சாக்குமூட்டையுடன் வீசப்பட்ட நர்ஸின் உடல்! கம்மலுக்காகச் சென்னையில் நடந்த கொடூரக் கொலை

கொலைசெய்யப்பட்ட நர்ஸ்


சென்னையில் தங்கக் கம்மலுக்காக நர்ஸைக் கொன்று சாக்குமூட்டையில் அடைத்து கோயம்பேட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விருதாசலத்தைச் சேர்ந்தவர் வேல்விழி. இவர், சென்னையில் நர்ஸாகப் பணியாற்றினார். இதற்காக சென்னை சூளைமேடு, வீரபாண்டி நகரில் குடியிருந்து வந்தார். தினமும் வீட்டுக்குப் போனில் பேசும் வேல்விழி, கடந்த 6-ம் தேதிக்குப் பிறகுப் பேசவில்லை. இதனால், வேல்விழி குடும்பத்தினர் அவர் குறித்து விசாரித்தனர். ஆனால், உருப்படியாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால் வேல்விழியின் உறவினர்கள் அவரைத் தேடி சென்னை வந்தனர். அவருடன் தங்கியிருந்த நர்ஸ்களிடம், வேலைபார்த்த அலுவலகத்திலும் விசாரித்தனர். ஆனால், அவர் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சூளைமேடு போலீஸில் மகளைக் காணவில்லை என்று வேல்விழியின் அம்மா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "வேல்விழி மாயமானது குறித்த புகாரின் அடிப்படையில் அவரைத் தேடினோம். அவரது செல்போனில் கடைசியாகப் பேசியவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்தோம். அதோடு, அவர் தங்கியிருந்த இடத்தில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தோம். வீடுகளுக்குச் சென்று நர்ஸிங் வேலை செய்துள்ளார் வேல்விழி. இவர் வேலைபார்க்கும் அலுவலகத்தின் தலைமையிடம் விருகம்பாக்கத்தில் உள்ளது. அவர் வேலைபார்க்கும் அலுவலகம்தான் சூளைமேட்டில் அறை எடுத்து வேல்விழியைத் தங்கவைத்துள்ளது. அவருடன் இன்னும் மூன்று நர்ஸ்கள் ஓர் அறையில் தங்கியிருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது முக்கியத் தகவல்கள் கிடைத்தன.

சம்பவத்தன்று வேல்விழி மட்டும் அறையில் தனியாக இருந்துள்ளார். வேல்விழியுடன் நர்ஸாகப் பணியாற்றும் மகாலட்சுமியின் கணவர் அஜித்குமார்தான் கடைசியாக வேல்விழியைச் சந்தித்தத் தகவல் கிடைத்தது. இதனால் அஜித்குமாரிடம் விசாரித்தோம். எங்களது கிடுக்குப்பிடி விசாரணையில் வேல்வழியைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, வேல்விழியின் உடல் குறித்து அவரிடம் விசாரித்தோம். அதற்கு, கோயம்பேடு காய்கறி மார்க்கெட் அருகில் சாக்குமூட்டையில் வேல்விழியின் உடலை மறைத்து வைத்திருப்பதாக அஜித்குமார் தெரிவித்தார். உடனே அவரை அழைத்துக்கொண்டு சென்றோம். அங்கு, சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் வேல்விழியின் உடல் இருந்தது. அதைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்" என்றனர். 

 கொலை

வேல்விழியைக் கொலை செய்ததற்கான காரணத்தைப் போலீஸாரிடம் அஜித்குமார் தெரிவித்தபோது ஒட்டுமொத்த போலீஸ் டீமே அதிர்ச்சியடைந்துள்ளது. மகாலட்சுமியும் அஜித்குமாரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார் அஜித்குமார். இவரது சொந்தஊர் கேரள மாநிலம் பாலக்காடு. அங்கு வேலைக்குச் செல்வதாக அஜித்குமார் சென்றுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு பந்தாவாகச் சென்னை வந்துள்ளார். மகாலட்சுமியும் அஜித்குமாரும் வேல்வழி தங்கியிருந்த அறையின் மாடியில் குடியிருந்தனர். இதனால் அஜித்குமாருக்கும் வேல்விழிக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் அஜித்குமார், வேலைக்குச் செல்வதாக மனைவியிடம் கூறி, மாதந்தோறும் சம்பளமாக குறிப்பிட்ட தொகையைக் கொடுத்துள்ளார். உண்மையில் அவர் வேலைக்கு எங்கும் செல்லவில்லை. சம்பள பணத்துக்காகத் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி மனைவியை ஏமாற்றி வந்துள்ளார்.

கடந்த சில மாதங்கள் சம்பளத்தைக் கொடுத்த அஜித்குமாருக்கு இந்த மாதம் சம்பளப் பணத்துக்கு யாரும் கடன் கொடுக்கவில்லை. மேலும், வீட்டிலும் வறுமை வாட்டியுள்ளது. இதனால் சாப்பிடக்கூட வழியில்லாமல் அஜித்குமார் தவித்துள்ளார். இதனால்தான் வேல்விழியிடம் தங்கக் கம்மலை அடகு வைக்க கேட்டுள்ளார். ஆனால், அவர் அதைக்கொடுக்கவில்லை. இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த அஜித்குமார், வேல்விழியின் துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

பிறகு அவரது உடலை மறைக்க அருகில் உள்ள மளிகைக் கடையிலிருந்து சாக்கை வாங்கி வந்துள்ளார். அதில், வேல்விழியின் உடலை அடைத்த அஜித்குமார் ஆட்டோ மூலம் கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்குக் கொண்டு சென்றார். அங்குள்ள குழாய் ஒன்றில் சாக்குமூட்டையை மறைத்து வைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். வேல்விழியைப் போலீஸார் தேடியபோதும் அஜித்குமாரிடம் விசாரித்தபோதும் ஒன்றுமே தெரியாததுபோல நாடகமாடியுள்ளார். ஆனால், வேல்விழியின் தங்கக் கம்மலை கொள்ளையடித்த அஜித்குமார், அதை விற்றுள்ளார். அதையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். சக நர்ஸ்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அஜித்குமார் போலீஸாரிடம் சிக்கியுள்ளார். வேல்விழியின் உடலைப் பார்த்து அவரின் பெற்றோர், உறவினர்கள், நர்ஸ்கள் கதறியழுதனர். 

 தங்கக் கம்மலுக்காகச் சென்னையில் நர்ஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!