`பெண்களை சக மனுஷியாகப் பாருங்கள்' - ஹெச்.ராஜாவை மறைமுகமாகச் சாடும் வானதி சீனிவாசன்

"பெண்களை வெறும் போகப்பொருளாக, ஒரு நுகர்வுப் பண்டமாக அல்லாமல் சக மனுஷியாய், தோழியாகப் பாருங்கள்" என்று ஹெச்.ராஜாவை மறைமுகமாகச் சாடியுள்ளார் வானதி சீனிவாசன்.

வானதி சீனிவாசன்

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹச்.ராஜா அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். வைரமுத்துவுக்கு எதிராகப் பேசியது, பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று  பேசியது என அவர் கூறிய கருத்துகள் தமிழகத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனால், பெரியார் குறித்து தனக்குத் தெரியாமலே அட்மின் தவறான கருத்து பதிவிட்டார் எனக் கூறி அவர் தப்பித்தார். இந்நிலையில், நேற்று  செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஆளுநரிடம் சரமாரியாகக் கேள்விகளைத் தொடுத்தனர் செய்தியாளர்கள். இதற்கு ஆளுநர் அதிருப்தி தெரிவித்த நிலையில், ஹெச்.ராஜா இதை, தி.மு.க தலைவர் கருணாநிதியைத் தொடர்புபடுத்தி கருத்து தெரிவித்திருந்தார். மேலும், கருணாநிதி மற்றும் அவரின் குடும்பத்தினர் குறித்து தரக்குறைவான கருத்துகளைப் பதிவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இந்தக் கருத்துக்கு மறைமுகமாகக் கண்டனம் தெரிவித்துள்ளார் பா.ஜ.க தமிழக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``பெண்கள் அரசியலில், பொது வாழ்வில் வந்தாலே அவர்களை மலினப்படுத்தியும் கீழ்த்தரமாக விமர்சித்தும் அவர்களின் உடல்நிலை, முக அமைப்பு இவற்றைப் பற்றி நாகரிகமற்ற முறையிலும் ஆபாசமாகச் சித்திரிக்கும் போக்கு கவலைக்குரிய வகையில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தக் கீழ்மைக்கு அவர்களின் தகுதி, பதவி, கல்வி அறிவு இது ஒன்றும் தடையில்லை. பெண்களை வெறும் போகப்பொருளாக, ஒரு நுகர்வுப் பண்டமாக அல்லாமல் சக மனுஷியாக, தாயாக, மகளாக, சகோதரியாக, தோழியாகப் பாருங்கள்" என்று கூறியுள்ளார். இது பா.ஜ.க தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!