுத்தால் போதும் என்பார்கள். இதன் பின்னணியிலும் வணிகர்களுக்கான லாபம்தான் இருக்கிறது.அவர்கள் கல்லுக்கு விலை வைக்கவில்லை என்றாலும் அவை தங்கத்தில் பொருத்தப்பட்டு ஒட்டுமொத்த எடை குறிக்கப்படும். அதைவைத்தே விலையும் நிர்ணயிக்கப்படும்.

எனவே ஆசைக்காகக் கல் ஆபரணங்கள் வாங்குங்கள். ஆனால், அவற்றைப் பொருளாதார ரீதியாக உபயோகப்படுத்தப்போகிறீர்கள் என்றால் நிச்சயம் வேண்டாம் என்றே சொல்வேன். அப்படிக் கல் நகைகள்தான் அணிய வேண்டும் என்றால் இமிட்டேஷன் நகைகளை வாங்கி அணிந்து உங்கள் பணத்தை சேமியுங்கள்'' என்றார் தண்டபாணி.


டிரெண்டிங் @ விகடன்